Saturday, March 30, 2024
Home » மலையக பெருந்தோட்ட மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டில் கூடுதல் கவனம்

மலையக பெருந்தோட்ட மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டில் கூடுதல் கவனம்

by Rizwan Segu Mohideen
February 21, 2024 6:01 am 0 comment

இலங்கையின் பொருளாதாரத்திற்கு சுதந்திரத்திற்கு முன்பிருந்தே குறிப்பிடத்தக்கத்தக்க பங்களிப்பை நல்குபவர்கள் மலையகப் பெருந்தோட்ட மக்களாவர். பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சிக் காலத்தில் இந்நாட்டில் அமைக்கப்பட்ட பெருந்தோட்டங்களில் தொழில் புரிவதற்காக தென்னிந்தியாவின் பல பிரதேசங்களில் இருந்து இவர்கள் அழைத்து வரப்பட்டவர்களாவர். அவர்களது பரம்பரையினர்தான் இன்றும் மலையகப் பெருந்தொட்ட மக்களாக இருக்கின்றனர்.

இவர்கள் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களாக இருந்த போதிலும் இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு அளப்பரிய பங்களிப்பை நல்கி வருகின்றனர். அவர்கள் ஒரு போதும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயற்படாது நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக இந்நாட்டுக்கு அதிக அந்நியச் செலாவணியைப் ஈட்டித்தரும் முக்கிய துறைகளில் ஒன்றாக விளங்கும் பெருந்தோட்டத்துறையில் இவர்கள் பணியாற்றுகிறார்கள். இந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிக்கும் வகையில் வியர்வை சிந்தி உழைக்கின்றனர்.

இவ்வாறு முக்கியத்துவம் மிக்க பணியில் ஈடுபட்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சமூக, பொருளாதார நிலையை எடுத்து நோக்கினால் அவர்கள், நாட்டிலுள்ள ஏனைய சமூகத்தவர்களை விடவும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றனர். இது எல்லா மட்டத்தினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள உண்மையாகும்.

இந்நாட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களில் பெரும் பகுதியினர் லயன் வீடுகளில் தான் தங்கியுள்ளனர். இவர்களது மூதாதையர்கள் இந்நாட்டுக்கு பெருந்தோட்டங்களுக்கு தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட போது தங்க வைக்கப்பட்ட அதே லயன் வீடுகளில்தான் அவர்களது பரம்பரையினர் பலர் இன்றும் வாழும் நிலைமை உள்ளது. குறிப்பாக ஆறு தலைமுறையைக் கடந்தும் அவர்களது பரம்பரையினர் இந்த லயன்களில் வாழ்வது குறிப்பிடத்தக்க விடயமாகும். இருந்தும் இவர்கள் இன்னும் வீட்டு உரிமையையோ காணி உரமையையோ கிடைக்கப் பெறாதவர்களாக உள்ளனர்.

மேலும் மலையகப் பெருந்தோட்ட தமிழ் மக்களின் கல்வி நிலைமையும், உட்கட்டமைப்பு வசதிகளும் கூட ஏனைய பிரசேதங்களை விடவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. இப்பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளை, ஏனைய பாடசாலைகளின் நிலைமைக்கு நிகராக மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதேநேரம் பெருந்தோட்ட பிரதேசங்களில் வாழும் அனைவரும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அல்லர். அதனால் பெருந்தோட்ட மக்களும் ஏனைய சமூகங்களுக்கு நிகரான வகையில் மேம்படுத்தப்பட வேண்டும். இதன் தேவையும் அவசியமும் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. அதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்காக பத்தாயிரம் வீடுகளை அமைக்கும் பணிகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ‘பாரத் – லங்கா’ வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் 10 மாவட்டங்களிலுள்ள, 45 தோட்டங்களில், 1300 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டும் வகையில் ஒன்லைன் ஊடாக நினைவுப் பலகை நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டது

இத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய போது, ‘தமிழ் பிரதேச பாடசாலைகளை, ஏனைய பாடசாலைகளின் நிலைமைக்கு நிகராக மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை அனைத்துப் பிரதேச செயலகங்கள் ஊடாகவும் முன்னெடுக்கத் திட்டமிட்டு வருகிறோம். கல்வி பெறுவதற்கான உரிமையை உறுதி செய்வதோடு தொழிற்பயிற்சி பெறுவதற்கான வசதிகளையும் இளைஞர் யுவதிகளுக்கு வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டதோடு ‘ஏனைய மக்களைப் போன்று இந்த மக்களுக்கும் அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களைத் தோட்டத் தொழிலாளர்களாகத் தொடர்ந்து வைத்திருக்க முடியாது’ என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையில் பெருந்தோட்ட மக்கள் தொடர்ந்தும் பின்தங்கிய சமூகத்தினராக இருக்க முடியாது. அவர்களும் ஏனைய சமூகத்தினருக்கு நிகராக வளர்ச்சி பெற்ற சமூகத்தினராகத் திகழ வேண்டும். அதற்கு கல்வி இன்றியமையாததாகும்.

இந்தப் பின்புலத்தில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி பெருந்தோட்ட பிரதேசங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளை மேம்படுத்தும் திட்டங்களை பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கத் திட்டமிட்டு வருகிறார். மலையக மக்களையும் ஏனைய சமூகங்களுக்கு நிகராக மேம்படுத்துவதில் ஜனாதிபதி விஷேட கவனம் செலுத்தி இருப்பதன் வெளிப்பாடே இதுவாகும்.

ஆகவே மலையகப் பெருந்தோட்ட மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் சகலரும் ஆதரவும் ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும். அது மலையக மக்களின் முன்னேற்றத்திற்கு அளிக்கும் பங்களிப்பாக அமையும். இதனை உறுதிபடக் கூறலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT