பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக ஈரானில் ஆர்ப்பாட்டம் | தினகரன்


பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக ஈரானில் ஆர்ப்பாட்டம்

 பெட்ரோல் கொள்கை யை எதிர்த்து நாடெங்கும் ஏற்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெட்ரோல் விலை அதிகரிப்பு மற்றும் பங்கீட்டு முறையில் பெட்ரோல் வழங்கும் எதிர்பாராத அறிவிப்பு ஒன்றை ஈரான் அரசு வெளியிட்ட நிலையிலேயே அங்கு ஆர்ப்பாட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த வன்முறைகளில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சிர்ஜானில் மட்டுமன்றி மஷாத், அபாதான், சிராஷ் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் வெடித்துள்ளது.

இமாம் அலி நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்திய போராட்டக்காரர்கள், பொலிஸ் தங்களை ஆதரிக்க வேண்டும் எனக் கோஷமிடும் வீடியோக்களை இணையத்தில் பார்க்க முடிகிறது.

ஈரானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளின்படி இனி, ஒரு மாதத்துக்கு 60 லிற்றர் பெட்ரோல் மட்டுமே 15 ஆயிரம் ரியால் என்ற விலையில் கிடைக்கும். அதற்கு மேல் வாங்கப்படும் ஒவ்வொரு லிற்றர் பெட்ரோலுக்குமான விலை 30 ஆயிரம் ரியால்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மானியம் நீக்கி விற்கப்படும் பெட்ரோலில் இருந்து வரும் வருமானம் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அரசு தெரிவிக்கிறது.

75 வீத ஈரானியர்கள் அழுத்தத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ள ஈரான் ஜனாதிபதி ரூஹானி, இந்த கூடுதல் வருமானமானது அவர்கள் நலனுக்காகச் செலவு செய்யப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே பெட்ரோல் விலை குறைவாக இருக்கும் நாடுகளில் ஈரானும் ஒன்று. இதற்கு முக்கிய காரணம் அதிகமாக வழங்கப்படும் மானியமாகும்.

ஈரானில் அதிகளவில் பெட்ரோல் உற்பத்தி செய்யப்படுகிறது. பல பில்லியன் டொலர் மதிப்பிலான எரிபொருள் அங்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

2015இல் ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து விலகிய பின் அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகள் காரணமாக ஈரான் ஏற்கனவே பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இந்த புதிய கொள்கைகள் அறிவிக்கப்பட்ட பின் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டங்கள் கடந்த சனிக்கிழமை சில நகரங்களில் நீடித்தது.

இணையதளங்களுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சட்டவிரோதமான செயற்பாடுகள் தொடர்ந்தால் அமைதியை நிலைநிறுத்துவதற்கு சட்ட அமுலாக்கல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு தேர்வு இல்லை என்று உள்துறை அமைச்சர் அப்தொல்ரேசா ரஹ்மானி பஸ்லி குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...