தொழிலாளர்களை மறந்த தொழிற்சங்கங்கள் | தினகரன்


தொழிலாளர்களை மறந்த தொழிற்சங்கங்கள்

தொழிற்சங்கமானது குறித்த தொழில் சார்ந்தவர்களை அங்கத்தவராகக்  கொண்டதாகும். அத்தொழிற்றுறையில் ஏற்படும் பிரச்சினைகள், சிக்கல்களை தொழில்  வழங்கும் முதலாளிமார் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாகத் தீர்வை  எட்டுவதற்கானது என்பதே எதிர்பார்ப்பு. அதுமட்டுமல்ல, குறித்த தொழிற்றுறை  சார்ந்த தமது அங்கத்தவரின் நலன் பேணும் நோக்கைக் கொண்டதாகவும் இருக்கும்  என்பதும் எதிர்பார்ப்பாகும்.  

நமது நாட்டில் ஒரு தொழிலுக்குப் பல சங்கங்கள் செயற்பட்டு  வருகின்றன. ஏழு பேரைக் கொண்டு ஒரு தொழிற்சங்கத்தை ஆரம்பிக்கலாம் என்ற  தொழிற்சங்க சட்டவிதிமுறையைப் பயன்படுத்தி நாட்டிலே பல நூறு தொழிற்சங்கங்கள்  ஆரம்பிக்கப்பட்டு அவை தொழிற்றிணைக்களத்தில் பதிவும் செய்யப்பட்டுள்ளன.  தொழிற்றிணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை  ஆயிரத்திற்கும் அதிகமாகும்.  

தொழிற்சங்கங்கள் இவ்வாறு பெருகக் காரணமென்ன? அவை  தொழிற்சங்கத்தை உருவாக்கிய   கொள்கைக்கமைய செயற்படுகின்றனவா என்பதை ஆராய வேண்டும். உண்மைகள்  வெளிப்படுத்தப்பட வேண்டும்.  

முதலிலே ஒரு தொழிலுக்குப் பல தொழிற்சங்கங்கள்  உருவாக்கப்படுவதன் நோக்கமென்ன என்பதையும், அடுத்து அவற்றின் தற்போதைய செயற்பாடு  என்ன நிலையிலுள்ளது என்பதையும் ஆராய்வோம். அதன் மூலம் பல உண்மைகள்  வெளிவருகின்றன.  

தொழிற்சங்கமானது குறித்த ஒரு தொழிற்றுறை சார்ந்தவர்களை  மட்டும் உள்ளடக்கியதாகவும் அத்துறையிலுள்ள தொழிலாளர்களின் பிரச்சினைகள், சிக்கல்கள்,  தேவைகள் மற்றும் நலன்களைப் பேணுவதாகவும் அமைய வேண்டும். குறித்த நோக்கங்களுக்கு  அப்பால் செயற்பட வேண்டிய அவசியமில்லை. இவ்வாறுள்ள நிலையில் ஏன் பல  தொழிற்சங்கள் உருவாக்கப்படுகின்றன? யாரால் உருவாக்கப்படுகின்றன? இவ்வாறு  உருவாக்குவதால் பயனடைவோர் யார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  

தொழிற் சங்கங்களில் பதவி வகிப்போர் பலருக்கு அத்தொழிற்சங்கங்கள் சார்ந்த  தொழிற் சட்டவிதிகள் தெரியாமலுள்ளமையும் குறிப்பிட்டுக் கூற வேண்டிய ஒன்றாகும்.  தொழிற்சங்கங்கள் அரச சேவைகளுக்கான தொழிற்சங்கள், தனியார் துறைத்  தொழிற்சங்கங்கள் என வகைப்படுத்தக் கூடியதாயுள்ளன. பெருந்தோட்டத்துறை  சார்ந்த தொழிற்சங்கங்களைத் தனியார்துறை  தொழிற்சங்கங்களாக  அடையாளப்படுத்தலாம்.  

தற்போதுள்ள நிலையில் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள  பெரும்பாலான தொழிற்சங்கங்கள் தமது தொழிற்சங்க உறுப்பினர்களின் நலனையும் விட  ஏதோ ஒரு அரசியல் கட்சியின், அரசியல்வாதியின் சார்பாக அவர்களின் செல்வாக்கை  உயர்த்த, அவர்களின் நலனைப் பேணுவதற்காகவே இயங்குகின்றன என்பது  வெளிப்படையானது.

அந்த வகையிலே நாம் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களைப்  பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொள்ளும் தொழிற்சங்கங்களையும் அவற்றின்  செயற்பாடுகள் தொடர்பாகவும் கவனம் செலுத்துவோம்.  

நாட்டிலேயே குறைந்த சம்பளத்தில் அதிலும் வேலை செய்யும்  நாட்களுக்கு மட்டுமேயான சம்பளத்தில் தொழில் செய்பவர்கள் மலையகப்  பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆவர். அவர்கள் மத்தியிலே சிறிதும், பெரிதுமாக  நூற்றுக்கு கிட்டிய தொழிற்சங்கங்கள் காணப்படுகின்றன. அவை அனைத்துமே ஏதாவது  ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்ததாக உள்ளன.

அதுமட்டுமல்ல, ஒரு அரசியல்  கட்சியைச் சார்ந்தவர்களால் பிரதேச ரீதியாகவும் தொழிற்சங்கங்கள்  நடத்தப்படுகின்றன. பெரும்பாலும் தமிழ்த் தொழிலாளர்களையே கொண்ட  பெருந்தோட்டத்துறை சார்ந்த தொழிற்சங்கங்களில் பொறுப்பான பதவிகளில் தமிழர்  அல்லாதோர் அதிலும் பெருந்தோட்டத்துறையுடன் சம்பந்தமில்லாதவர்களே உள்ளனர்.  பெருந்தோட்டத் தொழில்சார் சட்டங்கள் பற்றிய அறிவு அற்றவர்களாகப்  பெருந்தோட்டத்துறைத் தொழிலாளரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்  தலைவர்கள், பிரதிநிதிகள் அவர்களைப் பின்புலத்திலிருந்து வழிநடத்தும்  அரசியல்வாதிகளுள்ளனர்.  

தொழிலாளரின் சம்பளம், சுகாதாரத் தேவைகள், போக்குவரத்து,  குடியிருப்பு, அவர்களின் கல்வி போன்றவற்றிலும் அக்கறை செலுத்த வேண்டிய  தொழிற்சங்கத் தலைமைகள் ஆண்டுதோறும் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல்  கட்சிகள் நடத்தும் மேதின அதாவது தொழிலாளர் தின விழாவுக்கு ஆட்சேர்த்து  அழைத்து வரும் வேலையை மட்டும் கச்சிதமாகச் செய்து வருகின்றன.

தேர்தல்  காலங்களில் தமது தொழிற்சங்கத்தின் பின்புலத்திலுள்ள அரசியல் கட்சிக்கோ,  அரசியல்வாதிகளுக்கோ வாக்களிக்க தொழிலாளரை அதாவது தமது சங்க உறுப்பினர்களைத்  தூண்டும் செயற்பாடுகளை மேற்கொண்டும் வருகின்றன.  

உண்மையைக் கூறுவதனால் இன்று நமது நாட்டிலே அதுவும் மலையகப்  பெருந்தோட்டத்துறைகள் தொழிற்சங்கங்கள் தொழிற்சங்கச் செயற்பாடுகளை விடவும்  அரசியல் செயற்பாடுகளிலேயே அதிக கவனம் செலுத்தி இயங்கி வருகின்றன.  

தொழிற்சங்கங்களால் அறவிடப்படும் சந்தா தொழிலாளர் நலனுக்கும்,  தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுவதை விட அவை சார்ந்த அரசியல் கட்சிகளின்  அரசியல்வாதிகளின் தேவைக்காகவும், நலனுக்காகவுமே பெருமளவில்  பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தொழிலாளர்களும் தொழிற்சங்க  சந்தாப்பணத்துக்கும் அரசியல் தேவைகளுக்குமே பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.  

மலையகத் தோட்டத்துறையுடன் எதுவித தொடர்புமற்ற, அத்தொழிலாளரது நலன் பற்றி சற்றும் சிந்திக்காத பலர்  பெருந்தோட்டத்துறையில் தொழிற்சங்கம் அனைத்து மாதாந்தம் சந்தா அறவிட்டும்  வருவதை அவதானிக்கலாம். மலையகத்தில் தொழிற்சங்கங்களுக்கும், அரசியல்  கட்சிகளுக்கும் வித்தியாசம் காண முடியாதுள்ளது. ஏட்டிக்குப் போட்டியான காரியங்களும்  நடைபெறுகின்றன. மலையகத்தில் பன்னிரண்டு மாவட்டங்களில் பரந்து வாழும்  பெருந்தோட்டத்துறை மக்களின் நலனுக்கு இத்தனை தொழிற்சங்கங்கள் வேண்டுமா?  நிலவும் பிரச்சினைகளை இவற்றால் தீர்க்க முடியுமா? இவையெல்லாம் சிந்திக்க வேண்டிய விடயங்கள். 

த. மனோகரன்...
(ஓய்வுபெற்ற கைத்தொழில்
நீதிமன்றப் பதிவாளர்


Add new comment

Or log in with...