கிழக்கின் உதைபந்தாட்ட முன்னோடி என்.ரி. பாறூக் காலமானார் | தினகரன்


கிழக்கின் உதைபந்தாட்ட முன்னோடி என்.ரி. பாறூக் காலமானார்

சோகத்தில் அக்கரைப்பற்று உள்ளிட்ட கிழக்கு மாகாணம்

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும், மூத்த உதைபந்தாட்ட வீரருமான அக்கரைப்பற்றைச் சேர்ந்த என்.டி பாறூக் நேற்றுமுன்தினம் காலமானார்.

அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும் காத்தான்குடியை வசிப்பிடமாகவும் கொண்ட மர்ஹூம் என்.ரி. பாறூக் இப்பிராந்தியத்தில் மிகச்சிறந்த உதைபந்தாட்ட கோல் கீப்பராக விளங்கியவர். இன்றுகூட கீப்பர் பாறூக் என்றுதான் எல்லோராலும் அழைக்கப்பட்டு வருகின்றார்.

அக்கரைப்பற்று மண்ணின் மிகச்சிறந்த உதைபந்தாட்ட வீரரான மர்ஹூம் என்.டி பாறூக் மைதானத்தில் சிறப்பான, எடுப்பான கோல்காப்பு திறன் ரசிகர்களினது பலத்த வரவேற்றைப் பெற்றிருந்ததை ஞாபகப்படுத்திப் பார்க்கின்றோம்.

தொழில் முறையாக வங்கி உத்தியோகத்தரான மர்ஹூம் என்.ரி. பாறூக் மட்டக்களப்பிற்கு இடமாற்றம்பெற்றுச் சென்றதனால் காத்தான்குடியில் தனது வசிப்பிடத்தை மாற்றிக்கொண்டதுடன் காத்தான்குடி உதைபந்தாட்டத்துறையுடன் தன்னையும் இணைத்துக்கொண்டார்.

உதைபந்தாட்ட வீரராக, நடுவராக,பயிற்றுவிப்பாளராக, நிர்வாகியாக பல மட்டத்திலும் பணியாற்றி கிழக்கின் உதைபந்தாட்ட முன்னோடியாக திகழ்ந்தவர்.

அக்கரைப்பற்று ஏஸ் விளையாட்டுக் கழகம், புளட்ஸ் விளையாட்டுக் கழகம், யுத் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றில் இணைந்து கொண்டு விளையாடிய மர்ஹூம் என்.ரி.பாறூக் இக்கழகங்களின் வெற்றிக்காக பெரும் பங்களிப்பினை செய்துள்ளார்.

தனது இருப்பிடத்தை காத்தான்குடிக்கு மாற்றியதிலிருந்து காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து கொண்டு விளையாடினார். பின்னர் அக்கழகத்தின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டு மிகச்சிறந்த முறையில் அக்கழகத்தை வழிநடாத்தி மட்டக்களப்பு மாவட்ட சம்பியனாகவும் வருவதற்கு வழியமைத்த பெருமையும் அவரையே சாரும்.

பின்னர் மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட மர்ஹூம் என்.ரி. பாறூக் மாவட்டத்தின் உதைபந்தாட்டத்துறையின் வளர்ச்சிக்கு தேசிய ரீதியில் பல்வேறு வசதி வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுத்தார். பின்னர் காத்தான்குடி உதைபந்தாட்ட லீக்கின் தலைவராகவும் தெரிவானார்.

நடுவர் துறையிலும் சிறப்புற்று விளங்கிய இவர் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நடுவராகக் கடமையாற்றி நாட்டுக்கும், தனது பிராந்தியத்திற்கும் பெருமையை தேடிக்கொடுத்தவர்.

பாறூக்கின் ஜனாசா நல்லடக்கம் நேற்றுக் காலை 6.00 மணிக்கு அக்கறைப்பற்று மையவாடியில் இடம்பெற்றது. இதில் பெருந்திரளான மக்கள், குடும்ப உறுப்பினர்கள், உதைபந்தாட்ட வீரர்கள், நிர்வாகிகள், ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...