செட்டிக்குளம் பி.சபை நடவடிக்கையில் கூட்டமைப்பு வெளிநடப்பு | தினகரன்


செட்டிக்குளம் பி.சபை நடவடிக்கையில் கூட்டமைப்பு வெளிநடப்பு

வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சபை நடவடிக்கையில் இருந்து நேற்றைய தினம் வெளிநடப்பு செய்துள்ளனர். 

செட்டிகுளம் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று காலை தவிசாளர் ஆ.அந்தோணி தலைமையில் இடம்பெற்றது. 

இதன்போது கூட்டமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் சுப்பையா ஜெகதீஸ்வரன் கருத்து தெரிவித்திருந்தார். 

அவர் தனது வட்டாரத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக கருத்து கூற முற்பட்டபோது தவிசாளர் அதனை தடுத்து நிறுத்தியதால் அவர் வெளியேறியுள்ளார். அவரை தொடர்ந்து ஏனைய கூட்டமைப்பின் நான்கு உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்து சபை நடவடிக்கையை முற்றாக புறக்கணித்தனர். 

இவ் விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ்கூட்டமைப்பின் உறுப்பினர்கள்,  

தனது வட்டாரத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாக சிரேஸ்ட உறுப்பினர் ஜெகதீஸ்வரன் சபையில் கருத்து தெரிவிக்க முற்பட்டபோது சபையின் தவிசாளர் அதனை தடுத்திருந்தார். தனது கருத்தினை தெரிவிப்பதற்கு மீண்டும் அவர் சந்தர்ப்பத்தினை கோரிய போதும் அது வழங்கப்படாத நிலையில் அவர் சபையிலிருந்து வெளியேறினார். 

இதற்கு முன்பு இடம்பெற்ற கூட்டங்களில் இவ்வாறான கட்டுப்பாடுகளோ, நடைமுறையோ இருக்கவில்லை. இன்று அந்த அனுமதி வழங்காமைக்கான காரணத்தை சக உறுப்பினர்கள் கேட்டபோது. அதனை இந்த நேரத்தில் கூற முடியாது. மேலதிக நேரத்தில் கேட்குமாறு கூறி எம்மையும் தடுத்ததால். சபையின் போக்கு தவறான நிலையில் காணப்படுவதுடன், நீங்கள் எங்களை பழிவாங்கும் நோக்குடன் செயற்படுகின்றீர்கள் என தெரிவித்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தோம். 

செட்டிகுளம் பிரதேச சபையினை சுதந்திரகட்சி ஆட்சி அமைந்திருந்த போதும், போதுமான அபிவிருத்திகள் நடைபெறாத நிலையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றது.

எமது நோக்கம் வெளிநடப்பு செய்து சபையை குழப்புவதல்ல. எமது கருத்துக்களிற்கு மதிப்பழிக்க வேண்டும்.

எம்மை ஓரங்கட்டி தங்களுக்கு சாதகமாக சபையை நடாத்த முனைந்தால் எம்மால் ஒத்துழைப்பு வழங்க முடியாது. இதனால் எமக்கும் அவப்பெயர் ஏற்படுவதுடன் சபை சரியாக 

இயங்குகின்றதா என்ற கேள்வியும் மக்களிடத்தில் ஏற்படுகின்றது என்று தெரிவித்தனர்.

வவுனியா விசேட நிருபர் 

 


Add new comment

Or log in with...