அரசுடன் த.தே. கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளது | தினகரன்


அரசுடன் த.தே. கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளது

தமிழ் மக்கள் இனப் பாகுபாடு பார்த்தோ, மத பாகுபாடு பார்த்தோ இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. இனப் பாகுபாடு பார்த்து தமிழ் மக்கள் வாக்குகளை போட்டிருப்பார்களானால் அவர்கள் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களித்திருப்பார்கள் என்று அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தனது அலுவலகத்தில் நேற்று (20) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

இச் செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில்வெற்றிபெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு அம்பாறை மாவட்ட மக்கள் சார்பாகவும், வடகிழக்கு வாழ் மக்கள் சார்பாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாகவும் வாழ்த்துகின்றேன். ஜனாதிபதி அனைத்து மக்களையும் ஒரே பார்வையில், ஒரே குடையின்கீழ், இன, மத, மொழி பாகுபாடு அற்ற முறையிலே இலங்கைப் பிரஜைகள் என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் மனதை வெல்ல கூடிய வகையில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

கடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகோபித்த கருத்தின் அடிப்படையில் செயல்பட்டு இருந்தது. தமிழர்களின் அபிலாசைகளை கருத்தில்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயல்பாடுகளை முன்னெடுக்கும். ஒரு போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை புறந்தள்ளிவிட்டு தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப் போவதில்லை.

வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து தங்கள் பலத்தை தேசியத்திற்கும், சர்வதேசத்திற்கும் நிரூபித்து காட்டியிருக்கிறார்கள். தமிழ் மக்கள் இந்த நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இற்றைவரையும் ஒருமித்த எண்ணத்தையும் சிந்தனையும் கொண்டவர்களாக பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதனடிப்படையிலேதான் இம்முறை வடகிழக்கு தமிழர்கள் ஒன்றுசேர்ந்து வெற்றி கண்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழ் மக்கள் இனப் பாகுபாடு பார்த்தோ, மத பாகுபாடு பார்த்தோ இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. இனப் பாகுபாடு பார்த்து தமிழ்மக்கள் வாக்குகளை போட்டிருப்பார்களானால் அவர்கள் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களித்திருப்பார்கள்.

ஜனாதிபதி அவர்கள் பக்கச்சார்பின்றி இந்த நாட்டை நிர்வகிக்க வேண்டும். ஒரு இனத்துக்கோ அல்லது ஒரு மதத்திற்கு சார்பாக இந்த நாட்டின் சனாதிபதி அவர்கள் செயற்படுவாரானால் இந்த நாடு மீண்டும் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும்.இந்த நாட்டில் நடைபெறும் நிர்வாகம், அரசியல் பொருளாதார விடயங்களை சர்வதேசம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருக்கின்றது. சர்வதேசத்தில் ஒத்துழைப்புடன் இந்த நாட்டில் தமிழர்களின் புரையோடிப் போயிருக்கும் இன பிரச்சினைகளை தீர்க்கின்ற விடயங்களை முன்னெடுக்க வேண்டும்.

கடந்த அரசாங்கம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை விடயத்தில் பல இழுத்தடிப்புக்களை செய்துள்ளது. அது கவலைக்குரிய விடயம். இருக்கின்ற ஜனாதிபதி கோட்டாபயய ராஜபக்ஷ அவர்கள் தமிழ் மக்களின் கலை கலாசார விடயங்களை நன்கு உணர்ந்து செயற்பட வேண்டும். பொதுபல சேனா, இராவண பலய  போன்ற அமைப்புகள் தமிழ் மக்களின் ஆலயங்கள் விடயத்தில் பலதரப்பட்ட இடையூறுகளை செய்திருந்தார்கள். அந்த இடையூறுகள் எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது.அந்தவகையில் இந்த நாட்டை சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும் என்பதே எம் மக்களின் எதிர்பார்ப்பு.வருகின்ற அரசோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு பட்ட பேச்சுவார்த்தைகளை நடாத்த இருக்கின்றது. சர்வதேசத்தின் ஒத்துழைப்போடு செயற்பட இருக்கின்றது.


Add new comment

Or log in with...