'மக்கள் விரும்பாத எந்தத் தீர்வையும் ஏற்க மாட்டோம்' | தினகரன்


'மக்கள் விரும்பாத எந்தத் தீர்வையும் ஏற்க மாட்டோம்'

அரசியல் யாப்பு சீர்திருத்த முயற்சி ஆரம்பிக்கபட்டு பல படிமுறைகள் கடந்து சென்றுள்ளது. அதனை அமுல்படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம்  முன்னெடுத்து வருகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

அரசியல் இஸ்திரமற்ற நிலைக்கு பின்னர் ஜனாதிபதியையும் பிரதமரையும் ஒன்றாகச் சந்தித்துள்ளேன்.  நாளை 28ஆம் திகதியும் பேச இருக்கின்றோம். அதில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைக்குமாறு நான் அரசாங்கத்திடம்  கோரி இருக்கின்றேன் என  அவர் தெரிவித்தார். 

நேற்றுமுன்தினம்  (25)  திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்டக் கிளை, பிரதேச கிளை பிரதிநிதிகளுடன் இடம் பெற்ற கலந்துரையாடலின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ண சிங்கம், இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவர் ச.குகதாசன், மாவட்டக் கிளை செயலாளரும் முன்னால் நகரசபை தலைவருமான க.செல்வராஜா, திருகோணமலை நகராட்சி மன்றத் தலைவர் நா.இராஜநாயகம், பட்டிணமும் சூழலும் பிரதேசசபை தலைவர் ஜி.ஞானகுணாளன், வெருகல் பிரதேச சபை தலைவர்  உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர். 

தொடர்ந்து அவர் உரையாற்றும்போது, "சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரு புதிய அரசியல் யாப்பைக் கொண்டுவர வேண்டும். அதற்காக ஜனாதிபதியுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ்வுடனும் பணியாற்ற நாம் தயார். எமக்கு எவரும் எதிரிகள் அல்ல" என்றார். 

தற்போது பாராளுமன்றம் ஒரு அரசியல் யாப்பு பேரவையாக மாற்றப்பட்டுள்ளது. உபகுழுக்கள் அமைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கபட்டுள்ளது. அதன் பணிகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. எனினும் 2016ஆம் ஆண் ஆரம்பிக்கப்பட்ட இந்த அரசியல் யாப்பு சீர்திருத்தப்பணியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

இந்த நாட்டை ஆண்ட முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டார நாயக்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ போன்றோராலும் தற்போதய அரசாங்கத்தாலும் பல்வேறு அரசியல் தீர்வுத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பலவிதமான அறிக்கைகள் எம்மிடம் உள்ளன. பல நிபுணர்களின் அறிக்கையும் உள்ளன. இவை எல்லாவற்றையும் வைத்து நல்ல தீர்வு ஒன்று கொண்டுவரப்பட வேண்டும்.

ஒரு தீர்வுத் திட்டத்தை கொண்டு வரும்போது, மக்களின் கருத்தைக் கேட்போம், ஆலோசனைகளைப் பெறுவோம், பல்வேறு நாடுகளில் உள்ள நடைமுறைகளை ஆராய்ந்து தான் நாம் ஏற்போம். எமது மக்களின் குறைகளை தீர்க்கக்கூடிய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு தீர்வையே நாம் ஏற்போம். மாறாக, எமது மக்கள் விரும்பாத மக்களுக்கு நன்மை அளிக்காத எந்த ஒரு தீர்வையும் நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என  அவர் தெரிவித்தார். 

(அன்புவழிபுரம் தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...