நீரிழிவு | தினகரன்


நீரிழிவு

பாதிப்பை தடுத்துஆரோக்கியமாக வாழ்வது எவ்வாறு?

இன்றைய நவீன யுகத்தில் மனித சமூகம் முகம் கொடுத்துள்ள மிகப் பெரும் ஆரோக்கிய சவாலாக நீரிழிவு விளங்குகின்றது. இந்நோயின் பாதிப்புக்கு எல்லா நாடுகளுமே முகம் கொடுத்துள்ளன. அதாவது வளர்முக நாடுகளை மாத்திரமல்லாமல் வளர்ச்சியடைந்த நாடுகளையும் இதன் அச்சுறுத்தல் விட்டு வைத்ததாக இல்லை.  

என்றாலும் 1980களாகும் போதே இந்நோய்க்கு 108மில்லியன் மக்கள்  உள்ளாகியிருந்தனர். இது தொடர்பில் கவனம் செலுத்திய உலக சுகாதார ஸ்தாபனம் சர்வதேச நீரிழிவு அமைப்புடன் இணைந்து நீரிழிவு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியது.   ஏனெனில் நீரிழிவானது தவிர்த்துக் கொள்ளவும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் கூடிய ஒரு பாதிப்பாகும்.  

அதனால் இந்நோய் குறித்து மக்களை அறிவூட்டவும் அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவுமென சர்வதேச தினமொன்றை அறிவிக்கும் இணக்கத்திற்கு இவ்விரு அமைப்புக்களும் வந்தன. அந்தடிப்படையில் 1991முதல்  நவம்பர் மாதம் 14திகதி உலக நீரிழிவு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதன் பயனாக நீரிழிவு தொடர்பான அறிவும் விழிப்புணர்வும் பொதுமக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்களவில் ஏற்பட்டுள்ளது. என்றாலும் இந்நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது. இந்த வகையில்  தான் 'நீரிழிவும் குடும்பமும்' என்பது இவ்வருட உலக நீரிழிவு தினத்தொனிப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுவாக ஒவ்வொரு மனிதனதும் குருதியில் குறிப்பிடத்தக்களவில் குளுக்கோஸ் (சீனி) காணப்படுகின்றது. இது உண்ணும் உணவு வகைகளின் ஊடாக கிடைக்கப்பெறுகின்றது. அதாவது உணவில் பலவித போஷணைச் சத்துக்கள் உள்ளன. அவற்றில் குளுக்கோஸும் அடங்கும். இந்த குளுக்கோஸ் இனிப்பு பண்டங்களில் ஊடாக நேரடியாகவும் மாபொருட்களான காபோஹைதரேட் உணவுப் பொருட்கள் சமிபாடு அடைந்து பின்னர் குளுக்கோஸாக மாற்றமடைந்தும் குருதியால் உறிஞ்சப்படுகின்றது. இக்குளுக்கோஸை குருதியிலிருந்து கலங்களுக்கு கொண்டு செல்லும்  பணியை இன்சுலின் ஆற்றுகின்றது. இக்குளுக்கோஸ் உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கக்கூடியதாகும்.  

ஆனால்  உடலுக்கு தேவையான அளவு இன்சுலின் உற்பத்தி செய்யப்படாத அல்லது உற்பத்தியதாகும் இன்சுலின் பலனளிக்கும் வகையில் பயன்படுத்தப்படாத நிலை ஏற்படும் போது குருதியில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். அதாவது குருதியில் குளுக்கோஸ் அசாதாரண நிலையில் அதிகரிப்பதே நீரிழிவு என அடையாளப்படுத்தப்படுகின்றது.

அவ்வாறு குருதியில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்குமாயின் குறிப்பாக அதிக தாகம், இரவிலும் பகலிலும் வழமைக்கு மாறாக அதிகம் சிறுநீர் வெளிப்படல், சிறுநீர் கழித்த பின்னர் அவ்விடங்களில் எறும்பு மொய்த்தல் போன்றவாறானவற்றை அவதானிக்கலாம். அத்தோடு உடல் கலங்களுக்கு குளுக்கோஸ் கிடைக்கப்பெறாததன் விளைவாக களைப்பு, அடிக்கடி பசி உணர்வு, நித்திரைக் கலக்கம், உடல்மெலிதல் போன்றவாறான அறிகுறிகளும் வெளிப்படும்.  

இவ்வாறான அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்கள் இரவு சாப்பிட்டுக்கு பின்னர் பத்து மணித்தியாலயங்கள் எதனையும் சாப்பிடாது இருந்து இரத்தத்தை வழங்கி (FBS) பரீட்சிக்கும் போது 60 – 110mg/dl என்றபடியும் சாப்பிட்ட பின்னர் இரண்டு மணித்தியாலயங்கள் கடந்த பின்னர் குருதியை வழங்கி (PPBS) பரீட்சிக்கும் போது 80 – 140 mg/dl என்றபடியும் காணப்பட்டால் குருதியில் குளுக்கோஸின் மட்டம் சாதாரண அளவில் உள்ளது என்ற முடிவுக்கு வரலாம். ஆனால் இம்மட்டங்களை விடவும் குளுக்கோஸ் அதிகரித்து காணப்படுமாயின் அது நீழிரிவு என வரையறைப்படுத்தப்பட்டு இருகின்றது.  

அதேநேரம் இவ்விதமான அறிகுறி எதுவும் சிலருக்கு வெளிப்படாத நிலையிலும் நீரிழிவு ஏற்படலாம். அதனால் குடும்பத்தில் எவராவது நீரிழிவுக்கு உள்ளாகி இருந்தால்  அக்குடும்பத்தைச் சேர்ந்த ஏனையவர்களும்   உடலில் வழமைக்குமாறான அறிகுறிகள் வெளிப்படுபவர்களும் குருதியில் குளுக்கோஸ் மட்டத்தை பரீட்சித்துக் கொள்வதே நல்லது என்று கொழும்பு தேசிய தேசிய வைத்தியசாலையின் அகச்சுரப்பியல் நிபுணர் மனில்க சுமணதிலக்க குறிப்பிடுகின்றார்.  

இந்த நீரிழிவு நோயை எடுத்து நோக்கினால் இதில் மூன்று வகைகள் உள்ளன. அவற்றில் முதல் வகை சிறுகுழந்தைகளுக்கும் இளம் பிள்ளைகளுக்கும் ஏற்படக்கூடியதாகும். இவ்வகை நீரிழிவுக்கு உள்ளானவர்களின் சதையீ ஒன்றில் இன்சுலினைச் சுரக்காது இல்லாவிடில் சுரப்பது குறைவாகக் காணப்படும். இவ்வாறானவர்களுக்கு செயற்கையாக இன்சுலினை வழங்க வேண்டும்.  

அதேநேரம் இரண்டாம் வகையைப் பொறுத்த வரை இங்கு இன்சுலின் காணப்படும். ஆனால் அவை கலங்களால் உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை. இந்நிலைக்கு உணவுக்கட்டுப்பாடு அல்லது மருந்து பொருட்கள் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.  சில சமயம் இவ்வகைக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு செயற்கையாக இன்சுலினை வழங்க வேண்டும். ஆனால் இவ்வகை நீரிழிவை சுமார் ஐம்பது வீதம் தவிர்த்துக் கொள்ளவோ அல்லது முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவோ முடியும்.  

அதேநேரம் கர்ப்பகாலத்தில் சில பெண்களுக்கு குருதியில் குளுக்கோஸ் மட்டம் அதிகரித்துக் காணப்பட முடியும். இது நீரிழிவின் மூன்றாம் வகையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது கர்ப்பகாலத்திலும் பிரசவத்தின் பின்னரும் கர்ப்பிணி பெண்மணியின் குருதியில் குளுக்கோஸ் அதிகரித்து காணப்படலாம்.

அது சொற்ப காலத்தில் சாதாரண மட்டத்திற்கு குறைவடைய முடியும். என்றாலும் இந்நிலைமை பிற்காலத்தில் நீரிழிவு ஏற்ப வழிவகுக்க முடியும் என்பது மருத்துவர்களின் அபிப்பிராயமாகும்.   

அதனால் குருதியில் குளுக்கோஸின் மட்டம் அதிகரிக்காது பேணிக் கொள்ள வேண்டும். இவ்விடயத்தில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில் குருதியில் குளுக்கோஸின் மட்டத்தை உரிய ஒழுங்கில் பேணிக்கொள்ளத் தவறும்பட்சத்தில் பலவிதமான நோய்களுக்கும் பாதிப்புகளுக்கும் முகம் கொடுக்க நேரிடும். அதாவது இதய நோய்கள், நரம்புத்தொகுதியில் பலவீனம், பாலியல் பலவீனம், கால்களுக்கான குருதி வழங்கலில் சீரின்மை, இரு கால்களிலும் விரைப்பு தன்மை ஏற்படல், காயங்கள் குணமடையாமை, பக்கவாதம் ஏற்படல், விழிவெண்படலம் ஏற்படல், பார்வை பாதிக்கப்படல், சிறுநீர்த்தொற்று, சிறுநீரகம் பாதிப்படைதல் உள்ளிட்ட பலவித பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம்.  

அதன் காரணத்தினால்  குருதியில் குளுக்கோஸின் மட்டத்தைச் சீராகப் பேணிக்கொள்ளக்கூடிய வகையில் உணவுப்பழக்க வழக்கத்தையும், உடல் எடையையும் பேணிக் கொள்வதிலும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதிலும், புகைப்பிடிப்பதைத் தவிர்த்து கொள்வதிலும் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போது நீரிழிவு ஒரு அச்சுறுத்தலாகவே இராது.  

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவிப்பின்படி, இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு ஒரு பொதுசுகாதாரப் பிரச்சினையாக வளர்ச்சியடைந்துள்ளது. 1980கள் 90கள் முதல் இந்நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. 1980இல் 108மில்லியனகளாகக் காணப்பட்ட இந்நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கை 2014ஆம் ஆண்டாகும் போது 422மில்லியன்கள் வரை அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த அரை நூற்றாண்டு காலப்பகுதியில் இந்நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. இதன் விளைவாகவே இந்நோய் காரணமாக எட்டு வினாடிகளுக்கு ஒருவர் உலகில் மரணடைவதாக இந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கின்றது.  

அதேநேரம் இந்நோய் காரணமாக 2016ஆம் ஆண்டில் 16இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு குருதியில் குளுக்கோஸ் மட்ட அதிகரிப்பினால் 2012இல் 22இலட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் நீரிழிவு காணமாக ஏற்படுகின்ற மரணங்களில் அரைவாசிக்கு மேற்பட்டவைக்கு குருதியில் அதிக குளுக்கோஸ் காரணம் என்றும் அந்த ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த வகையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 2006இல் 18வீதமாகக் காணப்பட்ட நீழிரிவு 2018ஆண்டாகும் போது 24வீதம் வரை அதிகரித்திருப்பதாக சிடம் வைத்தியசாலையின் தலைவரும் அகச்சுரப்பியல் நிபுணருமான டொக்டர் பிரசாத் கட்டுலந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

'குறிப்பாக கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே இந்நோய்க்கு அதிகம் உள்ளாகியுள்ளனர்.

என்றாலும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் நீரிழிவினால் பாதிக்கப்படாமல் இல்லை' எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.   ஆகவே நீரிழிவிலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்வதில் ஒவ்வொருவரும் விஷேட கவனம் செலுத்த வேண்டும். அதனை ஒரு பொறுப்பாகவும் கடமையாகவும் கருதி செயற்படுவது இன்றியமையாததாகும். 

மர்லின் மரிக்கார்


Add new comment

Or log in with...