நடிகர் ராதாரவி பாஜகவில் இணைவு | தினகரன்


நடிகர் ராதாரவி பாஜகவில் இணைவு

நடிகர் ராதாரவி அதிமுக கட்சியில் இருந்து விலகி பாஜக தேசிய செயல் தலைவர் ஜே பி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

நடிகர் ராதாரவி சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களின் மிக முக்கியமான நபராக கருதப்படுகிறார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி இவர் பிரச்சினையில் சிக்கிக் கொள்வது வழக்கம். பெண்களை மதிக்காமல் பேசுகிறார் என்றும் இவர் மீது புகார் இருந்தது.

மிக முக்கியமாக மீ டூ போராட்டம் நடந்த சமயத்தில் அதற்கு எதிராக ராதாரவி பேசினார் என்றும் புகார் உள்ளது. சில மாதங்களுக்கு முன் சினிமா விழா ஒன்றில் நடிகை நயன்தாராவிற்கு எதிராக இவர் பேசினார்.

நடிகர் ராதாரவி, நயன்தாராவை பற்றி இரட்டை அர்த்தத்தில் பேசினார். அவரின் இந்த பேச்சு பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக திரைத்துறையினர் பலரும், சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலினிடம் இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து திமுகவிலிருந்து அதிரடியாக ராதாரவி நீக்கப்பட்டார். ஆனால் அவர் தற்காலிக நீக்கம் என்றுதான் கூறப்பட்டது. ஆனால் திமுகவில் இருந்து மொத்தமாக ராதாரவி அப்போதே தன்னை விலக்கிக் கொண்டார்.

திமுகவில் இருந்து வெளியேறிய அவர் சில வாரங்களில் அதிமுகவில் இணைந்தார். அதிமுக கட்சியில் தனக்கு மரியாதை உள்ளது என்று கூறி அவர் அதிமுகவில் இணைந்தார். தற்போது புதிய திருப்பமாக நடிகர் ராதாரவி அதிமுக கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.

 

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது


Add new comment

Or log in with...