மன்னார் பிரதேச சபை பட்ஜட் தோற்கடிப்பு | தினகரன்


மன்னார் பிரதேச சபை பட்ஜட் தோற்கடிப்பு

மன்னார் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் நேற்று (21) 12வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.  

மன்னார் பிரதேச சபை 21உறுப்பினர்களைக் கொண்டது ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 6உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய கட்சி ஆதரவுடன் கடந்த 10.05.2018தொடக்கம் ஆட்சி அமைத்து தவிசாளர் சாகுல் கமில் முகமட் முஜாகிர் தலைமையில் மன்னார் பிரதேச சபையின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துது.  

இந்த நிலையில் நேற்று காலை 10மணியளவில் சபை நடவடிக்கை ஆரம்பிக்க இருந்த போதும் சுமார் 11மணியளவிலேயே சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டது.  

2020ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் முறைப்படி தவிசாளரினால் மன்னார் பிரதேச சபை செயலாளருக்கு வழங்கப்பட்டு ஆதரவளிக்கும் பிரேரணை தவிசாளரினால் முன்வைக்கப்பட்டது.  

அதனையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் யூட் கொண்சாள் குலாஸ் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக கட்சி சார்பாக தன்னிச்சையாகச் செயல்படுதல், நம்பகத்தன்மையின்மை, 2019ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் செயல் படுத்தப்படாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தவிசாளர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிரான பிரேரணையை முன்வைத்தார்.  

இதை உறுப்பினர் ஞானப்பிரகாசம் ரிச்சேட் முன்மொழிய உறுப்பினர் பாலசிங்கம் கதிர்காமநாதன் வளி மொழிந்தார்.  

இதற்கு ஆதரவான உறுப்பினர்கள் தமது ஆதரவை தெரிவித்த நிலையில் வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்த தவிசாளர் நீதிக்குழுவின் தீர்மானத்திற்கமைவான திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய போதும் உறுப்பினர்கள் சிலர் தகுந்த காரணங்களை வெளிப்படுத்திய நிலையில் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் சரியானதென வாதிட்ட போதும் இதற்கு ஆதரவு இல்லாத நிலையில் வாக்கெடுப்பு இடம் பெற்று திட்டத்திற்கு ஆதரவாக 7உறுப்பினர்களும் எதிராக 12உறுப்பினர்களும் வாக்களித்ததுடன் உதவித் தவிசாளர் இஸ்மாயில் முகமட் ஸ்சதீன் நடு நிலையாகச் செயல் பட்டார்.  

ஒரு உறுப்பினர் அமர்வுக்கு சமுகமளிக்காமலும் வரவு செலவுத் திட்டம் ஆதரவு இல்லாமல் 2020 ஆம் ஆண்டிற்கான மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டது.    

மன்னார் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...