பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகருடன் ஆராய்வு | தினகரன்


பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகருடன் ஆராய்வு

மிகத்தெளிவான மக்கள் ஆணை கிடைத்துள்ளதையடுத்து நாட்டின் எதிர்கால நிர்வாகம் தொடர்பாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, கட்சித் தலைவர்கள் ஆகியோர் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.  

இதில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களின் அடிப்படையில் மீண்டும் இவ்வாரம் சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைக்கவுள்ளதாக சபாநாயகரின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. சபாநாயகரின் அலுவலகம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,  

கடந்த 16ஆம் திகதி நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று புதிய ஜனாதிபதி பதவியேற்றுள்ளதன் பின்னர் பாராளுமன்றத்தின் நடவடிக்கைள் தொடர்பாகப் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் சபாநாயகருடன் பேச்சு நடத்தியுள்ளனர்.  

நாட்டின் நிர்வாகம் தொடர்பாக மிகத்தெளிவான மக்கள் ஆணை கிடைத்துள்ளதால் இதன் பிரகாரமே செயலாற்ற வேண்டுமென சபாநாயகருடனான இப் பேச்சுவார்தையின்போது பெரும்பாலானவர்களின் கருத்தாக அமைந்திருந்தது. இப்பேச்சுவார்த்தையின் போது மிக முக்கிய மூன்று விடயங்கள் தொடர்பாக கவனம்செலுத்தப்பட்டது.  

01. அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்ற ஆயுட்காலம் முடிவடையும் 2020மார்ச் மாதம் 01திகதி பாராளுமன்றத்தைக் கலைத்து ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தலொன்றை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குதல்.  

02. பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் சுயமாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுத்து பாராளுமன்றத்தைக் கலைத்து உடனடியாக பொதுத் தேர்தலுக்குச் செல்லுதல்.  

03. பாராளுமன்றத் தேர்தலுக்குச் செல்லும் வரை பிரதமர் உட்பட அரசாங்கம் சுய விருப்பத்துடன் விலகி காபந்து அமைச்சரவையொன்றை நியமிப்பதற்கான சந்தர்ப்பத்தை புதிய ஜனாதிபதிக்கு பெற்றுக் கொடுத்தல்.  

பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்ட மேற்குறிப்பிடப்பட்ட நடைமுறைகள் தொடர்பாக இந்த வாரம் நடத்தப்படவுள்ள கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. இவ்விடயங்கள் தொடர்பாக பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி தங்களது தீர்மானத்தை சபாநாயகருக்கு அறிவித்தவுடன் இறுதி முடிவு எடுப்பதற்காக அனைத்து கட்சித் தலைவர் கூட்டமொன்றை சபாநாயகர் நடத்தவுள்ளார் என்றும் சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நமது நிருபர்  


Add new comment

Or log in with...