அக்குரணை நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் | தினகரன்


அக்குரணை நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்

சீரற்ற காலநிலை காரணமாக அக்குறணை நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அக்குறணை நகர் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் அண்மைய நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக நகரை அண்மித்து ஓடும் பிங்கா ஓயா மீண்டும் பெருக்கெடுத்து வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் நகர வர்த்தகர்கள் பெரும் அச்சத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

அக்குறணை நகர வியாபாரிகள் மாதாந்த வாடகை அடிப்படையிலேயே கடைகளை பெற்று வியாபாரம் செய்து வருகின்றனர். இத்தகையதொரு சூழ்நிலையில் வருடாந்தம் வெள்ளப்பெருக்கு காரணமாக பொருட்கள் சேதமடைவதனால் பாரிய நட்டத்திற்கு முகம்கொடுத்துவருகின்றனர். இதனால் மாதாந்த வாடகையை  கூட தமக்கு செலுத்தமுடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.  அடிக்கடி வெள்ளத்தில் மூழ்குவதன் காரணமாக அக்குறணை நகர் ஊடாக செல்லும் கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைகின்றது. இதனால் பிரதேச வாசிகள், பயணிகள் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். அக்குறணை ஸியா மாவட்ட வைத்தியசாலையும் அக்குறணை நகரிற்கு அருகே அமைந்துள்ளமையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் நோயாளிகள் வைத்தியசாலைக்கு சென்றுவருவதிலும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர். 

ஆகவே புதிய அரசாங்கத்திலேனும் அக்குறணை நகரில் வெள்ளப்பெருக்கு அனர்த்தம் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிரந்தர தீர்வொன்றை பெற்றுத் தருமாறு நகர வர்த்தகர்கள் உட்பட பிரதேச வாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

(பூஜாபிட்டிய தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...