அவுஸ்திரேலிய காட்டுத் தீ: உயிரிழப்பு நான்காக உயர்வு | தினகரன்


அவுஸ்திரேலிய காட்டுத் தீ: உயிரிழப்பு நான்காக உயர்வு

அவுஸ்திரேலியாவில் எரிந்துவரும் காட்டுத்தீக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தக் காட்டுத்தீயால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது நான்காக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் கெம்ப்ஸி நகரில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய பொலிஸ் தெரிவித்தது. அவர் 58 வயது மதிக்கத்தக்க நபர் என்று நம்பப்படுகிறது.

வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீயால் குவீன்ஸ்லாந்து மாநிலத்திலிருந்து வெளியேறும்படி குடியிருப்பாளர்களுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் உத்தரவிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

நியூ சவுத் வேல்ஸ், குவீன்ஸ்லாந்து ஆகிய இரு மாநிலங்களிலும் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து எரிந்துகொண்டிருக்கும் காட்டுத் தீ வார இறுதியில் மோசமடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை 170க்கும் அதிகமான வீடுகள் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாய்த் தெரிவிக்கப்பட்டது.

போதுமான மழை பெய்து நிலைமையை மாற்றுவதற்கான அறிகுறிகள் இப்போதைக்கு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...