பீப்பள்ஸ் லீசிங் வருடாந்த நிதி அறிக்கைக்கு எட்டு விருதுகள் | தினகரன்


பீப்பள்ஸ் லீசிங் வருடாந்த நிதி அறிக்கைக்கு எட்டு விருதுகள்

இலங்கையின் முன்னணி வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங், அதன் 2018/19 வருடாந்த நிதி அறிக்கைக்காக 33ஆவது சர்வதேச ARC விருதுகள் வழங்கும் நிகழ்வில் எட்டு விருதுகளை வென்றிருந்தது.

உலகின் முன்னணி வருடாந்த நிதி அறிக்கைகளுக்காக வழங்கப்படும் உயர் சர்வதேச விருதாக சர்வதேச ARC விருதுகள் அமைந்துள்ளது. இந்த போட்டியை அமெரிக்காவின் MerComm, Inc. ஏற்பாடு செய்ததுடன், இந்த விருது வழங்கும் நிகழ்வு கொரியாவின், சியொல் நகரிலுள்ள SHILLA ஹோட்டலில் இடம்பெற்றது. பீப்பள்ஸ் லீசிங் சார்பாக நிதிப் பிரிவின் பிரதம முகாமையாளர் ஒமல் சுமனசிறி இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு, நிறுவனத்தின் சார்பாக விருதுகளை பெற்றுக் கொண்டார்.

பீப்பள்ஸ் லீசிங் 2018/19 வருடாந்த நிதி அறிக்கை “நிதிச் சேவைகள் - பொதுத் துறை” என்பதில் பெற்றுக் கொண்ட எட்டு விருதுகளில், “நிதித் தரவு” (தங்க விருது), “பாரம்பரியமற்ற வருடாந்த அறிக்கை” (தங்க விருது), “தலைவரின் கடிதம்” (வெள்ளி விருது), “முகப்பு படம்/அலங்காரம்” (வெண்கல விருது), “உள்ளக அலங்காரம்” (வெண்கல விருது), “எழுத்தாக்கம்” (வெண்கல விருது), “அச்சிடல் மற்றும் தயாரிப்பு” (வெண்கல விருது) மற்றும் “புகைப்படம்” (கெளரவ விருது) போன்றன அடங்கியுள்ளன.

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான சப்ரி இப்ரஹிம் இந்த விருதுகளை பெற்றுக் கொண்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், வருடாந்த நிதி அறிக்கைகளை பொறுத்தமட்டில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு என்பது மிகவும் உயர்ந்த விருதுகள் வழங்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.

இது பீப்பள்ஸ் லீசிங் அணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இந்த ஆண்டு போட்டியில் எட்டு விருதுகளை வெற்றியீட்டியமை உண்மையில் பெருமைக்குரிய விடயமாகும் என்றார்.


Add new comment

Or log in with...