அமெரிக்காவின் சர்வதேச சட்டம் | தினகரன்


அமெரிக்காவின் சர்வதேச சட்டம்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள யூதக் குடியேற்றங்கள் இனியும் சர்வதேச சட்டத்திற்கு முரணானதல்ல என்று அமெரிக்கா கூறியபோது, அதற்காக பெரிதாக அதிர்ச்சியடையத் தேவையில்லை.

ஒட்டுமொத்த ஜெரூசலத்தையும் இஸ்ரேல் தலைநகராக அறிவித்து, அங்கே தனது தூதரகத்தையும் கொண்டுசென்று, பலஸ்தீனத்திற்கான உதவிகளையும் நிறுத்திய டொனால்ட் டிரம்பின் அமெரிக்க நிர்வாகத்திடம் இருந்து இதனை விட பெரிதாக எதனையும் எதிர்பார்க்க முடியாது.

“மேற்குக் கரையின் யூதக் குடியிருப்புகள் தொடர்பாக அனைத்து தரப்பினரும் முன்வைக்கும் வாதங்களை கவனமாக ஆராய்ந்தோம். அதன் மூலம், அந்தக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை அல்ல என்று முடிவுக்கு வந்துள்ளோம்.

அந்தக் குடியிருப்புகளை சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரானது என்று கூறி வருவதால் எந்தப் பலனும் இல்லை.

அந்த நிலைப்பாட்டால் பலஸ்தீன பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தனிநபர் குடியிருப்புகளின் சட்டபூர்வ தன்மை குறித்து, அந்தந்த பகுதி சூழலை அடிப்படையாகக் கொண்டே முடிவுக்கு வர வேண்டும் என அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, மேற்குக் கரை யூதக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்ற முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ஆட்சிக் காலத்து நிலைப்பாட்டை தற்போதைய அரசு மாற்றிக் கொண்டுள்ளது” என்கிறார் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ.

உண்மையில் அமெரிக்கா ஒன்றும் சர்வதேச சட்டத்தை இயற்றுவதில்லை. அது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு தமது பொதுமக்களை குடியிருக்கச் செய்வதை தடுக்கும் நான்காவது ஜெனீவா பிரகடனம் போன்ற சர்வதேச ஒப்பந்தங்களாலேயே நிர்ணயிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பு சர்வதேச சட்டத்தில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தப்போவதில்லை. ஆனால் மத்திய கிழக்கு பிரச்சினையில் இன்னும் சிக்கலை ஏற்படுத்தும். அமெரிக்காவின் அறிவிப்பு இஸ்ரேலை மகிழ்ச்சிப்படுத்தும், அதே அளவுக்கு பலஸ்தீனத்தை கோபத்துக்குள்ளாக்கும். இந்த இரு துருவங்களும் மேலும் மேலும் விலகிச் செல்வதால் அங்கே அமைதி முயற்சி என்பது சாத்தியமில்லாத ஒன்றாக நாளுக்கு நாள் மாறி வருகிறது.

1967மத்திய கிழக்கு யுத்தத்தில் ஆக்கிரமித்த கிழக்கு ஜெரூசலம் மற்றும் மேற்குக் கரையிலேயே இஸ்ரேல் தன்னிஷ்டத்திற்கு யூதக் குடியேற்றங்களை அமைத்து வருகிறது. 1993ஆம் ஆண்டு ஒஸ்லோ அமைதி முயற்சியில் மேற்குக் கரை, கிழக்கு ஜெரூசலம் மற்றும் காசாவை உள்ளடக்கிய பலஸ்தீன நாடு ஒன்றை அமைப்பது குறித்து அடிப்படை உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது. 

ஆனால் இந்த ஒஸ்லோ உடன்படிக்கை இஸ்ரேல் குடியேற்றங்களை அமைப்பதை தடுக்கத் தவறிவிட்டது. 1993தொடக்கம் வந்த அனைத்து இஸ்ரேல் அரசுகளும் யுதக் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.  

முந்தைய அமெரிக்க அரசுகள் ஏதுவும் செய்யாதபோதும் குறைந்தபட்சம் இந்த குடியேற்றங்களுக்கு எதிர்ப்பையேனும் வெளியிட்டு வந்தன. கடந்த பராக் ஒபாமா காலத்தில் எதிர்ப்பு வழுத்ததால் குடியேற்றங்கள் குறித்து இஸ்ரேல் அடக்கியே வாசித்தது. ஆனால் டிரம்ப் நிர்வாகத்தில் அதற்கு தலைகீழாக குடியேற்றங்கள் அமைப்பது உச்சத்தை எட்டியிருக்கிறது.  

என்றாலும் இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசுகளின் நிலைப்பாடு எப்போதும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை.

கடந்த 1978ஆம் ஆண்டில் மேற்குக் கரை யூதக் குடியிருப்புகள் சார்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்று அப்போதைய ஜிம்மி காட்டர் அரசு தெரிவித்தது. எனினும், அந்த நிலைப்பாட்டை ரொனால்ட் ரீகனின் தலைமையிலான அரசு 1981ஆம் ஆண்டில் மாற்றியது.

அதற்குப் பின்னர் வந்த அரசுகளும் பலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தைக்கு யூதக் குடியிருப்புகள் இடையூறாக இருக்கக் கூடும் என்று கூறினாலும், அந்தக் குடியிருப்புகளை சட்டவிரோதமாகக் கருதும் நிலைப்பாட்டால் எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்று கூறி வந்தன.

இந்தச் சூழலில், யூதக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்ற நிலைப்பாட்டை முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கடந்த 2016ஆம் ஆண்டில் மீண்டும் அறிவித்தார்.

தற்போது யூதக் குடியிருப்புகள் சட்டவிரோதமானவை அல்ல என்று அறிவித்ததன் மூலம், முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் நிலைப்பாட்டை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் கொண்டு வந்துள்ளார் என்கிறார் பொம்பியோ. ஆனால் ரொனால்ட் ரீகனை விஞ்சியது அமெரிக்காவின் இப்போதைய நிலைப்பாடு என்பது பார்க்கத் தெரிகிறது.

எனவே, பலஸ்தீன நிலப்பகுதியை இஸ்ரேல் தனது ஆட்புலத்திற்குள் சேர்த்துக்கொள்வதற்கு இது பச்சைக் கொடியாகக் கூட மாறும் ஆபத்து இருக்கிறது. இதுவே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நீண்டகாலக் கனவும் கூட. மேற்குக் கரை என்பது யூத வரலாற்று நிலம் என்பது நெதன்யாகுவின் அரசியல் பொன்மொழி.

“மேற்குக் கரையில் நாங்கள் அமைத்துள்ள குடியிருப்புகள் சார்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்று தவறாகக் கூறப்பட்டு வந்தது. இந்தப் பிழையை அமெரிக்காவின் புதிய கொள்கை சரி செய்திருக்கிறது” என்கிறார் அவர்.

மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தை ஆக்கிரமித்தது தொடக்கம் அங்கு சுமார் 140குடியேற்றங்களில் 600,000யூதர்கள் வரை வசிக்கின்றனர்.

சர்வதேச சட்டத்தின் கீழ் இந்த குடியேற்றங்கள் பரவலாக சட்டவிரோதமானதென்றே கருதப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது. 

இந்த யூதக் குடியேற்றங்கள் தமது எதிர்கால சுதந்திர நாட்டில் அமைக்கப்பட்டிருப்பதால் அவைகள் நீக்கப்பட வேண்டும் என்று பலஸ்தீனம் வலியுறுத்தி வருகிறது.

“சர்வதேசச் சட்டங்களை காட்டுச் சட்டமாக்குவதற்காக அமெரிக்கா தொடார்ந்து முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மேற்குக் கரை யூதக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டவையே என்று அந்த நாடு அறிவித்துள்ளது” என்று பலஸ்தீன தலைமை பேச்சுவார்த்தையாளர் சயெப் எரகத் சாடுகிறார்.

இஸ்ரேலியர் இப்படி குடியேறும்போது அவர்களுக்கு என்று தனி வீதிகள், தொழிற்துறைகள், விவசாய நிலங்கள் என்று தனித்தனி நகரங்களே தோன்றும். அதனை பாதுகாக்க இஸ்ரேலிய இராணுவம், பொலிஸார் குவிக்கப்படுவார்கள். இதனால் அங்கே வாழும் சுதேசிகளான பலஸ்தீனர்கள் மீது ஒடுக்குமுறை அதிகரிக்கும். படிப்படியாக அவர்கள் துரத்தப்படுவார்கள். கடைசியில் அந்த பகுதி எந்த தொந்தரவும் இல்லாமல் இஸ்ரேலிய நிலத்துக்குள் சேர்ந்துவிடும்.

எனவே, பலஸ்தீனர்களுடன் பேசுவதை விடவும் குடியேற்றங்கள் என்பது இஸ்ரேலுக்கு லாபம் தரும் முயற்சி.

எஸ். பிர்தெளஸ்


Add new comment

Or log in with...