தமிழ் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் | தினகரன்


தமிழ் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்

புதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டுமென விரும்புகின்றேன். அவர், அவ்வாறு செயற்படுவார் எனவும் நம்புகின்றேன்.

அவ்வாறு செயற்படுவதன் மூலம் அனைவரும் நாட்டின் சமமான குடிமக்கள் என்னும் உணர்வு ஏற்படும் என்பதுடன் நாடு பிளவுபடாது பாதுகாக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்தது.

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்-ஷவின் வெற்றி தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

தேர்தலை மிக நேர்த்தியாக நடத்த துணைநின்ற தேர்தல் ஆணையாளர் மற்றும் அவரது பணிமனை ஊழியர்கள், பாதுகாப்புத் தரப்பினர், அனைத்து அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துகொள்கிறேன்.  

இலங்கையில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைவிட இந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் வாக்களிப்பு வீதம் உயர்ந்துள்ளமை கருத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமாகும்.

திருகோணமலையில் 83 வீதமும், அம்பாறையில் 80 வீதமும், மட்டக்களப்பில் 77 வீதமும், வன்னியில் 73 வீதமும், யாழ்ப்பாணத்தில் 66.5 வீதமுமாக மக்கள் வாக்களித்திருப்பது நிறைவை அளிக்கின்றது.  

புதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டுமென விரும்புகின்றேன். அவர், அவ்வாறு செயற்படுவார் எனவும் நம்புகின்றேன். அவ்வாறு செயற்படுவதன் மூலம், நாம் அனைவரும் நாட்டின் சமமான குடிமக்கள் என்னும் உணர்வு ஏற்படும் என்பதையும் நாடு பிளவுபடாது பாதுகாக்கப்படும் என்பதையும் அதன் மூலம் நாடும் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் பாரிய முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும் அடைவர் என்பதையும் புதிய ஜனாதிபதிக்கும் அவர் சார்ந்தோருக்கும் தமிழ்மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது நிருபர்  


Add new comment

Or log in with...