அதிகரித்த உடல் பருமன் ஆரோக்கியத்தின் எதிரி | தினகரன்


அதிகரித்த உடல் பருமன் ஆரோக்கியத்தின் எதிரி

உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு சுவாசக் கோளாறு, இதய வியாதிகள், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மூட்டு வலி, சில வகை புற்றுநோய்கள் முதலான பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உண்டு; மனரீதியான பிரச்சினை-கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது

உடல் பருமனால் எற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்ட உடல் பருமன் எதிர்ப்பு விழிப்புணர்வு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது. உடல் பருமன் எதிர்ப்பு விழிப்புணர்வு தினம் நேற்றாகும்.

ஒருவருக்கு உயரத்துக்கு ஏற்ற இயல்பான எடை (‘பொடி மாஸ் இண்டக்ஸ்’ -பி.எம்.ஐ) இல்லாமல் இருந்தால் உடல் பருமன் பிரச்சினை உள்ளதாகக் கருத வேண்டும். ‘பி.எம்.ஐ’ கணக்கீட்டின் அடிப்படையில் உடல் பருமன் பிரச்சினையின் தீவிரத் தன்மையை மருத்துவர்கள் மதிப்பிடுகின்றனர். இரத்தத்தில் அளவுக்கு அதிகமாகக் கொழுப்புச் சத்து சேருவதும் உடல் பருமன் பிரச்சினைக்கு முக்கியமான காரணம்.

இக்காலத்தில் குழந்தைகள் அதிக அளவில் உடல் பருமன் பிரச்சினையில் பாதிக்கப்படுகின்றனர். உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு சுவாசக் கோளாறு, இதயக் கோளாறுகள், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மூட்டு வலி, சில வகை புற்றுநோய்கள் முதலான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு; மனரீதியான பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

நடப்பது உட்பட உடல் உழைப்பின் மூலம் நாம் உண்ணும் உணவு கலோரியாகச் செலவிடப்படுகிறது; அதிக உணவை ஒருவர் உண்ணும் போது செலவழிக்கப்படாத கலோரியானது கொழுப்பாக மாறி இரத்தத்தில் கலக்கிறது. இது தவிர முட்டையின் மஞ்சள் கரு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் மூலமும் இரத்தத்தில் கொழுப்புச் சத்து சேர்ந்து கொண்டே வந்து இரத்தக் குழாய்களில் படிகிறது. பின்னர் இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மையைக் கெடுத்து, இரத்த ஓட்டத்தைப் பாதிக்கிறது. இதனால், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், பித்தப்பையில் கற்கள் பிரச்சினை முதலானவை ஏற்படும்; அதிகப்படியான கொழுப்புப் படிதல் காரணமாக இதயத்தின் இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டம் தடைப்பட்டு மாரடைப்பு ஏற்படும் ஆபத்தும் உண்டு.

ஆண்களைப் பொறுத்தவரை ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிவது, கிடைக்கும் உணவுகளை வாங்கி உண்பது போன்றவை உடல் பருமனுக்கு முக்கியக் காரணங்களாகும். பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு பல மடங்கு குறைந்து போனது முக்கிய காரணமாகும். வீட்டு வேலைகள் பலவற்றை அவர்கள் இயந்திரங்களின் உதவியுடன் குறைத்துக் கொண்டதால், உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்பாகி விட்டது. மேலும், நார்ச்சத்து அடங்கிய உணவு உட்பட சத்தான உணவைச் சாப்பிடாததும் காரணம். அது மட்டுமின்றி, பகலில் அதிக நேரம் உறங்குவது, தொலைக்காட்சி முன் அதிக நேரம் அமர்வது போன்றவையும் இதற்குக் காரணம்.

குளிரூட்டி அறையில் அமர்ந்து பணிபுரிவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உடலுழைப்புக்கான வாய்ப்பு குறைந்து விட்டது. இதனால், உணவு சமிபாடு ஆகாமல், அதன் கொழுப்புகள் வயிற்றில் தங்கி தொப்பையை ஏற்படுத்துகின்றன. தற்போது ஆரோக்கிய உணவுகள் உண்வோரின் எண்ணிக்கை குறைந்து, தொப்பை அதிகரித்திருப்போரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. இவ்வாறு உடல் பருமன் இருப்பவர்களையும், ஊளைச் சதை உள்ளவர்களையும் நோய்கள் மிக விரைவில் தாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

குழந்தைகள், சிறுவர்கள் கூட இதுபோன்ற பிரச்சினையால் நடப்பதற்கு சிரமப்படுகின்றனர். சில குழந்தைகள் உடல் பருமன் காரணமாக ஏற்படும் நோய்களால் சிறு வயதிலேயே இறக்கும் நிலையும் ஏற்படுகிறது.

உடல் பருமன் பிரச்சினை அதிகரித்து வருவதற்கு மாறி வரும் வாழ்க்கை முறையே முக்கிய காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். நம் முன்னோரின் உணவுப் பழக்கவழக்கங்கள் அனைத்தும் ஒவ்வொரு வேளைக்கும், ஒவ்வொரு வகை உணவு என உடல் நலனுக்கு நன்மை தரும் வகையில் அமைந்திருந்தன. அவை பசிக்கு உணவாக மட்டுமின்றி, ஊட்டச்சத்து தரும் வகையிலும், நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் மருந்தாகவும் அமைந்திருந்தது.

தற்போது பெரும்பாலோர் துரித உணவு வகைகளுக்கு அடிமையாகி விட்டனர். பல இடங்களில் வீட்டில் உணவைச் சமைக்காமல் துரித உணவுக்கு செல்லிடப் பேசி செயலி மூலம் வரவழைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், தற்போது துரித உணவுகளை வீட்டுக்கே வந்து அளிக்கும் தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும், பிட்ஸா,பேர்கர், உருளைக் கிழங்கு சிப்ஸ், பேக்கரி பொருள்கள் போன்றவற்றின் மீதான ஆர்வமும் அதிகரித்து விட்டது. இவை உடலின் கொழுப்பை அதிகரிக்கச் செய்து, பலவித நோய்களை அளிப்பவை என மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும் பெரும்பாலானோர் பொருட்படுத்துவதில்லை.

உடல் பருமன் பிரச்சினை ஏற்பட்ட பிறகு, உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்வது தாமதமான முடிவாகும். எனவே, சிறு வயது முதலே உணவு முறை, உடற்பயிற்சி போன்றவற்றை குழந்தைகள் முறையாக மேற்கொள்ள வேண்டும்.

உடல் பருமனைக் குறைக்க வேண்டும் என்பதற்காக உணவுக் கட்டுப்பாடு, பட்டினி போன்றவற்றை மேற்கொள்வது நல்லதல்ல. மாறாக, சிறு தானியங்கள் போன்ற பாரம்பரிய மற்றும் சத்தான உணவு வகைகளைச் சாப்பிடுவதே இதற்குத் தீர்வாகும். அதே போன்று அதிக நார்ச்சத்து உள்ள காய்கறி, பழ வகைகளை உண்பது சிறந்தது. கொழுப்புச் சத்து, அதிக கலோரிகள் கொண்ட உணவுப் பொருள்களைத் தவிர்த்தல், எண்ணெய் கலந்த உணவுப் பண்டங்கள், எண்ணெயில் தயாரிக்கப்பட்ட நொறுக்குத் தீனி வகைகள் உள்ளிட்டவற்றைத் தவிர்ப்பது சிறந்தது. நேரத்துக்கு ஏற்ற உணவு முறை, உணவு உண்ணும் கால அளவில் போதிய இடைவெளி போன்றவையும் உடல் பருமனைக் குறைக்க வழிவகுக்கும்.

சாப்பிட்டவுடன் படுத்து உறங்காமல், சிறிது தூரம் நடைப் பயிற்சி மேற்கொள்வது, தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி மேற்கொள்வது போன்றவையும் நல்லது. உடற்பயிற்சியை உடல் சோர்வாகும் வகையில் மேற்கொள்ளத் தேவையில்லை; மாறாக நடப்பது, மெதுவாக ஓடுதல், சைக்கிளில் பயணிப்பது ஆகியவை பலன் தரும்.

எனவே, மருத்துவ ரீதியாக உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைப் பராமரித்தால் உடல் பருமன் பிரச்சினையின்றி ஆரோக்கியமான வாழ்வு நிச்சயம்.


Add new comment

Or log in with...