2021இல் ரஜினி நிகழ்த்த போகும் அதிசயம் என்ன? | தினகரன்

2021இல் ரஜினி நிகழ்த்த போகும் அதிசயம் என்ன?

தமிழ்நாட்டில் 2021-இல் சட்டசபைத் தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் தொடங்குவதற்கு முன்பே அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது.

ரஜினியும் கமலும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு. இந்த நிலையில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தனித்தனியே பேட்டி அளிக்கையில் 'நாங்கள் இருவரும் தேவைப்படும் நேரத்தில் அவசியம் ஏற்பட்டால் இணைவோம்' எனத் தெரிவித்துள்ளனர்.

இதை மற்றக் கட்சிகள் கிண்டல் செய்து பேசின. இருவரும் வேறு வேறு சித்தாந்தங்களை முன்வைத்து வருகின்றனர். இவர்களுக்கிடையே எப்படி ஒத்துப் போகும் என்றெல்லாம் கேள்வி எழுந்தது. இந்த நிலையில் கோவாவில் சிறப்பு விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து கோவாவிலிருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் " கமலுடன் இணைந்தால் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தேர்தல் நேரத்தில் சூழலைப் பொறுத்து எடுக்க வேண்டிய முடிவு. மேலும் நான் தொடங்கும் கட்சி உறுப்பினர்களுடன் கலந்து பேசி எடுக்கப்படும். அப்போது சொல்கிறேன். இப்போது பேச விரும்பவில்லை" என்றார்.

"திராவிட மண்ணில் ஆன்மிக அரசியல் எடுபடாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறாரே" என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு ரஜினி, "2021-இல் சட்டசபைத் தேர்தலில் தமிழக மக்கள் அற்புதத்தை, அதிசயத்தை 100-க்கு 100 சதவீதம் நிகழ்த்துவார்கள்" என்றார்.

ரஜினியை ஆளுக்கு ஒரு பக்கமாக அரசியலுக்கு இழுத்துக் கொண்டுள்ளனர். எல்லாப் பக்கமும் திரும்பி சிரித்தபடி சமாளித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. இதுதான் உண்மை.

வழக்கமாகவே ரஜினி பேசும் பேச்சு எல்லாமே சர்ச்சையில்தான் போய் முடிகின்றன. ஆனால் கடந்த சில நாட்களாக அவர் பேசி வருவது பலத்த விவாதங்களையும், சந்தேகங்களையும் கிளப்பி வருகிறது. ரஜினிக்கு புது நிறம் பூசும் விதமான பேச்சுக்களாகவும் இவை உள்ளன. அதாவது "நான் காவி நிறம் அல்ல" என்று ரஜினியே மக்களுக்கு சொல்லிக் கொள்வது போல உள்ளது அவரது சமீபத்திய பேச்சுக்கள்.

இந்த நிலையில்தான் அவரது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்த பேச்சு வந்து சேர்ந்தது. கமல் விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், "முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி வந்தது அதிசயம், அற்புதம்" என்று பேசப் போக அது பெரிய சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. எந்த இடத்தில் பேசினால், என்ன மாதிரியாக அது வைரலாகும் என்று தெரிந்துதான் அவர் பேசியதாகக் கூறப்படுகிறது.

அவரது பேச்சால் அ.தி.மு.கவினர் கொதிப்படைந்தனர். கடுப்பா னார்கள். ஆனால் அ.தி.மு.க பெருந்தலைகள் அதை இலாவகமாக எதிர் கொண்டு ரஜினிக்கே திருப்பிப் போட்டனர். அதாவது "ரஜினி உண்மையில் எடப்பாடியாரை பாராட்டியே பேசியுள்ளார். அவர் சொன்ன அதிசயம், அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரப் போகிறது என்பதுதான். எனவே ரஜினியை நாம் பாராட்டியாக வேண்டுமே தவிர விமர்சிக்கக் கூடாது" என்று சொல்லவும், ரஜினி ரசிகர்கள் குழம்பி விட்டனர்.

அது மட்டுமன்றி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஒரு படி மேலே போய், "தமிழர்கள் ரஜினி என்ற வெற்று பிம்பத்தை அடித்து நொருக்கி அதிசயம் நிகழ்த்தப் போகிறார்கள். அதுதான் 2021இல் நடக்கப் போகிறது" என்று கூற ரஜினி ரசிகர்களுக்கு இப்போது தர்மசங்கடம் அதிகரித்துள்ளது.

அதேசமயம், ரஜினி இப்படிப் பேசுவதற்கும் கூட காரணம் இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது தன்னைச் சுற்றி விவாதம் இருந்து கொண்டே இருந்தால்தான் நல்லது என்று அவருக்கு யாரேனும் ஆலோசனை கொடுத்துள்ளனரா என்ற கேள்வியும் கூட எழுகிறது.


Add new comment

Or log in with...