பா.ஜ.க.வில் இணைந்த 15 எம்.எல்.ஏக்கள் | தினகரன்


பா.ஜ.க.வில் இணைந்த 15 எம்.எல்.ஏக்கள்

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் 15 பேர் முதலமைச்சர் எடியூரப்பா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தனர்.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியின் போது, கொறடா உத்தரவை மீறியதாக இரண்டு கட்சிகளையும் சேர்ந்த 17 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். மேலும் அவர்கள் 17 பேரும் 2023 வரை தேர்தல்களில் போட்டியிடவும் தடை விதித்தார்.

இதில் 14 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்கள். சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கில் நேற்றுமுன்தினம் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் எனத் தீர்ப்பளித்தது. அதேசமயம் அவர்கள் 17 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என அனுமதி அளித்தது.

அதன் பின்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள், பா.ஜ.கவில் இணைய உள்ளதாக கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்தார். அதன்படி நேற்று எடியூரப்பா முன்னிலையில் 15 பேர் பா.ஜ.கவில் இணைந்தனர்.

விடுபட்டவர்களில் ஒருவரான எம்.டி.பி. நாகராஜ் ஏற்கனவே பா.ஜ.கவில் உள்ளார்.

மற்றொருவரான பெய்க், நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அவர் மீது ஊழல் வழக்கு மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்படுவதால், நிகழ்ச்சிக்கு வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, சட்டசபையில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ம் திகதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.


Add new comment

Or log in with...