பொலிவிய ஆர்ப்பாட்டங்கள்: உயிரிழப்பு 19 ஆக உயர்வு | தினகரன்


பொலிவிய ஆர்ப்பாட்டங்கள்: உயிரிழப்பு 19 ஆக உயர்வு

பொலிவியாவில் முன்னாள் ஜனாதிபதி எவோ மொராலஸ் ஆதரவாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையிலான மோதல்களில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஸ்கபா நகரில் மொராலஸ் ஆதரவாளர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய சூட்டில் குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டனர். இதில் கொல்லப்பட்ட மற்றும் காயமுற்றவர்கள் துப்பாக்கி காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக அந்த நகரில் உள்ள மருத்துவர் ஒருவர் ஏ.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி கடந்த ஒக்டோபர் 20 திகதி இடம்பெற்ற சர்ச்சைக்குரிய தேர்தலுக்குப் பின் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருப்பதாக தேசிய குறைகேட்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பொலிவியாவில் இடம்பெறும் வன்முறைகள் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் இருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் தலைவர் மிசேல் பசெலெட் எச்சரித்துள்ளார். “நிர்வாகத்தின் ஒடுக்குமுறை செயற்பாடு பேச்சுவார்த்தை ஒன்றுக்கான வாய்ப்பை இல்லாமல் செய்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததை அடுத்து மொராலஸ் கடந்த நவம்பர் 10 ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி மெக்சிகோவில் தஞ்சமடைந்தார்.

பொலிவியாவின் இடைக்கால ஜனாதிபதியாக ஜீனைன் ஏனெஸ் அறிவித்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மொராலஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...