உலக காற்றுத் தர சுட்டெண்; இலங்கைக்கு 56ஆவது இடம் | தினகரன்


உலக காற்றுத் தர சுட்டெண்; இலங்கைக்கு 56ஆவது இடம்

உலக காற்றுத்தர சுட்டெண் தர வரிசைப் பட்டியலில் இலங்கை 56 ஆவது இடத்தில் உள்ளது.  

நேற்று வெளியிடப்பட்ட 100 நாடுகளின் தர வரிசைப் பட்டியலிலேயே இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

நேற்று காலை 11 மணியளவில் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட காற்று மாசு 76 என்ற மிதமான மட்டத்தில் இருந்தது. இந்த மிதமான மட்டம் 51 முதல் 100 புள்ளிகள் வரை கொண்டதாகும். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய மட்டமாக கணிக்கப்படுகிறது. எனினும் காற்று மாசு தொடர்பாக உள் உணர்வுடையவர்களுக்கு இது சில ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். அதேநேரம் சுறுசுறுப்புடன் கூடிய சிறுவர்கள் மற்றும் முதியவர்கள், சுவாசம் தொடர்பான நோய்களை கொண்டவர்கள் குறிப்பாக ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்படுவோர் தொடர்ந்து வெளியில் இருப்பதை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். தற்போதைய மிதமான காற்று மாசு நிலை இன்றும் நாளையும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

உலகளாவிய காற்றின் தரம் தொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட புள்ளி விபர பட்டியலின் பிரகாரம் சீனாவில் 804, இந்தியாவில் 567, துருக்கியில் 507, உக்ரேய்னில் 470, பாகிஸ்தானில் 399, மொங்கோலியாவில் 285, அவுஸ்திரேலியாவில் 241, பங்களாதேஷில் 225, நேபாளத்தில் 24, மற்றும் உஸ்பெகிஸ்தானில் 204 என்ற அளவில் உள்ளன. அதேநேரம் காற்று மாசு மோசமாக உள்ள 10 நாடுகள் இவையாகும்.  

இந்நிலையில் காற்றின் தரம் 50 என்ற மட்டத்துக்கு குறைவாக இருந்தால் அது நல்ல தரம் என கணிக்கப்படுகிறது. இதன்படி காற்றின் தரம் சிறப்பாக உள்ள 10 நாடுகளாக ஐஸ்லாந்து (5), மொனாகோ (6), விச்டென்ஸ்டேன் (8) மோல்டோவா (9) லிதுவேனியா (10) புரூணை தாருஸ்ஸலாம் (13) டென் மார்க் (16) மார்ட்டினிக் (16) அன்டோரா (18) பிரெஞ்ச் கியானை (20) மற்றும் கிப்ரால்டர் (20) கணிக்கப்படுகின்றன.  

கொழும்பு நகரின் காற்று மாசு நிலை கடந்த நவம்பர் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் முறையே 132 மற்றும் 136 வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.     


Add new comment

Or log in with...