ரோயல் பார்க் கொலையாளிக்கு வெளிநாடு செல்ல தடை | தினகரன்


ரோயல் பார்க் கொலையாளிக்கு வெளிநாடு செல்ல தடை

ரோயல் பார்க் கொலையாளிக்கு வெளிநாடு செல்ல தடை-Travel Ban on Royal Park murder convict Jude Shramantha Anthony

ரோயல் பார்க் கொலை குற்றவாளி ஜூட் ஷ்ரமந்த அந்தோனி ஜயமஹ வெளிநாடு செல்வதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜூட் ஷ்ரமந்தவிற்கு பொது மன்னிப்பு வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எடுத்த முடிவை எதிர்த்து பெண்கள் மற்றும் ஊடகங்களைச் சேர்ந்தவர்களால் தாக்கல் செய்த மனு இன்று (29), உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் புவனேக அலுவிஹாரே, விஜித் மலல்கொட மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் மூவரடங்கிய நீதிபதி குழு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியது.

அதற்கமைய, ஜூட் ஷ்ரமந்த ஜயமஹா டிசம்பர் 10ஆம் திகதி வரை நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் இடைக்கால தடை உத்தரவும் வழங்கப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன சமர்ப்பித்து, தற்போது மரண தண்டனையில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்றவாளிகளில் இந்த நபரை மட்டுமே தேர்ந்தெடுத்து மன்னிக்க முன்னாள் ஜனாதிபதியின் முடிவு முற்றிலும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறினார்.

ஜூட் ஷ்ரமந்த அந்தோனி ஜயமஹ ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்ற தகவல் தங்களுக்கு கிடைத்துள்ளது என்றும் அவர் இதன்போது நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டினார்.

மரண தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் குறித்த நபரை மட்டும் தேர்ந்தெடுத்து முன்னாள் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளமையானது அரசியலமைப்புக்கு எதிரானது என மனுதாரர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனிப்பட்ட முறையில் பிரதிவாதியாக பெயரிடுமாறு மனுதாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, டிசம்பர் 09ஆம் திகதி மீண்டும் மனுவை எடுத்துக் கொள்வதற்கும் உத்தரவிட்டது.

2005ஆம் ஆண்டில் ரோயல் பார்க் கொலை வழக்கு தொடர்பாக ஜூட் ஷ்ரமந்த அந்தோனி ஜயமஹாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இது அக்காலப்பகுதியில் ஊடகங்களின் பரவலாக பேசப்பட்ட வியடமாகவும் இருந்தது. ஆயினும் குற்றவாளிக்கு இம்மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி பொது மன்னிப்பில் வழங்கப்பட்டது.

குறித்த நபர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...