உயிர்கள் | தினகரன்


உயிர்கள்

காற்றில் மிதந்துவந்திருந்த பறவைகளின் உயிர்களை ஒரு கூடையில் சேமித்துக் கொண்டிருந்தேன். உயிர்களை சேர்ப்பதே எங்களின் தொழில். நாங்கள் இருபத்திமூன்று பேர் இருக்கிறோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான உயிர்களைச் சேர்ப்பவர்கள்.

ஆனால் எந்த உயிர்களையும் கொல்ல மாட்டோம். கொன்று விடமால் ஓர் உடலின் உயிரினை எப்படி உங்களால் சேமிக்க முடியும்? என நகரவாசிகள் கேட்டபோது, நாங்கள் அமைதியாய் இருந்தோம்.

அது எங்கள் தொழில் ரகசியம் அதனை வெளியில் சொல்வது தெய்வக் குற்றம் போன்றது. மனிதர்களின் உயிர்களை சேமிப்பவன் எங்களில் இருக்கிறான். ஊசிகளைக் குத்தியோ, கத்திகளால் வெட்டியோ உயிர்களைச் சேமிப்பதில்லை. மிகப்பெறுமதியான பொருட்களில் உயிரே மேன்மையானது. களவாடிச் சந்தைகளில் உயிர்; வாங்குகிறார்கள்.

எங்கும் பரவியிருக்கும் உயிரினால் களவாடிச் சந்தை நிறைந்திருந்தது. உயிர்களின் மீது நடனமாடுகின்ற மனிதர்களுக்கு அதிகாரம் இலகுவில் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். ஆனால் மயானத்தில் புதைக்கப்பட்ட உயிரிலே நடக்க வேண்டும்.

இதுவரை காலமும் யாரிடமும் அகப்படாத அரிய வகை உயிரது. எப்பொழுதுதாவது எங்கள் கண்களில் அந்த உயிர் மாட்டிவிடாதா என பேராசை கொண்டிருந்தோம். உயிர் கிடைத்துவிட்டால் யாருக்கு கொடுக்கலாம்? எனும் பெருத்த விவாதம் எங்களுக்குள் ஏற்பட்டிருந்தது. மயான பாதுகாப்பாளர்களுக்கு கொடுத்து விடலாம் என்றேன். அவர்களே நிறைவான ஆத்மாவினை எமக்கு வழங்குவர். அவர்களது ஆடையின் வெண்மையினை நாம் உணர்ந்து விடலாம். அவர்களின் உயிரினையும் பெற்று விடலாம். அவர்களின் உயிர் மிக சக்தி வாய்ந்தது. வடிகட்டி பொசுக்குகின்ற போது அவை பெரும் கோபுரங்களாக உயர்வடையும். அதிலிருந்து ஏராளமான எமது நாட்டின் அடிமைகளைக் காப்பாற்றலாம். கூர்மையான கட்டிட அமைப்புக்களை உருவாக்கும் மனிதர்களையும், வீடுகளை குளிர்மைப்படுத்தும் பெண்களையும் அவர்கள் பக்கம் வைத்திருக்கிறார்கள். அவர்களின் கைப்பற்றலில் அமிழ்ந்து பாலைவன வெயிலில் ஆட்டு மந்தைகளுடன் எம்மினம் சிதறிக்கிடக்கிறது. 

இப்படியே பல காலங்கள் கடந்தன. எங்களது நகரவாசிகள் உயிரின் மீது மிகுந்த காதலினைக் கொண்டிருந்தனர். பிரதான வீதியில் அமைந்துள்ள மயானத்தின் விரிந்த பரப்பில் தாங்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்பினர்.

அவர்களின் உயிர் இலகுவாக பயணிப்பதற்கு இதுவே சிறந்த இடமென நம்பினர். ஆரம்பத்தில் தங்களது அறியாமையினால் இம் மயானத்தை வெறுத்ததாக கூறிப் புலம்பினர். அவர்களது உயிர்களை நிறைத்து விட்டால் மயானம் சுடுகாடாகிவிடும். சுடுகாட்டிற்கும் மயானத்திற்கும் இடையிலான வேறுபாட்டினை புரிந்து கொள்ளும், அல்லது தேடும் வாசகர்களால் மட்டுமே இக் கதையினை புரிந்து கொள்ள முடியும். அவனே எனது உயிரும் கூட.


Add new comment

Or log in with...