க.பொ.த. சாதாரண தரம் வரை சுகாதார பாடம் கட்டாயம் | தினகரன்


க.பொ.த. சாதாரண தரம் வரை சுகாதார பாடம் கட்டாயம்

க.பொ.த. சாதாரண தரம் வரை சுகாதார பாடம் கட்டாயம்-Health and Physical Education Subject Compulsory for Grade 6 to 11-Health Ministry

சுகாதார விழிப்புணர்வுக்கான நடவடிக்கை

க.பொ.த. சாதாரண தரம் வரை சுகாதார பாடத்தை கட்டாயமான பாடமாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (05) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போதைய பாடத்திட்டத்திற்கு அமைய, தரம் 06 முதல் 09 வரை மாத்திரம் சுகாதார பாடம் கட்டாயமான பாடமாக காணப்படுவதோடு, க.பொ.த. (சாஃத) பரீட்சைக்காக அது கட்டாயமான பாடமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில், வருடாந்தம் ஏற்படும் மரணங்களில், 75% ஆனவை தொற்றா நோய்களால் ஏற்படுவதாக, அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகளிலிருந்து தெரிய வருகின்றது. அத்துடன், இலங்கையின் சனத்தொகையில் சுமார் 72.5% ஆன மக்கள் மரக்கறி மற்றும் பழ வகைகளை, அவசியமான அளவில் உட்கொள்ளவில்லை எனவும், பெண்களில் சுமார் 44% ஆனோர், போதியளவிலான உடற்பயிற்சியில் ஈடுபடவில்லை எனவும் தெரியவந்துள்ளன.

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சுகாதார நோய்கள் வயது வேறுபாடின்றி பலரையும் பீடித்து கொண்டிருக்கின்றன. சுகாதாரம் தொடர்பான சரியான அறிவின்மையே இதற்கான மிக முக்கிய காரணமாகும். இதனால் சுகாதாரம் தொடர்பில் மக்கள் மத்தியில் அறிவுறுத்துவது அத்தியவசிய ஒன்றாக மாறியுள்ளது.

அதற்கமைய குறித்த நிலைமைகளை கருத்திற்கொண்டு சிறந்த சுகாதார பழக்க வழக்கத்தைக் கொண்ட வாழ்க்கை முறையை உருவாக்கும் பொருட்டு, சுகாதாரம் தொடர்பான சிறந்த அறிவை பெறும் நோக்கில் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய க.பொ.த. சாதாரண தரம் வரை சுகாதார பாடத்தை கட்டாய பாடமாக ஆக்க வேண்டும் எனும் அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனையையும், எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள அடுத்த பாடத்திட்ட சீர்த்திருத்தின் போது, க.பொ.த. சாதாரண தரம் வரை 'சுகாதாரமும் உடற்கல்வியும்' எனும் பாடத்தை கட்டாயமான பாடமாக பாடசாலைகளில் கற்பிக்க வேண்டும் என, கல்வி மறுசீரமைப்புக்கான அறிஞர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள சிபார்சுகளையும் கவனத்திற் கொண்டு, பாடசாலை பாடத்திட்ட திருத்தங்கள் தொடர்பான கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தினை கொண்ட, தேசிய கல்வி ஆணைக்குழுவின் சிபார்களையும் பெற்றுக் கொண்டதன் பின்னர் குறித்த யோசனையை செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 


Add new comment

Or log in with...