Tuesday, April 23, 2024
Home » கச்சதீவு பெருவிழா இன்று ஆரம்பம் முன்னேற்பாடுகள் சகலதும் பூர்த்தி

கச்சதீவு பெருவிழா இன்று ஆரம்பம் முன்னேற்பாடுகள் சகலதும் பூர்த்தி

- இலங்கை, இந்திய பக்தர்கள் 7,500 பேர் ஒன்று கூடுவர்

by Rizwan Segu Mohideen
February 22, 2024 8:02 am 0 comment

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயப் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாக யாழ், மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் (20) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் 23, 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.இந்நிலையில், திருவிழாவுக்காக சுமார் 07ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவரென எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் இந்தியாவிலிருந்து மூவாயிரத்து ஐநூறு பேரும், இலங்கையிலிருந்து நான்காயிரம் பேரும் கலந்து கொள்வர்.

உணவு வழங்கல் விடயம் ஆரம்பத்தில் நெடுந்தீவு பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தபோதும், தற்போது அப்பணிகள் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கச்சதீவுப் பகுதி நெடுந்தீவு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசம். இந்த அடிப்படையில் நெடுந்தீவு பிரதேச சபை பணிகளை முன்னெடுக்கும். நெடுந்தீவு கூட்டுறவுச் சங்கம் விற்பனை நிலையம் ஒன்றை அமைக்கும். உணவு விற்பனையில் ஈடுபட விரும்புவோர் நெடுந்தீவு பிரதேச சபைக்கு முன்னதாக அறிவித்து அனுமதி பெற்று கச்சத்தீவில் பணியிலுள்ள சுகாதார பிரிவின் அனுமதி பெற்று விற்பனையில் ஈடுபடமுடியும்.

அதேவேளை, ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி, வேலணை, ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி, மலேரியா தடுப்புப் பிரிவினர், ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையின் குழுவினர் சுகாதாரப் பணிகளில் ஈடுபடவுள்ளனர். கச்ச தீவுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பிலும் மாவட்ட செயலாளர் விளக்கமளித்தார். நெடுந்தீவு மற்றும் குறிக்கட்டுவான் இறங்குதுறைகளிலிருந்து தனியார் படகுகள் மூலம் சேவையில் ஈடுபடலாம். இம்முறை ஊர்காவற்றுறையும் பயணத்தை மேற்கொள்ளும் இறங்குதுறையாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இறங்குதுறைகளில் கடற்படை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தபடுவர்.

தனியார்படகுகளில் வருபவர்கள் அவர்களது தனிப்பட்ட பாதுகாப்புக் கருதி அந்தந்த கடற்படை முகாம்களில் பதிவை கட்டாயம் மேற்கொள்ளவேண்டும். கடந்த முறையைப் போல இருவழிக் கட்டணத்தையும் ஒருபடகுக்கு செலுத்தாது, செல்லும் பொழுதும் வருகை தருகின்ற பொழுதும் தனித்தனியே கட்டணங்களை அறவிடலாம்.

நாளை (23) காலை 05 மணியிலிருந்து 10 மணிவரை படகு சேவை நடைபெறும். கச்சதீவுக்கான முதலாவது படகு காலை 06 மணி முதல் சேவையில் ஈடுபடும். வடதாரகை படகு அத்தியாவசிய சேவைகளுக்காக இலவச சேவையில் ஈடுபடும்.

இவ்வருடம் படகுகளின் தரத்தை பரிசோதனை செய்யும் நிறுவனம் 34 படகுகளைச் சோதனையிட்டு 29 படகுகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கியுள்ளது. இம்முறை வழமையைப் போலன்றி கச்சத்தீவு திருவிழாவில் பணியில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT