வென்டேஜ் எப்ஏ கிண்ண உதைபந்து தொடர்; 32 அணிகள் விபரம் வெளியீடு | தினகரன்


வென்டேஜ் எப்ஏ கிண்ண உதைபந்து தொடர்; 32 அணிகள் விபரம் வெளியீடு

இறுதிப் போட்டி ஜனவரி 24ஆம் திகதி கொழும்பில்

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில், எபோனி ஹோலிடிங்ஸ் தனியார் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெற்றுவரும் வென்டேஜ் எப்ஏ கிண்ண உதைபந்து தொடரின் 32 அணிகள் சுற்றில் மோதும் அணிகளின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுக்கான அணிகளை தெரிவு செய்யும் குலுக்கல் நிகழ்வு கடந்த (29) இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் உட்பட அதன் அதிகாரிகள், எபோனி ஹோல்டிங்ஸ் நிறுவன அதிகாரிகள் மற்றும் இலங்கையின் முன்னணி கால்பந்து கழக அணிகளின் அங்கத்தவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

கடந்த மார்ச் மாதம் ஆரம்பமாகிய இந்த வருடத்திற்கான வென்டேஜ் எப்ஏ கிண்ண தொடரின் ஆரம்ப கட்டமான லீக் மட்ட போட்டிகளும் அடுத்த கட்டமான மாவட்ட மட்டப் போட்டிகளும் நிறைவு பெற்றுள்ளன. எனினும், 64 அணிகள் சுற்று இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையிலேயே, தற்போது 32 அணிகள் சுற்றுக்கான குலுக்கல் இடம்பெற்றுள்ளது.

மாவட்ட மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள், கடந்த முறை வென்டேஜ் எப்ஏகிண்ண தொடரில் இறுதி 32 அணிகள் சுற்றுக்கு முன்னேறிய அணிகளுடன் மோதும் விதத்தில் இம்முறை 64 அணிகளுக்கான சுற்றுப் போட்டிகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன.

64 அணிகள் சுற்றில் மீதமுள்ள போட்டிகள் இம்மாதம் 30ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 15ஆம் திகதிவரை நடைபெறும். அதேபோன்று, 32 அணிகள் சுற்றுக்கான போட்டிகள் டிசம்பர் 7ஆம் திகதி முதல் டிசம்பர் 22ஆம் திகதிவரை இடம்பெறும்.

தொடரின் காலிறுதிக்கு முன்னைய சுற்றுக்கான போட்டிகள் அனைத்தும் ஜனவரி மாதம் 4ஆம், 5ஆம் திகதிகளிலும், காலிறுதிச் சுற்றுப் போட்டிகள் ஜனவரி மாதம் 11ஆம், 12ஆம் திகதிகளிலும் இடம்பெறும் அதேவேளை, அரையிறுதிப் போட்டிகள் ஜனவரி மாதம் 18ஆம், 19ஆம் திகதிகளில் இடம்பெறும். அரையிறுதி வரையிலான அனைத்து சுற்றுக்களுக்கும் குலுக்கல் இடம்பெறும் என இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த தொடரின் இறுதிப் போட்டி ஜனவரி மாதம் 24ஆம் திகதி இடம்பெறும்.

ஏ.ஆர் பரீத்


Add new comment

Or log in with...