19 ஆவது திருத்தம்; மாற்றுவது பற்றி அரசுடன் பேசத் தயார் | தினகரன்


19 ஆவது திருத்தம்; மாற்றுவது பற்றி அரசுடன் பேசத் தயார்

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மாற்றுவது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.தே.க தயாராக இருப்பதாக முன்னாள் சபை முதல்வர் லக்‌ஷ்மன் கிரியெல்ல எம்.பி தெரிவித்தார். அதனை முற்றாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது எனவும் எனினும் அதிலுள்ள பிரிவுகளை இணைந்து திருத்தம் செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கட்சித் தலைமையகத்தில்  நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் 19 ஆவது திருத்தத்தை நீக்குவதாக ஜனாதிபதி இந்தியாவில் கூறியிருந்தார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,

19 ஆவது திருத்தத்தின் காரணமாக நாட்டை ஆட்சி செய்வது கடினமாக இருப்பதாக தற்போதைய அரசாங்கம் கூறியுள்ளது. இந்த சட்டத்தை நாம் தனியாக கொண்டுவரவில்லை.

முழுநாள் விவாதம் நடத்தி ஒவ்வொரு சரத்தாக ஆராய்ந்தே இதனை நிறைவேற்றினோம்.

இதனூடாக அரச நிறுவனங்கள் சுயாதீனமாக செயற்பட வாய்ப்பளிக்கப்பட்டது. அரசியல் தலையீடுகள் இன்றி அவை செயற்பட்டன.

19 ஆவது திருத்தத்தை ரத்து செய்ய ஆதரவு வழங்குவதாக எமக்கு ஒரேயடியாக கூறிவிட முடியாது. பேச்சுவார்த்தை நடத்தி சில சரத்துகளை நீக்க நாம் தயார். கட்சி ரீதியில் பேசி முடிவெடுத்த பின்னர் அரசாங்கத்துடன் பேச முடியும் என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ராஜித சேனரத்ன எம்.பி,

ஜனநாயகத்தை நிலைநாட்ட எமது அரசாங்கம் பெரும் பங்காற்றியது.எவருக்கும் சுதந்திரமாக கருத்துக் கூற இடமளிக்கப்பட்டது.ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டது. புதிய ஜனாதிபதியின் எளிமையான போக்கு குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். அவர் எளிமையாக உடை அணிவது வௌிநாட்டிற்கு குறைந்தளவு அதிகாரிகளுடன் செல்வது குறைந்தளவு வாகனங்களை பயன்படுத்துவது என்பவற்றை வரவேற்கிறோம்.

19 ஆவது திருத்தத்தை தொடர்ந்து முன்னெடுக்குமாறு அவரிடம் கோருகிறோம். எமது அரசில் காணப்பட்ட குறைபாடுகளை சரிசெய்து முன்னோக்கி செல்வதை வரவேற்கிறோம் என்றும் கூறினார்.

எரான் விக்ரமரத்ன எம்.பி கூறுகையில்,

அரசாங்கம் பல வரிச்சலுகைகளை வழங்கியுள்ளது. அதே போல் கடனையும் அடைக்கும் விதம் பற்றி மக்களுக்கு அறிவூட்ட வேண்டும்.

கடன் தவணை மற்றும் வட்டியாக 1620 பில்லியன் செலுத்த வேண்டியுள்ளது என்றார்.(பா)


Add new comment

Or log in with...