இலங்கையில் மற்றொரு கிரிக்கெட் மைதானம் | தினகரன்


இலங்கையில் மற்றொரு கிரிக்கெட் மைதானம்

இலங்கை கிரிக்கெட் மற்றும் இலங்கை தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஒன்றான ஸ்ரீலங்கா டெலிகொம் ஆகியன இணைந்து பாதுக்க பகுதியில் புதிய கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை கைச்சாத்திட்டுள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொமிற்கு சொந்தமான 36 ஏக்கர் நிலப்பரப்பில் நவீன வசதிகள் அடங்கிய கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த காலங்களில் நடைபெற்று வந்தன. இந்தநிலையில், இரு தரப்புகளும் தற்போது ஒன்றிணைந்து மைதானம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளன.

மைதானத்தை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் செயற்படுத்தவுள்ளதுடன், கிரிக்கெட்டுக்கான கட்டமைப்புகளை இலங்கை கிரிக்கெட் மேற்கொள்ளவுள்ளது.

இதில், நவீன வசதிகள் கொண்ட மைதானம், ஐந்து ஆடுகளங்கள், வீரர்களுக்கான உடைமாற்றும் அறை, பயிற்சி ஆடுகளங்கள், நவீன முறையிலான வடிகாலமைப்பு வசதி மற்றும் ஏனைய கிரிக்கெட் மைதானம் ஒன்றுக்கு தேவையான வசதிகளை நவீன முறையில் அமைக்க கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கை கிரிக்கெட் என்பன ஒன்றிணைந்து அமைத்துள்ள முகாமைத்துவ குழுவொன்று மைதானத்தின் உட்கட்டமைப்பு பணிகளை நடத்தவுள்ளன. இவ்வாறு அமைக்கப்படும் இந்த மைதானத்தில் உள்ளூர் போட்டிகள், மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள் மற்றும் வளர்ந்து வரும் சர்வதேச அணிகளுக்கு இடையிலான போட்டிகளும் நடத்தப்படும் என கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

புதிய கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேன ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...