இலங்கையின் மூத்த சகோதரன் இந்தியா | தினகரன்


இலங்கையின் மூத்த சகோதரன் இந்தியா

இலங்கை வெளியுறவுக் கொள்கையின் புதிய நோக்ைக உலகுக்கு வெளிப்படுத்திய, ஜனாதிபதி கோட்டாபயவின் இந்திய விஜயம்

இரு நாடுகளினதும் தொன்மைமிகு நெருக்கமான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதில் இரு தலைவர்களும் காண்பித்த விசேட அக்கறை

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே வரலாற்று காலம் முதல் கட்டியெழுப்பப்பட்டுள்ள தொடர்புகளை மென்மேலும் மேம்படுத்திய அரசமுறைப் பயணமாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்திய விஜயம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. அத்துடன் இவ்விரு நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வைப்பதற்கான முன்னோடி விஜயமாகவும் இது அமைந்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசத்தினைத் தடுப்பதற்காக எதிர்த்தரப்புக்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்த அதேவேளை, அதன் ஓரு உபாயமாக அவரது குடியுரிமை பற்றிய மிக மோசமான, முறையற்ற பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. கோட்டாபய ராஜபக்ஷ மீது இந்தியாவிற்கு வெறுப்பினை ஏற்படுத்துவதே அதன் மறைமுக நோக்கமாக அமைந்தது. ஆயினும் அதன் விளைவு அவ்வாறானதாக அமையவில்லை. உண்மையே இறுதியில் வெற்றி பெறும். அதற்கமைய அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் முதலாவது அரசமுறை விஜயமொன்றினை மேற்கொள்வதற்கான அழைப்பு பாரத தேசத்திலிருந்தே கிடைக்கப் பெற்றது. உண்மையிலேயே அதனை தேசத் துரோக முகாமின் ஒரு பாரிய தோல்வியாகவே நாம் காண்கின்றோம்.

இலங்கையின் சமூக, கலாசார, அரசியல் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் இந்தியாவின் தாக்கங்கள் காணப்படுவதனை எம்மால் மறுக்க முடியாது. சுயாதீனமான இறைமைமிக்க இரு தேசங்கள் என்ற வகையில் அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியில் இரு நாடுகளுக்குமிடையே காலத்திற்குக் காலம் ஏதேனும் நிகழ்வுகளைக் காரணமாகக் கொண்டு இடைவெளிகள் ஏற்பட்ட போதிலும், எம் இரு நாடுகளின் சகோதரப் பிணைப்பு மிகவும் உறுதியாகவே காணப்படுகின்றது. இதனாலேயே அரசியல் சமூக ஆய்வாளர்கள் 'இலங்கையின் மூத்த சகோதரன்' என இந்தியாவை குறிப்பிடுவது வழக்கமாகக் காணப்படுகின்றது.

ராஜபக்ஷ ஆட்சிக் காலங்களில் இலங்கை மீது இந்தியாவிற்கு வெறுப்பினை ஏற்படுத்துவதற்கு சந்தர்ப்பவாத அரசியல் சக்திகளும், சில அரச சார்பற்ற நிறுவனங்களும் பெரும் முயற்சிகளில் ஈடுபட்டமை எமக்கு ஞாபகமிருக்கின்றது. ஆயினும் அவ்வனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர்கள் தோல்வி அடைந்ததோடு, நாடு வெற்றி பெற்றது. கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலமும் இந்த யதார்த்தத்தினையே எடுத்துக் காட்டுகின்றது.

கோட்டாபய ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போது இந்திய அரசாங்கமும் மக்களும் வெளிப்படுத்திய அன்பும் கௌரவமும் மகத்தானவை. இந்திரா காந்தி விமான நிலையத்தில் இலங்கை அரச தலைவரின் அபிமானமும் ஆளுமையும் எடுத்துக்காட்டத்தக்க வகையில் வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திய பொதுப் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கலாநிதி வி.கே.சிங் உள்ளிட்ட குழுவினரால் கோட்டாபய ராஜபக்ஷ வெகு விமரிசையாக வரவேற்கப்பட்டார்.

இதன் போது இந்திய பாராம்பரிய கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இலங்கை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயத்தின் இரண்டாம் நாளான 29ஆம் திகதி இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கிடையிலான சந்திப்பு புதுடில்லி நகரில் இடம்பெற்றது. அயல் நாடு என்ற வகையில் இலங்கை நீண்டகால குறிக்கோளுடன் முன்னோக்கிச் செல்வதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இலங்கை ஜனாதிபதியிடம் நம்பிக்கை தெரிவித்தார்.

பொருளாதார ஒத்துழைப்புகளை நோக்காகக் கொண்ட பரஸ்பர நன்மைகளைப் பெறக் கூடிய புதிய அணுகுமுறைகளினூடாக இலங்கை_ - இந்திய உறவுகளை முன்னெடுத்துச் செல்லுதல் இந்திய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகுமென இதன் போது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி கோட்டாபயவிடம் தெரிவித்தார்.

மேலும் இரு நாடுகளினதும் வர்த்தகத் தொடர்புகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்ட இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், தரமான உயர் நிர்வாக முறைமை காணப்படுதல், வெளிநாட்டு முதலீடுகளை இலகுவில் பெற்றுக் கொள்வதற்கு வழி சமைக்கும் பிரதான காரணியாகுமெனத் தெரிவித்தார்.

அன்றைய தினம் மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கான விசேட விருந்துபசார நிகழ்வு ராஸ்டிரபதி பவனில் இடம்பெற்றது. இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடனான சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி இதில் கலந்து கொண்டார்.

அரச தலைவர்களுக்கு வழங்கப்படும் உயர் கௌரவத்தினை வழங்கி இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் இலங்கை ஜனாதிபதியை வரவேற்பதற்கு இந்திய ஜனாதிபதியினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவிற்கு வருகை தந்தமையை இந்திய ஜனாதிபதி பெரிதும் பாராட்டியதுடன், இந்த முன்னுரிமை தெற்காசிய வலயத்தின் எதிர்கால பயணத்திற்கும் ஒத்துழைப்பிற்கும் சக்தியாக அமையுமென தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.

வரலாற்றுக் காலம் முதல் இரு நாடுகளுக்குமிடையே நிலவி வரும் நட்புறவினை மேலும் பலப்படுத்தும் வகையில் தமது அரசாங்கம் செயற்படுமென இந்திய ஜனாதிபதியிடம் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இரு நாட்டு மக்களினதும் வாழ்க்கையை சுபீட்சமாக்குவதற்கான உயர் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடினர். இந்திய அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரமுகர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் மிக முக்கியமான நிகழ்வாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு 29ஆம் திகதி நண்பகல் ஐதராபாத் மாளிகையில் இடம்பெற்றது. இந்தியப் பிரதமரால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

அரச தலைவர்கள் இருவருக்குமிடையிலான சந்திப்பு சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரை நீடித்தது.

இதன் போது இந்தியப் பிரதமரினால் ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பில் ஜனாதிபதி தனது நன்றிகளைத் தெரிவித்ததுடன், ஜனாதிபதித் தேர்தல் மேடையில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் காணப்பட்ட ஒழுக்கம் ஒட்டுமொத்த உலக அரசியலுக்கும் முன்னூதாரணமாகும் எனவும் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்திற்கு இந்திய அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்பினை பெற்றுத் தருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான விசேட இலகு கடன் திட்டத்தின் கீழ் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை அதாவது ரூபா 68,000 மில்லியன்களை இலங்கைக்கு வழங்குவதற்கு இலங்கை அரச தலைவரிடம் இந்தியப் பிரதமர் இணக்கம் தெரிவித்தார். அது இலங்கையின் பொருளாதாரத்தை நம்பிக்கைக்குரியதாக கட்டியெழுப்புவதற்காக அயல் நாடு என்ற வகையில் இந்தியாவின் நீண்ட கால சகோதரத்துவத்தினை எடுத்துக்காட்டிய விசேட சந்தர்ப்பமாகும்.

அத்தோடு நாடு எதிர்நோக்கியிருக்கும் தேசிய பாதுகாப்பு பற்றிய பிரச்சினை தொடர்பாகவும் இரு நாட்டு தலைவர்களுக்குமிடையே விசேட கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. நீண்ட கலந்துரையாடலின் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பை இலக்காகக் கொண்ட வேலைத் திட்டத்திற்கு மேலும் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கும் இந்தியப் பிரதமர் தீர்மானித்தார்.

நீண்ட காலமாக நிலவிவரும் இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் இரு நாடுகளும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்படுகின்றமை தொடர்பாக அரச தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்ததோடு, தற்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்தார்.

அயல் நாடு என்ற வகையில் தமது நாட்டின் மீது இந்தியா கொண்டுள்ள அக்கறை இரு நாடுகளினதும் எதிர்காலத்திற்கு நன்மையாக அமையுமெனவும் இரு நாட்டு பாதுகாப்பிற்கும் முன்னுரிமையளித்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் அரச தலைவர்கள் விரிவாக கலந்துரையாடினர்.

இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான நீண்ட கால நட்புறவு, பொருளாதார, அரசியல் மற்றும் சமூகத் தொடர்புகளின் மேம்பாட்டிற்காக பொறுப்புடன் செயற்படவும் அரச தலைவர்கள் இதன் போது உறுதி பூண்டனர்.

அதனைத் தொடர்ந்து இரு நாட்டு அரச தலைவர்கள் ஊடக சந்திப்பொன்றை நடத்தினர். இதன் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்திய அரசாங்கமும் அரச தலைவர்களும் மக்களும் தன் மீது செலுத்திய அன்பிற்கும் அளித்த கௌரவத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

அத்தோடு இந்தியப் பிரதமரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து இந்தியப் பிரதமரினால் வழங்கப்பட்ட விசேட மதிய உணவு விருந்தில் ஜனாதிபதி கலந்து கொண்டதுடன், ஐதராபாத் மாளிகையில் உள்ள நினைவுக் குறிப்பேட்டிலும் ஜனாதிபதி தமது கையெழுத்தினை பதிவு செய்தார்.

ஜனாதிபதி தமது இந்திய விஜயத்தின் போது மகாத்மா காந்தி நினைவிடத்திலும் மலரஞ்சலி செலுத்தினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து உரையாடியதுடன், தூதரக செயற்பாடுகள் தொடர்பான தமது இலக்கினை ஜனாதிபதி அவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

இதன் போது மகாபோதி சங்கத்தின் தலைவர் மற்றும் இந்திய சாஞ்சி சேத்தியகிரி விகாரையின் விகாராதிபதி வண.பானகல உபதிஸ்ஸ தேரர் ஜனாதிபதியைச் சந்தித்து தமது வாழ்த்தினையும் ஆசிர்வாதத்தினையும் தெரிவித்தார். இரு நாடுகளினதும் தனித்துவமான வரலாற்று ரீதியான நட்புறவினை உலகத்தவருக்கு எடுத்துக் காட்டி இந்தியாவிற்கான தனது அரசமுறைப் பயணத்தை நிறைவு செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டிற்கும் வெளிநாட்டு தொடர்புகளுக்கும் மேலுமொரு புதிய பாதையை ஆரம்பித்து வைத்துள்ளார்.

தேசிய கோட்பாடுகள் மற்றும் தனித்துவத்தை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கமைய தமது வெளிநாட்டு விஜயத்தினை நிறைவு செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையரின் மனங்களில் தேசப்பற்று பற்றிய எண்ணக்கருவினை ஆழமாக வேரூன்றச் செய்தே பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கினார்.


Add new comment

Or log in with...