பிந்திய ஏற்பாடுகளுடன் தெற்காசிய விளையாட்டு விழா நேபாளத்தில் ஆரம்பம் | தினகரன்


பிந்திய ஏற்பாடுகளுடன் தெற்காசிய விளையாட்டு விழா நேபாளத்தில் ஆரம்பம்

கரப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு வெண்கல வாய்ப்பு

நேபாளத்திலிருந்து எம்.எஸ்.எம்.பிர்தெளஸ்

13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி பிந்திய ஏற்பாடுகளுடன் நேற்று நேபாளத் தலைநகர் காத்மண்டுவின் தசரத் ரங்கசாலா அரங்கில் ஆரம்பமானது.

ஏழு நாடுகளின் 5000க்கும் அதிகமான வீர ,வீராங்களை மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இலங்கை சார்பில் 568 வீர, வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டிகள் உட்பட மொத்தம் 29 விளையாட்டுகள் இம்முறை தெற்காசி விளையாட்டுப் போட்டியில் இடம்பெறுகின்றன.

இந்த விளையாட்டுப் போட்டிகளின் உத்தியோகபூர்வ ஆரம்ப விழா நேற்று மாலை ஐந்து மணிக்கு தொடங்கியது. மூன்று மணி நேரம் நீடித்த வண்ணமயமான ஆரம்ப விழாவில் பிரதம அதிதியாக நேபாள ஜனாதிபதி பித்தியா தேவி பண்டாரி பங்குபற்றி போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.

இதில் இலங்கை அணியின் தலைவராக மேசைப்பந்து வீராங்கனை இசாரா மதுரங்கி தேசியக் கொடியை ஏந்தியபடி அணிவகுப்பில் பங்கேற்றார்.

இம்முறை தெற்காசிய விளையாட்டுப் போட்டி நேபாளத்தின் மூன்று நகரங்களில் நடைபெறவுள்ளன. பொகார நகரில் பெண்கள் உதைபந்து, கிரிக்கெட், அம்பெறிதல், பூப்பந்து, கைப்பந்து, ட்ரைத்லோன், கடற்கரை கரப்பந்தாட்டம் மற்றும் பளுதூக்கும் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

ஜக்பூர் நகரில் மல்யுத்தப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. எஞ்சிய போட்டிகள் கத்மண்டு நகரில் நடைபெறவுள்ளன.

கரப்பந்து அரையிறுதியில் தோல்வி

ஏற்கனவே தெற்காசிய போட்டிகளின் கரப்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இருந்து அரையிறுதி வரை முன்னேறியபோதும் அரையிறுதியில் ஏமாற்றம் தந்தன.

குறிப்பாக இலங்கை மகளிர் அணி அரையிறுதிப் போட்டியில் நேபாளத்திடம் முதல் முறை தோல்வியை சந்தித்து வெள்ளி அல்லது தங்கப் பதக்கம் ஒன்றை வெல்லும் வாய்ப்பை இழந்தது. போட்டின் ஆரம்பம் தொடக்கம் மோசமான ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்தி எதிரணிக்கு சவால் கொடுக்க தவறிய இலங்கை மகளிர் அணி 3– 0 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை சந்தித்தது.

இதனால் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்திற்காக இன்று மாலைதீவு அணியுடன் விளையாடவுள்ளது. இலங்கை அணி ஆரம்பச் சுற்றில் மாலைதீவு அணியை 3–0 என்ற புள்ளிகளால் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அரையிறுதி வரை முன்னேறிய இலங்கை ஆடவர் கரப்பந்து அணி நேற்று நடைபெற்ற அரையிறுதில் இந்திய அணிக்கு கடும் சவால் கொடுத்தபோதும் கடைசியில் 3–1 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியின் ஆரம்ப இரண்டு சுற்றுகளையும் நெருங்கிய புள்ளிகளால் இழந்த இலங்கை மூன்றாவது சுற்றில் சிறப்பாக ஆடி அந்த சுற்றை கைப்பற்றியபோதும் நான்காவது சுற்றில் போதிய திறமையை வெளிப்படுத்த முடியாமல்போனது.

இந்நிலையில் இலங்கை ஆடவர் கரப்பந்தாட்ட அணி 3ஆவது இடத்திற்கான வெண்கலப் பதக்கத்திற்கு பங்களாதேஷ் அணியை இன்று எதிர்கொள்ளவுள்ளது.

இதன்படி தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இன்றைய தினத்தில் மேசைப் பந்து, கிரிக்கெட், ஆடவர் கால்பந்து, கொல்ப், கராத்தே, பூப்பந்து, டென்னிஸ், கரப்பந்து போட்டிகள் இடம்பெறுகின்றன.

நேபாளத்தின் ஏற்பாடுகள்

பற்றி அதிருப்தி

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நேபாளத்தின் ஏற்பாடுகள் குறித்து விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் தம்மிக்க முத்துக்கல அதிருப்தி வெளியிட்டதோடு நேபாளத்தில் இலங்கை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் முகம்கொடுத்த அசௌகரியங்களுக்கு நேபாளத்தின் ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் அந்நாட்டில் போதிய வசதிகள் இன்மையுமே காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

தெற்காசி விளையாட்டுப் போட்டிகளுக்காக நேபாளத்திற்கு வந்த வீர, வீராங்களை மற்றும் அதிகாரிகள் பயணம் மற்றும் தங்குமிட வசதிகளில் பல சிக்கல்களையும் எதிர்கொண்டனர். இது குறித்து நேபாளத்தின் காத்மண்டுவில் வைத்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும்போதே தம்மிக்க முத்துக்கல இதனைத் தெரிவித்தார்.

'இலங்கை வீர, வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகளின் தங்குமிடம் போக்குவரத்து ஏற்பாடுகளுக்காக நேபாள ஒலிம்பிக் குழுவுக்கு 73 மில்லியன் டொலர்களை நாம் வழங்கியிருக்கிறோம். ஆனால் பயண ஏற்பாடுகளை தருவதற்கு அவர்கள் தவறியுள்ளனர். தங்குமிட வசதிகளிலும் சிக்கல்கள் உள்ளன. இன்னும் மைதானங்களின் ஏற்பாடுகள் பூர்த்தியாகி இருக்கவில்லை.

நேற்றுத் (30) தான் ஆரம்ப விழா நேரம் அறிவிக்கப்பட்டது. அவர்களிடம் ஏதாவது கேட்டால் எப்போதுமே சரியாகிவிடும் என்று மாத்திரமே கூறுகிறார்கள். இவ்வாறான வசதி குறைந்த நாடு ஒன்றிடம் இருந்து நாம் பெரிதாக எதிர்பார்க்கவும் முடியாது' என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை வீரர்களின் பயணத்திலும் அதிக சிக்கல் இருந்து வருகிறது. இம்முறை தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கையில் இருந்து மொத்தம் 568 வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

தெற்காசிய விளையாட்டுப் போட்டி ஒன்றில் இலங்கை சார்பில் அதிக வீர, விராங்கனைகள் பங்கேற்கும் போட்டியாகவும் இது இருப்பதாக தம்மிக்க பெரேரா சுட்டிக்காட்டினார்.

எனினும் இலங்கையின் மூன்று தங்கப் பதக்க எதிர்பார்ப்பான மெய்வல்லுநர் அணித் தலைவி ஹிமாலி லியனாரச்சி விபத்தில் காயத்திற்குள்ளாகி இம்முறை தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவில்லை. அதேபோன்றும் நீச்சல் போட்டிகளில் பதக்கம் எதிர்பார்க்கப்படும் கிம்கோ ரஹீம் மற்றும் செரந்த டி சில்வா இருவரும் சுகயீனம் காரணமாக இம்முறை தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்காதது பெரும் பின்னடைவாக உள்ளது.

இம்முறை தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சு அதிக ஈடுபாடு காட்டி செயற்பாட்டுள்ளதாக தம்மிக்க பெரேரா கூறினார். கடந்த 10 மாதங்களாக பிரதேச, மாகாண மட்டங்களில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களில் இருந்து இந்தப் போட்டிக்கான வீரர்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்காக ஒரு வீரருக்கு 10 இலட்சம் வரை செலவிட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை இலங்கை வீரர்கள் ஆறு பேர் தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கு மத்தியில் நேபாளத்திற்கான இலங்கை தூதரகத்தில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...