முன்னாள் பிரதமர் தி.மு. ஜயரத்ன காலமானார் | தினகரன்


முன்னாள் பிரதமர் தி.மு. ஜயரத்ன காலமானார்

முன்னாள் பிரதமர் தி.மு. ஜயரத்ன காலமானார்-DM Jayaraten Passed Away at age of 88

இறக்கும்போது அவருக்கு 88 வயது

இலங்கையின் சிரேஷ்ட அரசியல்வாதிகளில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான தி.மு. ஜயரத்ன காலமானார்.

மரணிக்கும்போது அவருக்கு 88 வயதாகும்.

சுகவீனம் காரணமாக, கண்டி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.

கடந்த 2010 - 2015 காலப் பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் அவர் பிரதமராக பதவி வகித்தார்.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஆரம்ப கால உறுப்பினரான தி.மு. ஜயரத்ன 1970 ஆம் ஆண்டு முதன் முதலில் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.

அப்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில், 2010 ஏப்ரல் 21 ஆம் திகதி, இலங்கையின் 14 ஆவது பிரதமராக பதவியேற்றார்.

1951 ஆம் ஆண்டு எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் ஶ்ரீ.ல.சு.க. ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், தொலுவ மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிய அவர், 1960 - 1962 காலப் பகுதியில் தொலுவ தபால் நிலையத்தில் தபால் அதிபராக கடமையாற்றினார்.

தி.மு. ஜயரத்ன 1970 ஆம் ஆண்டு கம்பளை மாவட்டத்தில் 14,463 வாக்குகள் பெற்று, ஐ.தே.க. உறுப்பினர் W.P.B. திஸாநாயக்கவை தோற்கடித்ததன் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.

1977 இல் பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அவர், 1989 இல் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக 54,290 வாக்குகள் பெற்று மீண்டும் தெரிவானார். அதனைத் தொடர்ந்து 1994 இல் பொதுஜன முன்னணி சார்பில் பாராளுமன்றிற்கு தெரிவானதோடு, அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் அமைச்சரவையில் முதன் முறையாக காணி, விவசாயம் மற்றும் வனவள அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அவர், விவசாய அமைச்சுப் பதவியை தொடர்ந்தும் வகித்ததோடு, தபால், தொலைத் தொடர்பு அமைச்சு, பெருந்தோட்ட அமைச்சு பதவிகளையும் வகித்தார்.

இக்காலப் பகுதியில், பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளர் நாயகம், ஶ்ரீ.ல.சு.க.வின் சிரேஷ்ட பிரதித் தலைவர் ஆகிய பதவிகளையும் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து 2010 - 2015 காலப் பகுதியில் ஐ.ம.சு.மு. ஆட்சிக் காலத்தில் பிரதமராக பதவி வகித்ததோடு, அவருக்கு பௌத்த சாசனம் மற்றும் மத விவகார அமைச்சும் வழங்கப்பட்டது.

பெயர்: திஸாநாயக்க முதியன்சலாகே ஜயரத்ன
பிறந்த திகதி: 1931.06.04 (கொழும்பு)
ஆரம்ப கல்வி: தொலுவ மகா வித்தியாலயம், கம்பளை
மரணம்: 2019.11.19 (88 வயது கண்டி)


Add new comment

Or log in with...