சத்ய சாய்பாபா | தினகரன்


சத்ய சாய்பாபா

சத்ய சாய்பாபா என்று அனைவராலும் அழைக்கப்படும் சத்யா நாராயண ராஜூ 1926-ம் ஆண்டு நவம்பர் 23-ந் திகதி ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பிறந்தார். தந்தையின் பெயர் ராஜு ரத்னாகரம், தாயார் பெயர் ஈஸ்வரம்மா. 

சத்ய நாராயண ராஜு என்று குழந்தைக்கு பெயர் சூட்டினார்கள். சிறு பருவத்திலேய சாய்பாபா திறமை மிக்கவராய் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கினார். 

நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல், என தொட்ட துறைகளில் எல்லாம் கைதேர்நதவராக இருந்தார். 

1940-ம் ஆண்டு மார்ச் 8-ந் திகதி சாய்பாபா தனது சகோதரருடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவரை தேள் கொட்டி விட்டது. இதனால் அவர் சில மணி நேரம் தன்னிலை மறந்தவராக மாறிவிட்டார். அதன் பிறகு சிரிப்பது, அழுவது, மௌனமாக இருப்பது என முற்றிலும் மாறுபட்ட நபராக தோன்றினார். இதனால் பயந்துபோன பெற்றோர்கள் அவரை டாக்டரிடம் அழைத்து சென்றனர். அவர்கள் சாய்பாபாவை பரிசோதித்து விட்டு நரம்பு தளர்ச்சி நோய் தாக்கி இருப்பதாக கூறினார்கள். அதற்கு சிகிச்சை அளித்தும் எந்த மாற்றமும் இல்லை. மத குருக்கள், சாமியார்களிடம் அழைத்து சென்றனர். பலன் கிடைக்கவில்லை. 

இந்த நிலையில் 1940-ம் ஆண்டு மே 23-ந் திகதி சாய்பாபா வீட்டில் இருந்த அனைவரையும் அழைத்தார். திடீரென தனது கையில் இருந்து கற்கண்டை வரவழைத்து அவர்களுக்கு கொடுத்தார். அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். அப்போதுதான் முதல்முறை தன்னை ஷீரடி சாய்பாபாவின் வாரிசு என்று சாய்பாபா கூறினார். சத்ய சாய்பாபா பிறப்பதற்கு 8ஆண்டுகளுக்கு முன்புதான் சீரடி சாய்பாபா இறந்திருந்தார்.அதன் பிறகு சாய்பாபாவே சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்றார். அவரை காண வந்த பக்தர்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறின.இதனால் அவரது புகழ் தென்இந்தியா முழுவதும் பரவத் தொடங்கியது. 1944-ம் ஆண்டு பக்தர்கள் அனைவரும் சேர்ந்து சாய்பாபாவுக்கு புட்டபர்த்தியில் கோயில் கட்டி கொடுத்தனர். அங்கு பக்தர்கள் குவிய தொடங்கினார்கள். இதனால் விரிவான கோவில் கட்டப்பட்டது.

அதற்கு பிரசாந்தி நிலையம் என்று பெயர் சூட்டினார்கள். 100 ஏக்கர் நிலம் கோவிலுக்காக வாங்கப்பட்டது. 1948-ல் அங்கு சாய்பாபா ஆசிரமத்தை கட்டினார். 1954-ல் சிறு ஆஸ்பத்திரி ஒன்றை கட்டி இலவச மருத்துவ சிகிச்சை வழங்கினார். 

அவருடைய அருளாசி, அதிசயங்களால் கவரப்பட்டு இந்தியா முழுவதிலும், வெளிநாடுகளிலும் சாய் பாபாவுக்கு பக்தர்கள் உருவானார்கள். இந்தியா முழுவதும் சாய்பாபா சுற்றுப்பயணம் செய்தார். தனது உடலில் இருந்து லிங்கம், விபூதி, மோதிரம், கடிகாரம் என பொருட்களை வரவழைத்து பக்தர்களுக்கு கொடுத்தார். அவரை கடவுளின் அவதாரமாகவே பக்தர்கள் கருதினார்கள். இந்தியா முழுவதும் சத்ய சாய்பாபா ஆசிரமங்கள் உருவாயின.

137நாடுகளில் அவருக்கு பக்தர்கள் உருவானார்கள். பக்தர்கள் ஏராளமான பணத்தை ஆசிரமத்தில் கொட்டினார்கள். இவற்றை பொது மக்களின் நல்ல காரியங்களுக்காக செலவிட்டார். 

குடிநீர், சுகாதாரம் போன்ற பணிகளுக்காக அதிக அளவில் செலவிட்டார். தமிழகத்துக்கு கிருஷ்ணா நீர் கொண்டு வருவதில் சாய்பாபா பெரும் முயற்சி எடுத்தார். அவரின் சமுதாய தொண்டுகள் உலகெங்கும் போற்றப்பட்டன. சாய்பாபா அறக்கட்டளையின் மருத்துவ சேவைகள் புகழ்பெற்றவை. சச்சின் டெண்டுல்கர் உட்பட எண்ணற்ற சிஷ்யர்கள் சாய்பாபாவை தங்கள் ஆன்மிக குருவாக ஏற்றுக் கொண்டுள்ளனர். 

தற்போது உலகில் 114நாடுகளில் 1200இடங்களில் சத்ய சாய்பாபா மையங்கள் உள்ளன.

சாய்பாபா ஆசிரமத்தின் சொத்து மதிப்பு ரூ.2 1/2இலட்சம் கோடிக்கு மேல் இருப்பதாக கூறப்படுகிறது. சத்ய சாய் பாபா 2011.04.24ஆம் திகதி மரணம் அடைந்தார்.

28 நாட்களாக தீவிர சிகிசை அளித்தும் பலனளிக்காமல் மறைந்தார்.  


Add new comment

Or log in with...