அர்த்தமுள்ள இந்துமதம் | தினகரன்


அர்த்தமுள்ள இந்துமதம்

(கடந்த வாரத் தொடர்)

“ஐயோ, தேரையே! நான் குத்தும்போது நீ கத்தியிருந்தால் காப்பாற்றி இருப்பேனே. ஏன் கத்தவிலை?” என்றார்.  அதற்குத் தேரை சொன்னது; 

“பெருமானே! யாராவது எனக்குத்துண்பம் செய்யும்போதெல்லாம் நான் ‘ராமா ராமா’ என்றுதான் சத்தமிடுவேன். அந்த ராமனே என்னைக் குத்துகிறார் என்னும்போது, யார் பெயரைச் சொல்லி ஓலமிடுவேன்?” 

ராமபிரான் கண்ணீரோடு சொன்னார்: “தேரையே, என்னை மன்னித்துவிடு. இது நான் அறியாமல் செய்த பிழை.” 

தேரை சொன்னது: 

“பெருமானே! ‘அறியாமல் செய்கின்ற பிழைகள் அப்பொழுதே மன்னிக்கப்படுகின்றன’ என்று சொன்னது உன் வாக்குத்தானே!” 

தேரையின் ஆவி முடிந்தது. நான் பாவம் என்று குறிப்பிடும்போது, நீ அறியாமல் செய்த பிழைகளை எல்லாம் பாபக்கணக்கில் சேர்க்காதே.

சிறு வயதில் கடன் தொல்லை தாங்காமல் நான் ‘திருடியிருக்கிறேன்’ - என் தாயின் பணத்தைத்தான். 

திருடிவிட்டு நிம்மதியில்லாமல் இருந்திருக்கிறேன். கடவுளை வேண்டியிருக்கிறேன் - “இறைவா மன்னி” என்று. 

அந்தத் தவறை மன்னிக்கவில்லை என்றால் இந்த வாழ்க்கையை எனக்கு அருளியிருப்பாரா? 

என்னுடைய நண்பர்களில் என்னிடம் உதவி பெறாதவர் குறைவு. 

உதவி பெற்றவர்களில் நன்றியுடையவர்கள் குறைவு. 

என்னுடைய ஊழியர்களில் என்னை ஏமாற்றாதவர்கள் குறைவு. 

ஏமாற்றியவர்களில் நன்றாக வாழ்கின்றவர்கள் குறைவு. 

எழுத்தின்மூலமே சம்பாதித்தவர்களில் என்னைப்போல் சம்பாதித்தவர்கள் குறைவு. 

சம்பாதித்ததை அள்ளி இறைத்ததில், என்னைப்போல் அள்ளி இறைத்தவர்கள் குறைவு. 

இவ்வளவு அறியாமைக்கிடையிலேயும், ஏதோ ஒரு சுடரொளி என்னைக் காப்பாற்றுகிறது. 

ஏன் காப்பாற்றுகிறது? எதனால் அது என்னைக் காப்பாற்றுகிறது? 

‘தர்மம் தலைகாக்கும்’ என்ற இந்துகளின் பழமொழி எனக்கு நினைவுக்கு வருகின்றது. 

செய்த பாவம் தலையிலடிக்கிறது - செய்த புண்ணியம் தலையைக்காக்கிறது. 

ஆம்: செய்த புண்ணியம் திரும்பி வருகிறது. 

புண்ணியம் என்பது, என்றும் எதிலும் நீ செய்யும் நன்றி! 

பாவத்தில் முதற்பாவம், நன்றி சொல்லுதல். 

கஷ்ட காலத்தில் எனக்கு ஒரு ரூபாய் உதவியவரை நான் ஞாபகத்தில் வைத்துக் கைமாறு செய்திருக்கிறேன். 

அந்த நாயகன் அறிய நான் நன்றி சொன்னதில்லை.

ஆகவே பாவம் செய்யாமல், புண்ணியம் செய்து கொண்டே இறைவனைத்தியானித்தால் வாழ்நாளிலேயே உனக்கொரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. 

நான் தத்துவம் பேசவில்லை; அனுபவம் பேசுகிறது. 

இந்துமத்த்தின் ஒவ்வொரு அணுவையும் நான் உணர்வதற்கு எதையும் நான் படிக்கவில்லை. 

பழமொழிகளும் அனுபவத்தில் அவற்றின் எதிரொலிகளுமே, இந்துமதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையை எனக்கு உண்டாக்கியிருக்கின்றன.


Add new comment

Or log in with...