ஆர்ப்பாட்டக்காரர் – பொலிஸாரிடையே மூன்றாவது நாளாகவும் இழுபறி நீடிப்பு | தினகரன்


ஆர்ப்பாட்டக்காரர் – பொலிஸாரிடையே மூன்றாவது நாளாகவும் இழுபறி நீடிப்பு

ஹொங்கொங் பல்கலைக்கழகத்தில்

பொலிஸாரின் முற்றுகையில் இருக்கும் ஹொங்கொங் பல்கலைக்கழகத்திற்குள் தொடர்ந்து 100 தொடக்கம் 200 ஆர்ப்பாட்டக்காரர்கள் நிலைகொண்டுள்ளனர். இந்த இழுபறி நிலை மூன்றாவது நாளாக நேற்றும் நீடித்தது.

தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்குள் இவ்வாறு நிலைகொண்டிருக்கும் போராட்டக்காரர்களுக்கான விநியோகங்கள் தற்போது குறைந்து வருகின்றன.

இந்த பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த வாரம் தொடக்கம் இருந்து வருவதோடு, பொலிஸார் அங்கு நுழைவதை தடுத்து நெருப்பு பந்துகள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி வருகின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பலரையும் கைது செய்ததாக பொலிஸார் திங்களன்று குறிப்பிட்டனர். சிலர் அங்கிருந்து வெளியேற பயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் முகமூடி அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் தளர்த்திய தீர்ப்புக்கு சீனா கண்டனம் வெளியிட்டிருக்கும் நிலையில் அங்கு பதற்றம் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஹொங்கொங் அடிப்படைச் சட்டத்தின்கீழ் பிறப்பிக்கப்படும் உத்தரவு, அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதா என்பது பற்றித் தீர்ப்பளிக்கும் அதிகாரம், ஹொங்கொங் உயர்நீதிமன்றத்துக்கு இல்லையெனச் சீனா தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுவதற்கு பொலிஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை கெடு விதித்திருந்த நிலையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் சூடு நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரித்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த பல்கலைக்கழக வளாகத்தை பொலிஸார் சுற்றிவளைத்ததை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது பொட்ரோல் குண்டும்கள், கல்வீச்சு மற்றும் கவண் மூலம் தாக்குதல் நடத்தினர்.

பல்கலைக்கழகத்தில் இருந்து தப்பி ஓட முயன்ற பல டஜன்பேரை பொலிஸார் கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர். கயிறு மற்றும் ஏணிகளை பயன்படுத்தி பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து தப்பிச் செல்ல சிலரால் முடிந்தது.

கைது செய்யப்பட்டவர்கள் மீது கலகத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

கடந்த ஜூன் மாதம் ஹொங்கொங்கில் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பட்டம் ஆரம்பித்தது தொடர்ந்து அதிக வன்முறை கொண்ட சம்பவமாக இந்தப் பல்கலைக் கழக முற்றுகை மாறியுள்ளது.

இந்நிலையில் எங்களது இறையாண்மை மற்றும், ஹொங்கொங்கின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க எங்களிடம் உள்ள உறுதியை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என சீனா எச்சரித்துள்ளது. நிலைமை கை மீறிப் போனால் அரசு கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்காது என பிரிட்டனுக்கான சீனத் தூதர் தெரிவித்துள்ளார்.

குற்றப் பின்னணி உடையவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட வரைவை எதிர்த்து இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இது பின்னர் சீன தலையீட்டுக்கு எதிரான ஜனநாய ஆதரவு போராட்டமாக நீடித்து வருகிறது.

1898 முதல் பிரிட்டனால் 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்த ஹொங்கொங், 1997இல் சீனாவுடன் இணைந்தது. எனினும், ‘ஒரு நாடு இரு அமைப்பு முறை’ எனும் கொள்கையின்படி சட்டம் இயற்றல், நிர்வாகம் உள்ளிட்டவற்றில் ஹொங்கொங் தன்னாட்சி அதிகாரங்களைப் பெற்றுள்ளது.

இந்தத் தன்னாட்சி உரிமை 2047இல் முடிவுக்கு வரவுள்ளது. எனினும், இது எப்போதும் தொடர வேண்டும் என்றும், ஹொங்கொங் இன்னொரு சீன நகரத்தைப் போல் ஆகிவிடக்கூடாது என்றும் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை சீனாவுக்கு நாடு கடத்தினால், அது ஹொங்கொங்கின் தன்னாட்சி உரிமைகளை பாதிக்கும் என்றும் சீனாவின் தலையீட்டை அதிகரிக்கச் செய்யும் என்றும் அந்த சட்டமூலம் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டபோது விமர்சனங்கள் எழுந்தன.

சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள ஹொங்கொங்கைச் சேர்ந்தவர்களை சட்ட ரீதியாக அச்சுறுத்தவும் அந்தச் சட்டம் பயன்படுத்தப்படலாம் என்றும் ஜனநாயகத்துக்கு ஆதரவானவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

அரசியல் எதிர் கருத்து உடையவர்களுக்கு எதிரானது என கருதப்படும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலட்சக்கணக்கான மக்கள் ஹொங்கொங்கில் போராடினர்.


Add new comment

Or log in with...