இராஜாங்க, பிரதியமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்

அமைச்சர்கள் தொகை 45 ஆக மட்டுப்படுத்தப்படும் சாத்தியம்

புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (27) சத்தியப்பிரமாணம் செய்துகொள்கின்றனர்.

இன்று காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.அமைச்சர்களின் தொகையை 45 ற்கு மட்டுப்படுத்தும் வகையில் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக அறிய வருகிறது.

பாதுகாப்பு, ஊடகத்துறை உட்பட பல முக்கியத்துறைகளுக்கு இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல் அறியும் வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது. கெஹலிய ரம்புக்வெல்ல, ரோஹித அபேகுணவர்ன, சி.பி.ரத்நாயக்க உட்பட பொதுஜன பெரமுனவின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதோடு சில இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குவது குறித்து ஜனாதிபதி ஆலோசித்துள்ளதாக தெரிய வருகிறது.

தமிழ், முஸ்லிம் எம்.பிகள் சிலருக்கும் இதன் போது அமைச்சு பதவிகள் வழங்கப்பட இருப்பதாக அறியவருகிறது. 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சை வைத்திருக்க முடியாதென்பதால் பாதுகாப்புக்கு இராஜாங்க அமைச்சர் ஒருவரை நியமித்து அவர் ஊடாக பாராளுமன்றத்துக்கு பதிலளிக்க ஏற்பாடுகள் செய்யப்படுமென அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆட்சியில் நடந்ததைப்போல் பெயரளவில் இராஜாங்க அமைச்சர்களை வைத்திருக்காது பொறுப்புகளை வழங்க இருப்பதாக ஜனாதிபதி ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முதலாவது அமைச்சரவைக் கூட்டமும் இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெறும்.

நமது நிருபர்


Add new comment

Or log in with...