இருநாள் மாபெரும் விவசாயக் கண்காட்சி | தினகரன்


இருநாள் மாபெரும் விவசாயக் கண்காட்சி

கிழக்கின் எழுச்சி

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் இவ்வருடத்திற்கான கிழக்கின் எழுச்சி(RISE OF THE EAST) இரு நாள் விவசாயக் கண்காட்சி கடந்த மாதம் 29ம், 30ம் திகதிகளில் நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

இக்கண்காட்சி வருடாவருடம் கிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்டு வருகிறது. இம்முறை இக்கண்காட்சி அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சி அம்பாறை மாவட்டத்தில் உள்ள உகன மத்திய மகாவித்தியாலய வளாகத்தில் நடைபெற்றது.

மழை காலமாதலால் எதிர்பார்த்தஅளவிற்கு இக்கண்காட்சி சோபிக்கவில்லை. பலர் இப்பாரிய கண்காட்சியை பார்வையிட வேண்டுமென எண்ணம் கொண்டிருந்த போதும் அடைமழை அதற்கு இடம்கொடுக்கவில்லை.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழுள்ள நீர்ப்பாசனம், மீன்பிடி, விவசாயம், மிருக பரிபாலனம், கூட்டுறவுஅபிவிருத்தி, உணவு உற்பத்தி, விநியோகம் ஆகிய திணைக்களங்களின் கண்காட்சிக் கூடங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

வெள்ளியன்று இக்கண்காட்சியை விவசாயஅமைச்சின் செயலாளர் க.சிவநாதன் தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் அசங்க அபேவர்த்தன அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். முதலமைச்சின் செயலாளர் யு.எல்.எ.அசீஸ் மற்றும் மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், உயரதிகாரிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எ.எச்.ஹூசைன் உள்ளிட்ட விவசாயத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். கிழக்கு கல்வியமைச்சின் செயலாளர் ஜ.கே.ஜி.முத்துபண்டா, மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

முதல் நாள் விழாவில் சிறந்த விவசாயிகளாகத் தெரிவு செய்யப்பட்டோருக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. மேற்கூறப்பட்ட அத்தனை திணைக்களங்களின் காட்சிக் கூடங்களில் பலநூறு காட்சிப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நவீன விவசாய செய்முறைகள் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மாதிரித் துண்டங்கள், காளான் வளர்ப்பு, மிருக வளர்ப்பு, பறவை வளர்ப்பு போன்றவற்றின் நவீன முறைமைகள் காட்சிப்படுத்தப்பட்டன.இரண்டாம் நாள் நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எலுபண்டாரநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

மழை காரணமாக மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் மட்டுமே கண்காட்சியைப் பார்வையிட்டனர். மழை பெய்யாமல் விட்டிருப்பின் மேலும் ஏராளமானோர் அப்பாரிய கண்காட்சியைக் கண்டு பயனடைந்திருப்பர்.

இனிவரும் காலங்களில் மாரி காலத்திற்கு முன்பதாக இக்கண்காட்சியை நடத்த சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வர வேண்டும் என்பது பலரதும் கோரிக்கையாகும்.

 


Add new comment

Or log in with...