தூய்மை மிகுந்த நாடு | தினகரன்


தூய்மை மிகுந்த நாடு

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து இருவாரம் கடந்திருக்கும் இவ்வேளையில், நாட்டின் பிரதான நகரங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தூய்மைப் புரட்சியை மக்கள் வியப்புடன் நோக்குகின்றனர்.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றதும் உடனடியாகவே கொழும்பு நகர வீதிகளைத் துப்புரவு செய்தும் பணிகள் துரித கதியில் ஆரம்பமாகி விட்டன. வீதியின் இருமருங்குகளில் அரசியல் தலைவர்களின் கட் அவுட்கள் அகற்றப்பட்டன. அங்குமிங்கும் கண்டபடி ஒட்டப்பட்டிருந்த அரசியல்வாதிகளின் சுவரொட்டிகள் அகற்றப்பட்டன. வீதியோரம் குவிந்து கிடந்த திண்மக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டன.

புகையிரதப் பாதையோரங்கள் மற்றும் வீதியோரங்களில் அடர்ந்து வளர்ந்து கிடந்த புற்கள், புதர்கள் துப்புரவாக்கப்பட்டன. நடைபாதையில் கற்கள் உடைந்தும், கற்கள் அகற்றப்பட்டும் சேதமாகிக் கிடக்கும் இடங்கள் திருத்தப்பட்டு வருகின்றன. இரு வார காலத்தில் கொழும்பு நகர வீதிகளே முற்றாக மாறிப் போய் விட்டன.

கொழும்பு நகரில் மாத்திரமே இவ்விதமான தூய்மைப் புரட்சி நடைபெறுவதாகக் கூறி விட முடியாது. நாட்டின் வேறு பல நகரங்களிலும் இவ்விதமாக தூய்மைப்படுத்தும் துரித பணிகள் நடைபெற்று வருவதைக் காண முடிகின்றது.

கொழும்பு நகரில் வீதிகளைத் துப்புரவாக்கும் பணிகள் மாத்திரமன்றி, வீதிப் போக்குவரத்து விதிகளை உரியபடி நடைமுறைப்படுத்துவதில் போக்குவரத்துப் பொலிஸார் இப்போது கண்டிப்புடன் ஈடுபட்டு வருவதையும் காணலாம்.

பாதசாரிகளுக்கான வீதிக் கடவைக் கோடுகளை அலட்சியம் செய்தபடி, கண்டபடி நினைத்த இடமெங்கும் வீதியைக் கடப்போர் தற்போது கடுமையாக எச்சரிக்கப்படுகின்றனர். இவ்வாறு போக்குவரத்து விதிகளை அலட்சியம் செய்வோர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும் பொலிஸார் எச்சரிக்கின்றனர்.

வீதிப் போக்குவரத்து விதிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பது பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஆகும். வாகன சாரதிகளை மாத்திரம் அறிவுறுத்துவதனால் பயன் ஏற்பட்டு விடப் போவதில்லை. பாதசாரிகள் வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளை சரியாகப் பின்பற்றினால் மாத்திரமே விபத்துகளைக் கட்டுப்படுத்தி, வீணான உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்.

எனவே போக்குவரத்துப் பொலிஸாரின் இவ்விதமான கண்டிப்பான நடவடிக்கைகளை எவருமே குறை கூறி விடலாகாது. வீதிப் போக்குவரத்துக் குற்றங்கள் எல்லை மீறிச் சென்று விட்டன. இதன் காரணமாகவே நாட்டில் வாகன விபத்துகள் கடுமையாக அதிகரித்துள்ளதுடன், உயிரிழப்புகளும் அதிகரித்து விட்டன. எனவே வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவதை உண்மையில் பாராட்டாமல் இருக்க முடியாது. அத்துடன் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதும் அவசியம்.

முன்னைய அரசாங்கம் தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில் இவ்வாறான விடயங்களில் அலட்சியமாக உறக்க நிலையில் இருந்துள்ளதென்பது இப்போதுதான் பலருக்குப் புரிகின்றது.

கடந்த 2005 இல் பதவிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷவின் பத்து வருட கால ஆட்சியை மைத்திரி_- ரணில் கூட்டணியினர் 2015 இல் முடிவுக்குக் கொண்டு வந்தனர். மஹிந்த ராஜபக்ஷவின் பத்து வருட ஆட்சிக் காலத்தின் செயற்பாடுகள் மீது குற்றம் சுமத்தியும், அக்குறைகளை தமது ஆட்சிக் காலத்தில் நீக்கிவிடப் போவதாகவும் கூறியே மைத்திரி_- ரணில் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது.

அவர்கள் 2015 ஜனவரியில் ஆட்சியைக் கைப்பற்றினரே தவிர, மக்கள் குறிப்பிட்டுக் கூறும்படியாக உருப்படியாக ஆற்றிய காரியமென்று எதுவுமே இல்லை. ‘ஐந்து வருட கால உறக்கம்’ என்றுதான் அந்த ஆட்சியைக் கூற முடியும். அதேசமயம் மைத்திரி_- ரணில் தரப்பினருக்கு இடையிலான முரண்பாடுகளிலேயே அதிக காலம் வீணாக விரயமாகிப் போனது.

நகர அபிவிருத்தி, விவசாயிகள் பிரச்சினை, பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைகள், சுகாதாரத்துறை அதிகாரிகளின் பிரச்சினைகள் என்றெல்லாம் அனைத்துத் துறைகளிலும் சிக்கல்கள் பல்கிப் பெருகியதுதான் கண்ட பலன்!

தேசிய பாதுகாப்பைக் கூட அவர்களால் உறுதிப்படுத்த முடியாமல் போனதுதான் பெரும் பாதிப்பு. சர்வதேச பயங்கரவாத இயக்கமொன்றின் செயற்பாடுகளில் உள்நாட்டில் முஸ்லிம் இளைஞர்கள் குழுவொன்று ஈர்க்கப்படுவது குறித்தோ, அவர்கள் தற்கொலைத் தாக்குதல்களுக்குத் திட்டமிடுவது பற்றியோ முன்கூட்டியே உளவுத் தகவல்களை அறிய முடியாமல் போனதும் முன்னைய ஆட்சியின் பலவீனங்களின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் என்றே கூறவேண்டும்.

இந்த அசமந்தம் காரணமாகவே இவ்வருடத்தின் புனிதம் நிறைந்த திருநாளான ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் 250 இற்கும் மேற்பட்ட அப்பாவிகளை பலிகொடுக்க வேண்டியேற்பட்டது.

நாட்டின் நிர்வாகத்தைப் பொறுப்பேற்றுள்ள அரசாங்கமொன்றுக்கு உறக்கநிலையென்பது கூடாது. அரசு அசமந்த நிலையில் இருக்குமானால் நாட்டின் நிர்வாகமே சீர்குலைந்து போகும். தேசிய பாதுகாப்பும் உறுதியற்றதாகிப் போய் விடும்.

இலங்கையில் இப்போது நிர்வாகம் வினைத்திறன் மிக்கதாக நகர்வதை கடந்த இரு வார காலத்தில் காண முடிகிறது. திண்மக் கழிவகற்றல் என்பது இன்னுமே முழுமையாக தீர்வு காண முடியாத பிரச்சினையாகிப் போயுள்ளது. நகரங்களிலேயே அன்றாடம் அதிகம் திண்மக் கழிவுகள் குவிகின்றன. திண்மக் கழிவுகள் முறையாக அகற்றப்பட்டு முகாமைத்துவம் செய்யப்படுவதன் மூலம், நாட்டின் அனைத்து நகரங்களுமே தூய்மையடையுமென எதிர்பார்க்க முடியும்.

நாட்டில் தூய்மையைப் பேணுவதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட அக்கறை கொண்டவரென்பது பொதுவான அபிப்பிராயம் ஆகும். 2015 இற்கு முற்பட்ட ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு மேலதிகமாக நகர அபிவிருத்திக்கான பொறுப்பையும் அவர் ஏற்றிருந்த வேளையில தூய்மைப் புரட்சியை முன்னெடுத்திருந்தார்.

நாட்டின் வீதிகள் அபிவிருத்தியடைந்ததெல்லாம் அவரது திட்டங்களினால் ஆகும். அதுபோன்றதொரு தூய்மைப் புரட்சியே மீண்டும் இப்போது ஆரம்பித்துள்ளது.. தூய்மையான நாடொன்றை முதலில் நாம் பேண வேண்டும். அப்போது தான் சுகாதாரமான வாழ்வையும் ஏற்படுத்திக் கொள்ள வழியேற்படும்.


Add new comment

Or log in with...