தொடர்ந்து பெய்து வரும் மழையால் சென்னை புறநகர் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது. வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் உறவினர் வீடுகளில் பொதுமக்கள் தஞ்சம் அடைந்தனர். மேலும் பாம்புகள், அட்டை பூச்சிகள் நடமாட்டத்தாலும் அச்சம் அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனது. இதன் விளைவாக ஏரிகள் வறண்டன. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து, தலைநகர் சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை உருவானது. இதனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையை மக்கள் பெரிதும் நம்பி இருந்தனர்.
அவர்களின் நம்பிக்கையை கெடுக்காத வகையில் மழையும் பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
அந்தவகையில் சென்னை நகர் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. அதேபோல முடிச்சூர், தாம்பரம், மடிப்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, ஆலந்தூர், நங்கநல்லூர், துரைப்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டித்தீர்த்தது.
தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மடிப்பாக்கம் ராம்நகரில் வீடுகளை சூழ்ந்து குளம்போல் மழைநீர் தேங்கி கிடக்கிறது. விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த முடியாமல் பரிதவிக்கும் மக்கள், மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. இடுப்பளவு தேங்கிய நீரை கடந்தே மக்கள் எங்கும் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.
சிட்லபாக்கம் நேதாஜி நகரிலும் மழைநீர் பிரச்சினையில் குடியிருப்புவாசிகள் பரிதவிக்கிறார்கள். குளம்போல தேங்கியுள்ள மழைநீரில் சிறுவர்-சிறுமிகள் ஆட்டம் போட்டு வருகிறார்கள். மழைநீர் சூழ்ந்ததால் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து உறவினர் வீடுகளுக்கு இடம்பெயர்ந்து விட்டனர்.
Add new comment