ஜனநாயகத்தின் தீர்ப்பு | தினகரன்


ஜனநாயகத்தின் தீர்ப்பு

ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியை ஈட்டியிருக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ. 69,24,255 வாக்குகளைப் பெற்றுள்ள அவருக்கு, 52.25 சதவீத பெருவெற்றி கிடைத்திருக்கிறது. அநுராதபுரத்திலுள்ள வரலாற்றுப் பெருமை மிக்க புனிதத் தலமான ருவான் வெலிசயவில் வைத்து, நாட்டின் புதிய ஜனாதிபதியாக இன்று திங்கட்கிழமை பதவியேற்றுக் கொள்கின்றார் கோட்டாபய ராஜபக்ஷ.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச இத்தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளார். சஜித் பிரேமதாசவுக்குக் கிடைத்த மொத்த வாக்குகள் 55,64,239 ஆகும். இத்தேர்தலில் 41.99 சதவீத வாக்குகளே அவருக்குக் கிடைத்துள்ளன.

நீதியாகவும் நேர்மையாகவும், எதுவித மோசடிகள் இன்றியும் நடைபெற்றுள்ள இத்தேர்தலில் ஜனநாயக ரீதியிலான தீர்ப்பை நாட்டு மக்கள் வழங்கியிருக்கின்றனர். நீதியாகவும் சுதந்திரமாகவும் நடைபெற்ற இத்தேர்தலின் முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாக தோல்வியைத் தழுவிய சஜித் பிரேமதாச நேற்றுக் காலையே உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டார். அதேசமயம் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார் அவர்.

மக்கள் ஆணையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாக அவர் அறிவித்திருப்பது இலங்கையில் நிலவுகின்ற ஜனநாயக அரசியல் பண்பின் அடையாளமாகும். அதேசமயம், ஜனாதிபதித் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டதில் இருந்து இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் மேற்கொண்ட தேர்தல் பிரசாரங்களில் சிறப்பான அரசியல் பண்பு ஒன்று கடைப்பிடிக்கப்பட்டதை இவ்விடத்தில் குறிப்பிடாமலிருக்க முடியாது.

அவ்விருவரின் தேர்தல் பிரசாரங்களிலும் ஒருவரையொருவர் தனிப்பட்ட ரீதியில் தாக்குகின்ற வார்த்தைப் பிரயோகங்கள் எதுவுமே இடம்பெற்றிருக்காதது சிறப்பான அம்சமாகும்.

இவ்விருவரும் தத்தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டபடி எதிர்காலத்தில் முன்னெடுக்கப் போகின்ற திட்டங்களை மட்டுமே மக்கள் முன்னிலையில் வலியுறுத்திப் பேசினரே தவிர, ஒருவர் மீது மற்றொருவர் சேறு பூசும் வகையிலான வார்த்தைகளைப் பிரயோகித்ததைக் காண முடியவில்லை. இது ஜனநாயக அரசியலில் நாகரிக வெளிப்பாடாகும்.

இத்தேர்தலின் முடிவானது ஜனநாயக பாரம்பரியத்தில் ஊறிப் போன இலங்கையின் மக்கள் அளித்துள்ள தீர்க்கமான தீர்ப்பாகும். நாட்டின் எதிர்கால சுபிட்சத்தைக் கவனத்தில் கொண்டு மக்கள் இவ்வாறான ஆணையொன்றை வழங்கியுள்ளனர். அந்த ஆணையை ஏற்று நாட்டை வழிநடத்த வேண்டிய மிகப் பாரிய பொறுப்பு புதிய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்டுள்ளது. மக்களின் எதிர்பார்ப்பை புதிய ஜனாதிபதி சீரான முறையில் முன்னெடுப்பாரென்பதில் எதுவித சந்தேகமும் இருக்கப் போவதில்லை.

இத்தேர்தலில் நாட்டின் பெரும்பான்மை இனத்தவரான சிங்கள மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மிகக் கூடுதலான ஆதரவை வழங்கியுள்ளனர். பொதுஜன பெரமுன வேட்பாளர் மீதான பெரும் ஆதரவு அலை என்றும் அதனைக் கூறலாம். புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மாத்திரமன்றி அவர் சார்ந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் கிடைத்த வெற்றியாகவே இத்தேர்தலின் பெறுபேற்றைக் கருத முடியும்.

அதேசமயம், நாட்டின் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ், முஸ்லிம் மக்களிடமிருந்து கூடுதலான ஆதரவு எதிர் வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கே அளிக்கப்பட்டிருப்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படையாகவே புலப்படுத்துகின்றன.

ஜனநாயக ஆட்சிமுறை நிலவுகின்ற நாடொன்றை எடுத்துக் கொள்வோமானால் ஒருவரின் அரசியல் கொள்கையென்பது அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்பாகும். வாக்குரிமையைக் கொண்டுள்ள ஒவ்வொரு குடிமகனும், தனக்குரிய வேட்பாளருக்கு ஆதரவாக அவ்வாக்குரிமையைப் பயன்படுத்தும் உரிமையைக் கொண்டிருக்கின்றான். அது அவனது அரசியல் அபிலாஷையும் உரிமையும் ஆகும்.

ஆனால், இலங்கையில் வாழ்கின்ற அனைத்து இனங்களையும் சேர்ந்த மக்களும் ஒரே தேசத்தின் குடிமக்களாவர் என்பதை மறந்து விடலாகாது. அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைத்து மக்களுமே சமமாக நோக்கப்படுவரென்ற உறுதியை புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நேற்றைய உரை தெளிவாக எடுத்துக் காட்டுவது பாராட்டத்தக்க அம்சமாகும்.

“எனக்கு ஆதரவாக வாக்களித்த மக்களுக்கும், எனக்கு எதிராக வாக்களித்த மக்களுக்கும் ஜனாதிபதியாகவிருந்து சிறப்பாகப் பணியாற்றுவேன்” என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் நேற்றுப் பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் உரையாற்றுகையில் குறிப்பிட்டிருந்தார் கோட்டாபய ராஜபக்ஷ. இக்கூற்றையும் சிறப்பான அரசியல் பண்பாகவே நோக்க வேண்டியுள்ளது.

இலங்கையில் காலனித்துவ ஆட்சிக்குப் பின்னரான அரசியல் வரலாற்றில் பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பமொன்றில் இருந்து வந்தவர் கோட்டாபய ராஜக்ஷ. இலங்கை இராணுவத்தில் அதிகாரியாகவும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் பதவி வகித்த அவர், பாரம்பரிய அரசியல் பின்புலத்தைக் கொண்டவர்.

ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரான அமரர் டி. ஏ. ராஜபக்ஷவின் புதல்வரான அவர், அரசியல் அனுபவங்களில் ஊறித் திளைத்தவர். எனவே, நீண்ட கால அரசியல் அனுபவத்தைக் கொண்டவராக அவர் விளங்குகின்றார்.

எமது நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில், அவர் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கிறார். பொருளாதாரம், இனப்பிரச்சினைத் தீர்வு, வேலைவாய்ப்பின்மை, தேசிய பாதுகாப்பு, அடிப்படைவாதம் என்றெல்லாம் சிக்கல் மிகுந்த பெரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பை கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுள்ளார். இவை அத்தனைக்கும் மேலாக நாட்டில் வாழும் இனங்களுக்கிடையே நிரந்தர ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்கான வழிவகைகளும் காணப்படவேண்டும்.

புகழ்பூத்த அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி பதவிக் கலத்தில் இவற்றுக்கெல்லாம் சுமுகமான தீர்வைக் கண்டு, சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமென்பதே எமது விருப்பம். ஜனாதிபதி கோட்டாபயவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!


Add new comment

Or log in with...