Friday, March 29, 2024
Home » படகு உரிமையாளர்கள் போராட்டம்

படகு உரிமையாளர்கள் போராட்டம்

- கச்சத்தீவுக்கு வரும் யாத்திரிகர்கள் சிரமம்

by Prashahini
February 22, 2024 9:05 am 0 comment

மீனவர்களுடைய புறக்கணிப்பு காரணமாக படகு சேவைகள் இடம்பெறாததால், கச்சத்தீவுக்கு வருவதற்கு விரும்புகின்ற யாத்திரிகர்கள் அந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள். ஆயினும், தாங்கள் இத் தடைகளை எதிர்கொண்டு இயன்றவரையில் கச்சத்தீவு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக இராமேஸ்வரம் பங்கு தந்தை தமக்கு அறிவித்துள்ளதாக யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.

இந்திய இலங்கை நட்புறவின் சின்னமாக விளங்கும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய உற்சவம் எதிர்வரும் 23,24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை சிறையில் உள்ள நான்கு இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவருவதுடன் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர்.

அதனடிப்படையில் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக படகுகள் இயக்கப்படாததால் இந்த ஆண்டு திருப்பயணத்தை இரத்து செய்வதாக கச்சத்தீவு திருப்பயண ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரை தொடர்புகொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

கச்சத்தீவு திருவிழாவிற்காக இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்தும் இலங்கையில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதரவுள்ளனர். இவ் வருடம் இலங்கையிலிருந்து ஏறக்குறைய 5000 வரையிலான பக்தர்களும் இந்தியாவிலிருந்து 3000 பேரையான பக்தர்களும் பங்குபெற இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

எதிர்வரும் 23ஆம் திகதி மாலையிலே உற்சவத்திற்கான ஆயத்த வழிபாடு நடைபெறும். அதனைத் தொடர்ந்து 24 ஆம் திகதி காலை திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். இலங்கையிலிருந்து பக்தர்கள் புறப்படுவதற்காக 23ஆம் திகதி அதிகாலை 5.00 மணியிலிருந்து 10.00 மணிவரை யாழ். மத்திய பஸ் நிலையத்திலிருந்து குறிகாட்டுவான் துறைக்கான பஸ் போக்குவரத்துக்கள் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து குறிகாட்டுவான் இறங்குதுறையிலிருந்து கச்சத்தீவுக்கான படகு சேவைகள் நடைபெறும். அது போன்று 24ஆம் திகதி திருநாள் முடிந்த பிற்பாடு பக்தர்கள் திரும்பி வருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கான குடிநீர் வசதிகள், உணவு வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் அங்கு வருகின்ற பக்தர்கள் தங்களுக்கு தேவையான குடிநீர், உணவுகளை கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதுபோல இந்தியாவிலிருந்து வருகை தரவுள்ள பக்தர்கள் பல தடைகளை எதிர் கொள்வதாகவும் அறிவித்திருக்கிறார்கள். குறிப்பாக இராமேஸ்வர மீனவர்களுடைய போராட்டம் காரணமாக படகு உரிமையாளர்கள் போராட்டம் செய்வதனால் கச்சத்தீவுக்கு வருவதற்கு விரும்புகின்ற யாத்திரிகர்கள் அந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள். ஆயினும் தாங்கள் இத் தடைகளை எதிர்கொண்டு இயன்றவரையில் கச்சதீவு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக இராமேஸ்வரம் பங்கு தந்தை எங்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.

இந்த திருநாள் இந்திய இலங்கை மக்கள் ஒன்றிணைந்து ஒரு குடும்பமாக கொண்டாடுகின்ற நாள். இந்த திருநாளிலேயே நாங்கள் எல்லோரும் அனைவருடைய அமைதியான வாழ்வுக்காகவும் மன்றாடுவோம், எனத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – பிரபாகரன் டிலக்சன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT