பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் ஒழுங்கு | தினகரன்


பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் ஒழுங்கு

பச்சிளம் குழந்தைகளின் செய்கை மொழியை எளிதில் புரிந்து கொள்ள இயலாது. அழுகையும், சிரிப்புமே அக்குழந்தையின் அழகிய மொழிகளாகும். அதனை உணர்ந்து அவர்களை  வளர்ப்பது என்பது பெற்றோருக்கே உண்டான தனிக்கலை. பச்சிளம் குழந்தைகளின் செயல்பாடுகள் புரியாமல் சில நேரங்களில் தாய்மார்கள் எரிச்சலடைவதும் உண்டு. அதனால் குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்வது அவசியமானது. 

குறிப்பாக ஒவ்வொரு குழந்தையும் முதலில் விரும்புவது தாயின் அரவணைப்பையும், அருகாமையையும் தான். அந்த கதகதப்பு கிடைக்காத பட்சத்தில் அதற்காகவே அழுகையை தொடங்கிவிடுவர். அதனால் குழந்தைகள் அழும் போது அவர்களை தூக்கி கொஞ்சினால் குழந்தைகள் உடனே அழுகையை நிறுத்திவிடுவர். அச்சமயம் குழந்தைகளுக்கு உணவூட்டுதல், மசாஜ் அல்லது குளிக்க வைக்கவோ செய்யலாம்.  அதேநேரம் பச்சிளம் குழந்தையைத் தூக்கும்போது முதுகுப் புறமாகப் பிடித்து அதிகம் தூக்கக்கூடாது. அது குழந்தையின் முள்ளந்தண்டைப் பாதிக்கும் என்று சிலர் கூறுகின்றனர். இதில் உண்மையில்லை. பின்புற மற்றும் கழுத்துத் தசைகளையும், முள்ளந்தண்டுக்கு துணையாக உள்ள தசைகளையும் வலுப்படுத்த இது உதவும்.  மேலும் குழந்தைக்குப் பாலூட்டும்போது மார்பகத்தை நோக்கி குழந்தையை அழுத்தக்கூடாது. அவ்வாறு செய்தால் குழந்தை அதன் இயல்பின்படி தனது தலையைப் பின்னோக்கித் தள்ளும். எனவே கைகளில் லேசாக ஏந்தி அதற்கு ஏற்ற வகையில் பாலூட்டுவதே சிறப்பானது. அதன் ஊடாக குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதையும் தவிர்த்துக்கொள்ளலாம். எனினும் சிலர் படுத்துக்கிடந்த நிலையில் பாலூட்டுவர். இது சில சமயங்களில் ஆபத்தை ஏற்படுத்த முடியும். 

இவை இவ்வாறிருக்க, இளந்தாய்மார் பச்சிளம் குழந்தையை எவ்வாறு குளிப்பாட்டுவது என்பதை அறிந்திராத காரணத்தினால் திகைப்படைகின்றனர். அச்சமயம் குழந்தை அழுதால் என்ன செய்வது என்று புரியாமல் தடுமாற்றமடைகின்றனர். இவ்வாறான தாய்மார் பெரியவர்கள் அல்லது கணவரின் துணையோடு குழந்தையை குளிப்பாட்டலாம். எப்பொழுதுமே வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்ட வேண்டும். குழந்தையைக் குளிப்பாட்டிய பின்னர் பின் மெல்லிய உலர்ந்த துணியைப் பயன்படுத்தி அவர்களை நன்கு துடைத்தெடுப்பது நல்லது. 

பொதுவாக குழந்தைகளுக்கு காற்றோட்டமானதும், மெல்லியதுமான துணி ஆடைகளை அணிவிக்கலாம். அது குழந்தையின் இயல்பான உடல் வெப்பநிலையைப் பராமரிக்க உதவுவதுடன், புற வெப்பநிலையிலிருந்தும் பாதுகாக்கும் குழந்தையின் இடுப்பு ஆடையை அடிக்கடி மாற்றத் தவறுவதால் நோய்த்தொற்று ஏற்படலாம். குழந்தையின் சருமத்தைச் சுத்தமாகவும், உலர்வாகவும், வாசனையற்றும் வைத்துக்கொள்வது அவசியமானது. அது நோய்தொற்றில் இருந்து பாதுகாக்கும். 

இவை இவ்வாறிருக்க, குழந்தையை தூங்கவைக்க ஒரு சிலர் மிகவும் சிரமப்படுவர். அதனால் குழந்தைக்கு வெளியில் வேடிக்கை காட்டுதல், காரில் அழைத்துச் செல்லுதல் என பணத்தையும், நேரத்தையும் இவ்வாறானவர்கள் வீணாக்குவர். ஆனால் இது போன்ற தேவையற்ற செயல்களைத் தவிர்த்து, குழந்தையை அதன் சக்கர நாற்காலியில் வைத்து மெதுவாக உருட்டலாம். அப்போது ஏற்படும் மெல்லிய அதிர்வு, நகர்வுக்குக் குழந்தை பழகி தூங்கத் தொடங்கி விடும். அது மாத்திரமல்லாமல் குழந்தையின் நெற்றி, நெஞ்சு அல்லது பின்புறத்தில் மெதுவாகத் தட்டுவதும் ஒரு தூண்டலாகச் செயல்பட்டு குழந்தையைத் தூக்கத்தில் ஆழ்த்திவிடும் என்பது சுகாதாரத் துறையினரின் கருத்தாகும்.    


Add new comment

Or log in with...