சிறுநீரகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் | தினகரன்


சிறுநீரகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

நவீன  வாழ்க்கை  முறை

மனித உடலில் சிறுநீரகங்களின் செயல்பாடு மகத்தானது. வயிற்றுப்பகுதியில் அவரை விதை போன்ற வடிவத்தில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. அவை உடலின் கழிவுகளை அகற்றுதல், செங்குருதி சிறுதுணிக்கைகளை உற்பத்தி செய்தல், உடலில் நீர் மற்றும் உப்பின் அளவை சீராக நிர்வகித்தல், குருதியழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் விட்டமின் டி யை எடுத்துக் கொடுத்தல் போன்ற உடல் இயக்கத்தின் முக்கிய பணிகளை ஆற்றுகின்றன.  

ஆனாலும் இச்சிறுநீரகம் பாதிப்புகளுக்கு உள்ளாவதோடு மாத்திரமல்லாமல் செயலிழக்கவும் கூட முடியும். இதற்கு பல்வேறு காரணிகள் துணைபுரியலாம். அதன் காரணத்தினால் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தைப் பேணிக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது ஒவ்வொருவரதும் பொறுப்பாகும்.  

அந்த வகையில் சிறுநீரக செயலிழப்பானது ஆண் -, பெண் வேறுபாடின்றி அனைவரையும் பாதிக்கக்கூடிய ஒன்றாகும். இப்பாதிப்பு எந்த வயதிலும் ஏற்படலாம். குழந்தைகளைப் பொறுத்தளவில் எடை குறைவாகப் பிறந்த குழந்தைகளுக்கு பிற்காலத்தில் சிறுநீரகம் செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.  

அதேநேரம், நீரிழிவும் குருதி உயர் அழுத்தமும் சிறுநீரக செயலிழப்புக்கு முக்கிய காரணங்களாக விளங்குகின்றன. அத்தோடு உடலில் நீர் வரட்சி, சாதாரண வலிகளுக்கு கூட தொடர்ந்து வலி நிவாரணி மாத்திரைகள், ஊசிகளைப் பயன்படுத்தல், சிறுநீரக கல், பக்றீரியா மற்றும் வைரஸ் தொற்று ஆகியவையும் சிறுநீரகப் பாதிப்புக்கு துணைபுரியக்கூடியனவாக உள்ளன.  

அத்தோடு கடும் உடல் உழைப்பு, வறுத்த, பொறித்த செயற்கை உணவுகள், மன அழுத்தம், மாசுபட்ட சுற்றுப்புற சூழல் என்பன தான் நீரிழிவு, குருதி உயர் அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கும் காரணமாக அமைகின்றன. அதன் விளைவாகவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் நூற்று 30பேருக்கு சிறுநீரக செயலிழப்பும் ஏற்படுகிறது என மதிப்பிடப்பட்டுள்ளது.  

அறிகுறிகள்  

இந்த சிறுநீரக செயலிழப்பானது எவ்வித அறிகுறியும் இன்றி இருந்து தாக்கும் மாரடைப்பு போன்று அறிகுறிகளே இல்லாமல் முற்றிய நிலையில் தான் வெளியே தெரிய வருகிறது. சிறுநீர் அளவு குறைதல், முகம், கை கால் வீக்கம், சிறுநீரில் குருதி கலந்து வெளியேறல், சிறுநீர் தாரையில் எரிச்சல், சிறுநீர் மெதுவாக வெளியேறுதல், இரவு நேரங்களில் அதிக அளவு சிறுநீர் கழித்தல், முதுகு வலி, மூச்சு விடுவதில் சிரமம், அதிக உடல் சோர்வு, வயிற்று பகுதியில் வலி, தூக்கமின்மை, உடல் உறவில் நாட்டமின்மை போன்றவை சிறுநீரகம் பாதிப்படைந்துள்ள நிலையின் அறிகுறிகளாகும்.  

 சிறுநீரில் புரதமும் செங்குருதி சிறுதுணிக்கைகள் அதிகளவில் வெளியேறுவதும் கூட சிறுநீரகப் பாதிப்பின் அடையாளங்களாகவே விளங்குகின்றன. அதனால் குருதியிலுள்ள யூரியா மற்றும் கிரியேட்டினின் உப்புகளின் அளவைப் பரிசோதனை செய்து சிறுநீரகம் எந்தளவுக்கு பாதிப்படைந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.  

அதேவேளை, நீரிழிவு மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளர்களைக் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். என்றாலும் நீரிழிவு நோயையும் குருதி உயர் அழுத்தத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் சிறுநீரகம் பாதிப்படைவதைத் தவிர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக உணவில் உப்பு அதிகம் சேர்ப்பதை தவிர்த்துக் கொண்டால் சிறுநீரகங்கள் குருதி உயர் அழுத்தத்தால் பாதிப்படைவதைத் தவிர்த்துக் கொள்ளலாம். அத்தோடு நாளாந்த உடற்பயிற்சி, அளவான சத்தான இயற்கை உணவுகள், உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் என்பனவும் சிறுநீரகங்கள் பாதிப்படைவதைத் தவிர்த்துக்கொள்ளப் பெரிதும் உதவும்.  

உணவில் கொழுப்பு அதிகம் சேரும் போது இதயம் பாதிக்கப்படலாம். அது சிறுநீரகத்தையும் பாதிக்கும். அதனால் கொழுப்பு உணவுகளை குறைத்துக் கொள்வது சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும். அதேநேரம் புகைப்பிடித்தல் சிறுநீரகங்களுக்கு மிகவும் கேடு விளைவிக்கக்கூடிய செயலாகும். அத்தோடு இதயத்தைப் பலவீனமாக்கவும் புற்றுநோய்க்கும் கூட இப்பழக்கம் வழிவகுக்கும்.  

சிறுநீரக கற்கள்  

மேலும் சிறுநீரக செயலிழப்புக்கு சிறுநீரக கற்களும் ஒரு காரணமாக உள்ளன. இவ்வகைக் கற்களின் உருவாக்கத்திற்கு அதிக அளவில் இறைச்சி வகை உணவுகள், உப்பு, பால் பொருட்கள் என்பன பக்கதுணையாக அமைகின்றன. அதனால் உணவில் இவற்றை அளவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீரக கற்கள் ஏற்பட்டிருப்பது தெரியவந்தால் அது தொடர்பில் தாமதியாது மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.   அத்தோடு அவ்வப்போது உடல்நலப் பரிசோதனை மேற்கொண்டு சிறுநீரகத்தின் செயல்பாட்டை உறுதிசெய்து கொள்ளவும் வேண்டும். இவ்விதமான பரிசோதனைகள் சிறுநீரக செயலிழப்பு தீவிர நிலையை அடைவதை தவிர்க்க உதவும். குறிப்பாக சில பரிசோதனைகள் இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதையும் சிறுநீரக பாதிப்பின் அறிகுறியையும் கண்டறிய பயன்படும்.

ஆனாலும் வயிற்றை சுற்றிய பகுதிகளில் வலி காணப்பட்டால் எக்காரணம் கொண்டும் மருத்துவ ஆலோசனையைப் பெறாது வலி நிவாரண மாத்திரைகளைப் பாவிக்கக்கூடாது. ஏனெனில் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை இவ்வலி மாத்திரைகள் விரைவுபடுத்தத் துணைபுரியும்.  

ஆகவே இதய பாதிப்பு, இதய செயலிழப்பு, திடீர் மாரடைப்பு மற்றும் இதய நாள நோய்களுக்கு முன்னோடியாக சிறுநீரக பாதிப்பு உள்ளது. அதனால் சிறுநீரகங்களை உரிய முறையில் பராமரிப்பதில் ஒவ்வொருவரும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அது சிறுநீரகங்களின் பாதிப்பைத் தவிர்க்க உதவுவதோடு மேலும் பல தொற்றா நோய்களின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்திக்கொள்ளவும் பெரிதும் உதவும்.   


Add new comment

Or log in with...