வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்காளரின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயம் | தினகரன்


வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்காளரின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயம்

ஜனாதிபதி தேர்தலில் வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்காளரின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயமாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

2019ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பதற்கு வாக்காளர்கள் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவது ஒரு கட்டாயத் தேவைப்பாடாகும்.

அதற்கமைய வாக்காளர்கள் வாக்களிக்கும் போது தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான கடவுச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், அராசங்க சேவை ஓய்வூதியர் அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள வண. தேரர் அல்லது மதகுரு அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றைச் சமர்ப்பித்தல் கட்டாயமாகும்.

இருப்பினும், இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளாத மற்றும் மேற்கூறிய எந்தவொரு செல்லுபடியான அடையாள அட்டையும் இல்லாத வாக்களார்களுக்கு குறித்த பிரிவின் கிராம அலுவலர் அல்லது தோட்ட மேலதிகாரி மூலம் தேர்தல் ஆணைக்குழு வெளியிடும் விசேட அடையாள அட்டையொன்றை வழங்குவதற்கு அனைத்து தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விசேட அடையாள அட்டை தேவைப்படும் வாக்காளர்களுக்கு கிராம அலுவலர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், குறித்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அண்மையில் எடுத்த வெள்ளை – கருப்பு அல்லது வர்ண (அகலம் 2.5 செ.மீ. மற்றும் 3.0 செ.மீ) மார்பளவு அளவிலான இரண்டு புகைப்படங்களுடன் தேர்தல் நடைபெறுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னர் அதாவது 2019.11.09ஆம் திகதிக்கு முன்னர் குறித்த பிரிவின் கிராம அலுவலர் அல்லது தோட்ட மேலதிகாரியிடம் கையளிக்க வேண்டும்.

புதிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்கனவே விண்ணப்பங்களைக் கையளித்துள்ள பிரசைகளும் 2019 நவம்பர் 04ஆம் திகதியாகும்போது தமது புதிய அடையாள அட்டைகள் கிடைக்காத பட்சத்தில் இந்த விசேட அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இத்தால் அறிவிக்கப்படுகிறது.


Add new comment

Or log in with...