திக்குமுக்காடும் சினிமா மொழி | தினகரன்


திக்குமுக்காடும் சினிமா மொழி

The Bicycle Thief

சுவர்களில் போஸ்டர் ஓட்டும் வேலையினை செய்து கொண்டிருக்கும் அந்தோனியா என்ற கதாப்பாத்திரம் வறுமையில் சிக்குண்ட ஒரு படைப்பு. வேலை கிடைத்து அடுத்த நாள் தன்னுடைய சைக்கிள் களவு போனதினை உணர்ந்த அந்தோனியா துன்பத்தின் உச்சிக்கே சென்று விடுகிறான். தனது மகனான புருனோவுடன் திருட்டுப் போன தன்னுடைய சைக்களினைத் தேடி அலைவதினை சினிமா மொழி சிதறாமல் படைப்பாக்கியிருக்கும் இயக்குனர் இறுதியில் அந்தோனி மீதே திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு பொலிஸார் அவனைக் கைது செய்து செல்கின்ற போது மெய்மறந்து அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவனது மகனான புருனோ பல செய்திகளை எமது சமூகத்திற்கு மௌன மொழி மூலமாக எடுத்துரைக்கிறான். இதுவே சினிமாவின் தனித்துவமான மொழியினை புரிந்து கொள்வதற்குரிய சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தியது... 

உலகமெங்கும் பரந்திருக்கும் சினிமா பயிற்சி வகுப்புக்களிலும், சினிமாப் பட்டறைகளிலும் படைப்பினுடைய மொழியினை மாணவர்கள் விளங்குவதற்காக இத்திரைப்படம் திரையிட்டுக் காட்டப்படுகிறது.

சினிமா பற்றிய கல்விக்கு கோட்பாடாக இயங்கும் The Bicycle Thief பல இயக்குனர்கள் புதிய அலை சினிமாவினை வடிப்பதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறது எனலாம். இத்திரைப்படத்தினுடைய பாதிப்பின் காரணமாகவே சத்யஜித்ரே அவர்கள் உலகப் பட வரிசையினுள் முன்னிலையில் இருக்கின்ற பதேர் பாஞ்சாலி படத்தினை உருவாக்கினார் என்பதினை இங்கு நினைவு கூருதல் அத்தியவசியமான ஒன்றாக இருக்கிறது... 

The Bicycle Thief திரைப்படத்தில் இழையோடியிருக்கும் யதார்த்த வாழ்வியல் முறையும், வறுமையின் கொடூரமும்., துணையற்று வாழும் வாழ்க்கை முறையும், நீதியற்ற சட்டச் செயற்பாடுகளும் ஒரு மனிதனின் இயல்பான வாழ்க்கை வழியோடு அபத்தமான காட்சிகளற்று நிறுவப்பட்டிருப்பதினை நாம் அவதானிக்கலாம்.

நடைமுறை வாழ்வினை பிரஸ்தாபிக்கக் கூடிய வகையில் கதைக்களம் நகர்ந்து செல்கின்ற அற்புதமான சினிமா மொழியினை நடுக்கமில்லாமல் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றன விட்டோரியா டிசிகாவின் ஒளிப்பதிவு.

இவ்வாறு ஏராளமான சிந்தனை நுட்பங்களை தன்னகத்தே கொண்டு செப்பனிடப்பட்ட திரைப்படமான The Bicycle Thief சினிமா மொழியினை தேடுகின்றவர்களுக்கு பாடம் கற்பிக்க வந்த ஒரு ஆசான் என்பதில் எந்த சினிமா விமர்சகர்களும் முரண்பட்டதில்லை.

இதுவே ஒரு அற்புதமான படைப்பின் பெருமிதமாகும்...  


Add new comment

Or log in with...