Saturday, April 20, 2024
Home » புதிய சிறுவர் பாதுகாப்பு சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

புதிய சிறுவர் பாதுகாப்பு சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

- இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 10 முடிவுகள்

by Prashahini
February 20, 2024 2:24 pm 0 comment

– இலங்கை – இந்திய கடல் வழியான பயணிகள் போக்குவரத்து
– பொது அரங்கேற்றல் வகைப்படுத்தல் சபையை ஸ்தாபித்தல்

சிறுவர் உரிமைகள் தொடர்பான இணைந்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (19) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 15 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலத்தில் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களால் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் நல்லாரோக்கியத்தை உறுதிப்படுத்துவதில் சவால்கள் நிலவுகின்றன. குறிப்பாக பிள்ளைகள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்தல், பிள்ளைகளைப் பல்வேறு துஷ்பிரயோகச் செயல்களில் ஈடுபடுத்தல் போன்ற அவர்களின் உரிமைகளை அனுபவிப்பதற்கான வாய்ப்புக்கள் இழக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகமாக அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் இலங்கைப் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் நம்பகமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தற்போது காணப்படுகின்ற சட்ட ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக சர்வதேச சிறுவர் சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்ற வகையில் இணைந்த சட்டமொன்றைத் தயாரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

“எதிர்வரும் 25 ஆண்டுகள்” எனும் பெயரிலான 2023.01.09 திகதி அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் “சிறுவர் பாதுகாப்பு சட்டம்” எனும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, சிறுவர் உரிமைகள் தொடர்பான இணைந்த சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. இலங்கைக்கும் – இந்தியாவுக்கும் இடையிலான கடல் வழியான பயணிகள் போக்குவரத்தை ஊக்குவித்தல்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடல்வழிப் பயணிகள் போக்குவரத்தை ஊக்குவிப்பதன் மூலம் இருநாடுகளுக்கிடையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அணுகக்கூடிய இயலுமையை அதிகமாக வழங்கி சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல், மேம்படுத்தப்பட்ட தொடர்புகள் மூலம் கலாச்சார பரிமாற்றங்கள், கல்வி, சமய, கலாச்சார செயற்பாடுகள், கலை, விளையாட்டு போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்களை ஊக்குவிப்பதற்கு இயலுமை உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்காக குறைந்த செலவிலான சுற்றுலா மற்றும் போக்குவரத்துக் கட்டண முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளதுடன், அதற்கமைய பயணிகள் போக்குவரத்துப் படகுகள் மற்றும் கப்பல்கள் மூலம் இலங்கையிலிருந்து வெளியேறிச் செல்லும் பயணிகளிடமிருந்து தற்போது அறிவிடப்படும் வெளிச்செல்லல் வரி முறையே 05 அமெரிக்க டொலர்கள் மற்றும் 20 அமெரிக்க டொலர்களாகக் குறைப்பதற்கும், படகுப் பயணி ஒருவருக்கு 60 கிலோகிராம் வரையான பயணப் பொதிக் கட்டணத்தை இலவசமாக வழங்குவதற்கும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. ஸ்ரீ நாராயண குரு சுவாமியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆச்சிரமமொன்றை நிர்மாணிப்பதற்காக காணித்துண்டொன்றை நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கல்

ஸ்ரீ நாராயண குரு சுவாமியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்தியாவின் நிதியுதவியுடன் ஆச்சிரமமொன்றை நிர்மாணிப்பதற்காக நுவரெலியா மாவட்டத்தில் காணித்துண்டொன்றை வழங்குமாறு ஸ்ரீ நாராயண தர்ம சங்கத்தின் கொழும்பு நம்பிக்கைப் பொறுப்பு கோரிக்கை சமர்ப்பித்துள்ளது. அதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான ரம்பொடவத்த எனும் பெயரிலான காணியின் 06 ஏக்கர் 02 றூட் அளவிலான காணித்துண்டு அடையாளங் காணப்பட்டுள்ளது.

குறித்த காணித்துண்டை 30 வருடங்கள் நீண்டகால குத்தகையின் அடிப்படையில் ஸ்ரீ நாராயண தர்ம சங்கத்தின் கொழும்பு நம்பிக்கைப் பொறுப்புக்கு வழங்குவதற்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. இலங்கையில் தொலைகடல் காற்று ஆற்றல் வளத்தைப் பயன்படுத்துதல்

உலக வங்கியின் ஆலோசனைக்கமைய அண்மையில் தொலைகடல் காற்றாலை மின்னுற்பத்தி அபிவிருத்தி தொடர்பான சாத்தியவளக் கற்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த கற்கையின் விளைவாக வடக்கு, மேற்கு மற்றும் தென்கிழக்கு பிரதேசங்களில் பாரியளவிலான கடல் காற்றாலை (Offshore wind power) மூலம் மின்னுற்பத்திக்கு அதிக ஆற்றல்வளத்துடன் கூடிய பிரதேசமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டில் பாரியளவில் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் பேரண்டப் பொருளாதார விருத்தியை ஏற்படுத்தி தனியார் துறையின் முதலீடுகள் மூலம் இலங்கை தொலைகடல் காற்று ஆற்றல்வளங்களை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. இந்து சமுத்திரத்தின் எல்லை நாடுகளின் ஒன்றியம் (Indian Ocean Rim Association) 2024 ஆண்டின் IORA தினத்தைக் கொண்டாடுதல்

“எதிர்கால சந்ததியினருக்கு பேண்தகு இந்து சமுத்திரம்” எனும் தொனிப்பொருளின் கீழ் இந்து சமுத்திரத்தின் எல்லை நாடுகளின் ஒன்றியம் (Indian Ocean Rim Association) 2024 ஆண்டின் IORA தின வைபவம் இலங்கையின் தலைமையில் 2024.03.10 அன்று காலிமுகத்திடலில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளமை மற்றும் உறுப்பு நாடுகளின் இராஜதந்திர தூதுக்குழு, உரையாடல் ஒப்பந்த அரசுகள், கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், அத்துடன் நாடளாவிய ரீதியில் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி பாடசாலை மாணவர்கள் அதிகளவில் பங்குபற்றவுள்ளனர். குறித்த வைபவத்தை நடாத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைக் குறிப்பிட்டு வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த தகவல்களை அமைச்சரவை கருத்தில் கொண்டுள்ளது.

06. இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கனிஷ்ட தரத்திலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சீருடை மற்றும் பொலிஸ் சார்ஜன்ட்ஃபொலிஸ் கொன்ஸ்டபள் உத்தியோகத்தர்களுக்கான பாதணிகள் விநியோகத்திற்கான பெறுகை

இலங்கை பொலிசு திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கனிஷ்ட தரத்திலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சீருடை விநியோகத்திற்கு 732,000 மீற்றர் துணி மற்றும் பொலிஸ் சார்ஜன்ட்ஃபொலிஸ் கான்ஸ்டபள் உத்தியோகத்தர்களுக்கான 70,000 சோடி தோல் பாதணிகள் 2024 ஆம் ஆண்டுக்கான தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை பொலிஸிற்கு 2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி தேசிய போட்டி விலைமுறிச் செயன்முறையைக் கடைப்பிடித்து குறித்த சீருடைத்துணி மற்றும் பாதணிகள் தொகைக்கான பெறுகைக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. ஒருசில நீதிமன்றங்களில் சட்ட உரைகள் மற்றும் அறிக்கைகளை ஆங்கில மொழியில் பேணிச் செல்லல்

வணிக ரீதியான பணிகள் தொடர்பான விடயத் தலைப்புக்களுக்கான விடயங்கள், சட்ட விடயப்பரப்பில் பிரதானமாக ஆங்கில மொழி பயன்படுத்தப்படுவதுடன், அவ்வாறான விடயங்கள் சிங்கள மொழியில் மொழிபெயர்ப்பு செய்யும் போது குறிப்பிடத்தக்களவு செலவும் காலமும் எடுக்கின்றது. அதனால் வணிக ரீதியான பிணக்குகளுக்கு இணக்கம் காண்பதற்கு நீண்டகாலம் நேரிடுவதால், முதலீட்டாளர்களை கவர்ந்திழுப்பதில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. இந்நிலைமையானது நாட்டில் வணிகங்களை மேற்கொண்டு செல்வதற்கான இலகுதன்மையில் (Ease of Doing Business) இலங்கை கீழ்மட்டத்தில் காணப்படுவதற்குக் காரணமாக அமைகின்றது.

இந்நிலைமைக்குத் தீர்வாக அடையாளங் காணப்பட்ட நீதிமன்றங்களில் அனைத்துப் பணிகளும் அல்லது திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ள அறிக்கைகள் மற்றும் சட்ட உரைகளில் ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குவதற்கான கட்டளைகள் அரசியலமைப்பின் 24(4) உறுப்புரையின் பிரகாரம் அமைச்சரவை அங்கீகாரத்திற்கமைய நீதி அமைச்சர் அவர்கள் வெளியிடுவது பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. ஆயுள்வேத சட்டக்கோவைக்கான (Ayurveda Code) அமைச்சரவை அங்கீகாரம் பெறல்

2023 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க ஆயுள்வேத (திருத்தச்) சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுள்வேத சட்டத்தின் 77 ஆம் பிரிவின் பிரகாரம் ஆயுள்வேத கோவை நிர்ணயிக்கப்பட்டு கட்டளைகள் தாயாரிக்கப்பட வேண்டியுள்ளது.

அதற்கமைய, சட்டத்தின் நோக்கங்களை அடைந்து பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு இயலுமாகும் வகையிலும், சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் சுதேச மருத்துவ துறையின் மேம்பாட்டுக்காக சட்ட ஏற்பாடுகளுக்கமைய, ஆயுள்வேத சட்டக்கோவை வரைவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சட்டவரைஞரால் குறித்த சட்டமூலம் பரிசீலிக்கப்பட்டு தொழிநுட்ப உள்ளடக்கங்கள் தவிர்ந்த ஏனைய விடயங்கள் சரியானவையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆயுள்வேத கோவை சட்டமூலத்தை வெளியிடுவதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. உத்தேச இந்திய – இலங்கை பொருளாதார ஒத்துழைப்புக்கள் மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்புக்கள் ஒப்பந்தம் (ETCA) தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சமகால நிலைமை

உத்தேச இந்திய – இலங்கை பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்புக்கள் (ETCA) ஒப்பந்தத்தின் 13 ஆம் சுற்றுப் பேச்சுவார்த்தை 2024.01.08 தொடக்கம் 10 நாட்கள் வரை புதுடில்லியல் இடம்பெற்றது. அதில்,“பண்டங்கள் வியாபாரம்”,“முன்னுரை, பொதுவான ஏற்பாடுகள் மற்றும் பொதுவான விதிவிலக்குகள்”,“சேவைகள் வியாபாரம்”,“ஒழுங்குவிதி ஆதாரம்”,“சுங்க நடவடிக்கை முறைகள் மற்றும் வர்த்தக இலகுபடுத்தல்கள்”,“சுகாதாரம் மற்றும் தாவரக் காப்பு தொடர்பான அளவுகோல்கள்”,“வர்த்தகத்தின் போதான தொழிநுட்ப ரீதியான தடைகள்”,“வர்த்தக ஒப்பந்தம்” மற்றும் “பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்புக்கள்” போன்ற ஒன்பது உபகுழுப் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் முரண்பாட்டு தீர்வு மற்றும் இறுதி ஏற்பாடுகள் தொடர்பான உபகுழு புதுடில்லியில் குறித்த அத்தியாயங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உத்தேச ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் 14 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை 2024 மார்ச் மாதம் முதலாம் வாரம் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. உத்தேச இந்திய – இலங்கை பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்புக்கள் ஒப்பந்தத்தின் (ETCA) சமகால நிலைமை தொடர்பாக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. 1912 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க பொது அரங்கேற்றல் கட்டளைச் சட்டத்தை இரத்துச் செய்து பொது அரங்கேற்றல் வகைப்படுத்தல் சபையை தாபிப்பதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்தல்

பொது அரங்கேற்றல் தொடர்பாக தற்போது காணப்படுகின்ற 1912 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க பொது அரங்கேற்றல் கட்டளைச் சட்டம் அமுலில் உள்ளதுடன், சர்வதேச போக்குகள் மற்றும் தரநியமங்களுக்கு ஏற்ற வகையிலும் படைப்புக்களின் சுதந்திரம் முழுமையாகப் பாதுகாக்கப்படும் வகையில், இலங்கைச் சமூகத்திற்குப் பொருத்தமான சட்டம் ஒழுங்குகளை அறிமுகப்படுத்துவதற்காக, புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்காக பொது அரங்கேற்றல் சபையின் முன்னாள்; தவிசாளர் சமன் அதாவுத ஹெட்டி அவர்பளின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவால் புதிய சட்டமூலததிற்கான அடிப்படை வரைபொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 1912 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க பொது அரங்கேற்றல் கட்டளைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கும், பொது அரங்கேற்றல் வகைப்படுத்தல் சபை எனும் பெயரில் புதிய சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி , வெகுசன ஊடக அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT