இடைக்கால ஜனாதிபதிக்கு எதிராக பொலிவியாவில் மீண்டும் ஆர்ப்பாட்டம் | தினகரன்


இடைக்கால ஜனாதிபதிக்கு எதிராக பொலிவியாவில் மீண்டும் ஆர்ப்பாட்டம்

பொலிவியாவில் புதிய இடைக்கால ஜனாதிபதிக்கு எதிர்ப்பு வெளியிட்டு பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி எவோ மொராலஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் மோதல்களில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் அதிகார இடைவெளிக்கு மத்தியில் எதிர்க் கட்சி செனட்டரான ஜீனினே அனேஸ் இடைக்கால ஜனாதிபதியாக பதவி ஏற்றதோடு விரைவில் தேர்தல் நடத்துவதாக உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் மொராலஸ் ஆரவாளர்களுக்கும் கலகமடக்கும் பொலிஸார் இடையே மோதல் ஏற்பட்டதோடு அனேசியின் நியமனத்தை மொராலஸ் ஆதரவு எம்.பிக்கள் சட்டரீதியாக எதிர்த்து வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த மொராலஸ் மெக்சிகோவில் தஞ்சமடைந்துள்ளார்.

அண்மையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மொராலஸ் வெற்றி பெற்றபோதும் அவர் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி பல வாரங்கள் ஆர்ப்பாட்டங்கள் நீடித்த நிலையிலேயே அவர் பதவியை இராஜினாமா செய்தார். மேலும் இரத்தம் சிந்துவதை தவிர்ப்பதற்கே தாம் பதவி விலகியதாக அவர் அறிவித்தார்.

இடைக்கால ஜனாதிபதியாக அனேசின் நியமனத்திற்கு பொலிவிய அரசியலமைப்பு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் அனேசின் நியமனத்திற்கு எதிராக தலைநகர் லா பாஸில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு பேரணியாகச் சென்ற மொராலஸ் ஆதரவாளர்களை கலைக்க கலகமடக்கும் பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டனர்.

நாட்டின் ஏனைய பகுதிகளிம் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.


Add new comment

Or log in with...