நயனத்தின் எழுத்துக்கள் | தினகரன்


நயனத்தின் எழுத்துக்கள்

எம்.டி.வாசுதேவன்நாயர் படைப்புக்கள் 

எழுத்துலகம் கற்றுத்தந்த விரிந்த பரப்பினில் படைப்பாளர்கள் மிக முக்கியமானவர்கள். அவர்களின் மொழி வகையிலிருந்து பிறப்பெடுத்துக் கொண்ட எழுத்துக்களின் வாழ்வினை நாம் மிக நேர்த்தியாக தரிசிக்க முடியும். எழுத்துக்கள் மாய வித்தைகளின் கூட்டாகவும், எதிர்பாரா நண்பனாகவும் படைப்பாளர்களின் வாழ்வில் ஒன்றித்து விடுகிறது. ஒரு எழுத்தாளனால் எழுதப்படுகின்ற எழுத்துக்கள் எப்பொழுதும் அவனுடைய மனதின் பிரதிபலிப்பாகவே இருக்கும். அதிலும் இலக்கியம் சார்ந்த படைப்புக்களை எழுதுகின்ற படைப்பாளிகளின் சொற்களை மீள் பரிசீலனை செய்கின்ற போது அவை உள் மனதின் ஏக்கங்களாகவும், சமூகம் மீதான அன்பின் வெளிப்பாடாகவும், வாழ்க்கையின் போராட்ட பகுதிகள் சார்ந்த குறியீடாகவும் பிரதிபலிக்கும் என்பதினை நாம் அவதானிக்க முடியும். 

மலையாள எழுத்துலகின் கதை சொல்லியாகவும், திரைக்கதையாசிரியராகவும் வெளிப்பட்டு அற்புதமான இலக்கியங்களின் உரித்தாளனான எம்.டி. வாசுதேவன் நாயர் மிகக் காத்திரமான படைப்பாளியாவார். இலக்கியப் பரப்பினுள் மிகவும் சக்தி வாய்ந்த படைப்புக்களாக பெரும் வகிபங்கினைக் கொண்டியங்கும் எம்.டி. வாசுதேவனின் படைப்புகள் காலத்தால் மறக்கடிக்கப்பட முடியாதவை. அதிலும் மாய விம்பங்களை உடைத்து மனித வாழ்வின் யதார்த்தங்களை பதிவு செய்யும் சிறுகதைகள், நாவல்கள் மிகவும் அற்புதமானவை. மலையாள மக்களினதும் அவர்களது வாழ்வினதும் நிஜ முகத்தினை வெளிப்படுத்தும் எம். டி. வாசுதேவன் நாயரின் பாத்திர வார்ப்புகள் இலக்கியமாக அன்றி வரலாற்றின் மீதான ஆதாரங்களுக்காக பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்களாகும். இன்றைய இலக்கியப் போக்கினைப் பொறுத்தவரை மாயஜாலங்கள் மீதான கதைகள் அதிகம் இறக்குமதி செய்யப்படுகின்ற காலமாக மாறியிருப்பதினை நாம் அவதானிக்கலாம். அந்த நிலைப்பாட்டில் இருந்து வேறுபட்டு மண் வாசனையின் நுகர்வினையும், அம்மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களையும், அவர்கள் செதுக்கும் நிலங்கள் பற்றியும், அவர்களின் கனவுகள் பற்றியும் யதார்த்த வாழ்வின் அம்சங்களைப் பேசும் படைப்புகள் அவசியம் வெளிவர வேண்டியவையே. அவ்வாறான படைப்புக்களின் வருகை மூலமாகத்தான் எமது வருங்கால ஒரு சமூகத்தின் மீது எமது கபடமற்ற வாழ்வினை முன் வைக்க முடியும் என்பதினை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எம். டி வாசுதேவன் நாயரின் படைப்புக்களில் இவற்றினை மிகச் சுலபமாக அனுபவிக்கலாம். 

சாகித்திய அகடமி, கேரள அரசின் விருது, பத்மபூஷண விருது என ஏராளமான விருதுகளை தனது படைப்புக்களின் மூலமாக பெற்றுக் கொண்டார் எம்.டி. வாசுதேவன் நாயர். வளர்த்து மிருகங்கள் எனும் சிறுகதை மூலமாக எழுத்துலகத்திற்கு அறிமுகமாகி காலம், இரண்டாமிடம் நாவல்கள் மூலமாக தனக்கான அடையாளத்தினை வகுத்துக் கொண்டார். பெரும்பாலும் இவரின் படைப்புக்கள் தமிழில் வெளிவந்துள்ளன. இலக்கியங்களுக்கு எப்பொழுதும் இருக்கின்ற சிறப்பம்சம் யாதெனில் காலத்திற்கு காலம் அது புதுமையான மனிதர்களை அறிமுகப்படுத்துவதுதான்.

சந்தர்ப்ப நிலைக்கு ஏற்ப படைப்புக்களைத் தரக் கூடிய மனிதர்களையும், தீர்க்கதரிசனம் கூறக்கூடிய படைப்பாளிகளையும் சமூகத்தின் முன் அடையாளப்படுத்தக் கூடிய பெரும் பங்கினை இலக்கியங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

அவ்வகையின் மலையாள உலகின் பெரும் கதை சொல்லி எம்.டி. வாசுதேவன் நாயர் எழுத்துக்களின் ரம்மியமாவார்.  


Add new comment

Or log in with...