எதிரணி வீரரை வசைபாடிய அவுஸ்திரேலிய வீரருக்கு தடை | தினகரன்


எதிரணி வீரரை வசைபாடிய அவுஸ்திரேலிய வீரருக்கு தடை

அவுஸ்திரேலிய உள்நாட்டுக் கிரிக்கெட்டில் விக்டோரியாவுக்கும் குவீன்ஸ்லாந்து அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் வீரர் ஒருவரை தனிநபர் தாக்குதல் முறையில் வசைபாடியதான குற்றச்சாட்டில் சிக்கிய அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் ஒரு போட்டியில் விளையாடத் தடை செய்யப்பட்டார்.

பாகிஸ்தானுக்கு எதிரான பிரிஸ்பன் போட்டியில் அவர் விளையாட கிரிக்கெட் அவுஸ்திரேலியா தடை விதித்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

போட்டி நடுவர்கள் ஜோன் வோர்ட், ஷோன் கிரெய்க் ஆகியோர் இந்தப் புகாரை கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.

குவீன்ஸ்லாந்து வீரர் கேமரூன் கனான் என்பவர் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுக்கும் வகையில் வசைமாரி பொழிந்ததாக பேட்டின்சன் மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவர் தண்டிக்கப்பட்டுள்ளார்.

தவறை ஒப்புக் கொண்ட ஜேம்ஸ் பேட்டின்சன், வீரர் மற்றும் நடுவர்களிடம் மன்னிப்புக் கேட்டார்.

இது தொடர்பாக அவுஸ்திரேலிய டெஸ்ட் அணித்தலைவர் டிம் பெய்ன் கூறும்போது, இது துரதிர்ஷ்டவசமானது, அவுஸ்திரேலியாவின் புதிய பண்பாட்டைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டுள்ளார் பேட்டின்சன், டெஸ்ட் போட்டியை ஆடாமல் இழப்பது என்பது ஈடு செய்ய முடியாதது, பேட்டின்சன் தவறை உணர்வார் என்று கருதுகிறோம். இந்த அவுஸ்திரேலிய அணியில் இதற்கு இடமில்லை என்பதை அவர் விரைவில் உணர்வார், என்றார் டிம் பெய்ன்.


Add new comment

Or log in with...