Friday, March 29, 2024
Home » என் எண்ண அலைகளில் உறையும் மாத்தளை முத்துமாரியம்மன்

என் எண்ண அலைகளில் உறையும் மாத்தளை முத்துமாரியம்மன்

by Gayan Abeykoon
February 23, 2024 9:33 am 0 comment

ானுடராய்  இப்பூமியில் பிறக்க மாதவம் செய்திட வேண்டுமென ஆன்றோர்கள் சான்றோர்கள்  கூறிச் சென்றுள்ளார்கள். அரிது அரிது மானுடராய் பிறப்பது அரிது என  அவ்வையாரும் மானிட பிறப்பைப் பற்றி எடுத்தியம்புகிறார். இந்த உடம்பு இறைவன்  பணி செய்து முத்திப் பேற்றை அடைவதற்கே படைக்கப்பட்டுள்ளது.

இப்பூமியில்  நாம் எங்கு பிறக்க வேண்டும் எங்கு வாழ வேண்டும் என்பததை நாம் முடிவு  செய்வதில்லை. அந்த இறைவனே முடிவு செய்கின்றான். நான் பிறந்த இடம்    வேறாக   இருந்தாலும் சிறு வயது முதலே வாழ்ந்த இடம் மாத்தளை. அச்சிறு வயதில்  நான்  வசிப்பது அன்னை முத்துமாரியின் புண்ணிய பூமி என எனக்கு தெரியாது.

அன்னை  தந்தையுடன் ஆலயம் என்று எனக்கு விவரம் தெரிந்த நாளில் முதலில் சென்றது  முத்துமாரி அம்மனின் சந்நிதிக்கு தான். இன்றும் என் மனக்கண்ணில் அந்த ஆலய  காட்சிகள் விரிகின்றன. சுற்றிலும் பசுமையான வயல். அதன் அருகில் அன்னையின்  ஆலயம். கருவறையில் தீப ஒளியில் முத்துமாரி அன்னை கம்பீரமாக வீற்றிருந்தாள்.  முகத்தில் கருணை ஒளி. அடியார்களை காக்கும் அபய கரம்.

எனது வாழ்க்கையில் பல நிகழ்வுகள் அந்த ஆலயத்திலேயே நடந்தேறியுள்ளன.பொங்கல்  என்றால் அனைவருக்கும் மகிழ்ச்சியான நாள். அனைவரும் தமது வீட்டு  முற்றத்தில் பொங்கலிடுவார்கள். ஆனால் நாங்கள்  அன்னை முத்துமாரியின் ஆலய  முன்றலிலேயே பொங்கல் இடுவோம். அது ஒரு அழகான அனுபவம் உடலை ஊசி போன்று  குத்தும் பனிக்குளிர். அழகு மலையில் ஊற்றெடுக்கும் ஆறுபீலியில் அதிகாலையிலே  குளிப்போம்.  பின்னர் ஆலயத்திற்கு வந்து வரிசையாக மூட்டியிருக்கும்  அடுப்பில் நாம் பொங்கலிடுவோம். பின்னர் அன்னைக்கு படைத்து அருந்தும்  பொங்கலின் சுவையை என்றென்றும் மறக்க முடியாது.

அது மாத்திரமல்ல திருவெம்பாவை காலத்து புளியோதரை நினைக்கும் போதே நாவூறுகிறது.

மாசி  மகோற்சவம் என்றால் மாத்தளையில் வாழும் அனைவரும் அது தங்கள் வீட்டு  திருவிழா என்றே எண்ணுவார்கள். எனது வாழ்க்கையிலும் பல பருவங்கள் இந்த  ஆலயத்தில் கடந்து போய் உள்ளன பாவாடை சட்டை,  தாவணி,  சாரி என பல பருவங்கள். பள்ளித்தோழிகளுடன் தேர்த்திருவிழாவில் வடம் பிடித்து  ரதம் இழுத்தது என பல அனுபவங்கள் உண்டு. ஆலய உற்சவங்களின் போது  எண்ணற்றோரின் சொற்பொழிவுகள் எனது செவிகளை குளிரவைத்துள்ளன. நாதஸ்வர,  மேள  கச்சேரிகளை  மறக்க முடியுமா. கிருபானந்த வாரியார், வசந்தா வைத்தியநாதன்,  கண்டி அசோகா கல்லூரியின் அதிபர் நடராஜா என பலரின் சொற்பொழிவுகள் என்  வாழ்க்கையை புடம் போட்டிருக்கின்றன.

என்னுடைய  எழுத்தார்வமும் இந்த ஆலயத்தில் தான் ஆரம்பித்தது என்று கூறினால் மிகையல்ல.  சிவராத்திரி அதில் முக்கியமான ஒரு தினம். எனது சகோதரனுடன் சேர்ந்து  கவிதைகளை எழுதி பாடசாலை காலத்திலேயே சிவராத்திரி தினத்தில் அரங்கேற்றி   இருக்கின்றோம்.கோயில்  கும்பாபிஷேக மலரில் நான் எழுதிய கட்டுரை வரவில்லை என்று அன்னையின்  சந்நிதியில் கவலைப்பட்ட சந்தர்ப்பமும் உண்டு. இன்று அந்த அன்னையின் அருளால்  பத்திரிகைகளில் எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவ்வன்னையின   அருள்தான்  என்னே.

எனது தாயார்   ஏதேனும் கஷ்டங்கள் ஏற்படும் போது முத்துமாரி அன்னையை வேண்டி காணிக்கை  முடிந்து வைப்பதை கண்டுள்ளேன். அவளது கோரிக்கை நிறைவேறிய பின் காணிக்கையை  செலுத்துவதையும் என் கண்களால் பார்த்துள்ளேன். மாத்தளையில் கலவரம்  ஏற்பட்டபோது கோயிலுக்கு ஏற்பட்ட அழிவை எண்ணி கண்ணீர் விட்டிருக்கின்றேன்.  ஆனால் இன்று அதே அன்னையின் ஆலயம் பிரமாண்டமாக எழுந்து நிற்கும் காட்சியை  காணும் போது கண்களில் ஆனந்த கண்ணீர் தான் வருகிறது.

மாத்தளை  வாழ் தமிழ் மக்கள் மாத்திரம் அல்ல எல்லா மதத்தினரும் நம்பிக்கை வைத்துள்ள  அன்னை தன்னை வேண்டுபவர்களுக்கு தாய்மை உணர்வுடன் அருள் பாலிப்பாள்.  மாத்தளையில் வசிக்கும் அனைவருக்கும் அவளுடன் இணைந்த பல நினைவுகள் இருக்கும்  என்பது எனது எண்ணம். நான் எங்கு வாழ்ந்தாலும் என் மனதில் நிறைந்திருப்பவள்  மாத்தளை முத்துமாரி அன்னையே. அவள் பாதம் பணிகின்றேன். அணுவிற்குள் அணுவும் நீஅண்டங்கள் அனைத்தும்
நீ ஆள்கின்ற அரசியும் நீகருணைக்கு எல்லையும் நீ

இராஜகனி வயலட்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT