சேவைக்காலம் முடியும் வரை பணியாற்றலாம் | தினகரன்


சேவைக்காலம் முடியும் வரை பணியாற்றலாம்

தோட்ட வைத்திய சேவையை தேசிய வைத்திய முறைமைக்குள் உள்வாங்கப்படுவதற்கான சகல ஏற்பாடுகளும்  பூர்த்தி செய்யப்பட்டுவிட்டன. எனினும் இந்த மாற்றத்தின் பின்னரும் தமது  சேவைக்காலம் முடியும் வரை தோட்ட மருத்துவ உதவியாளர்கள் பணியாற்ற முடியுமென தமிழ் முற்போக்கு  கூட்டணியின்    நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜா  தெரிவித்தார். தோட்ட மருத்துவ உதவியாளர்கள் சங்கத்தினரினால் திலகர்  எம்பிக்கான பாராட்டு விழா அண்மையில் ஹற்றன் சீடா வள நிலையத்தில்  சங்கத்தின் தலைவர் கே.  சண்முகராஜா தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த நாட்டில் ஏனைய மக்களில் இருந்து பல துறைகளிலும், சேவையிலும்  மலையக மக்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளமையே அவர்களின் வாழ்க்கைத்தரம்  பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு காரணம். நாட்டில் ஏனைய  சமூகத்தினருக்கு இலவச கல்வி கிடைத்து 40வருடங்களுக்கு பின்னரே மலையக  மக்களுக்கு கிடைத்தது. அதேநேரம் தேசிய இலவச சுகாதாரம் முறைமை இன்னும்  முழுமையாக மலையக மக்களுக்கு கிடைக்கவில்லை.

கடந்த காலத்தில் மருத்துவ  உதவியாளர்களை  அரச மருத்துவ சேவைக்குள் உள்வாங்குவதற்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டாலும் அவை வெற்றியளிக்கவில்லை.  கடந்த 2006  ஆம் ஆண்டு அதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போதும் இன்று அந்த  பத்திரத்தைக் காணவில்லை.  450தோட்ட வைத்திய  நிலையங்கள் பெருந்தோட்ட  தனியார் கம்பனிகளுக்கு கீழ்  இயங்கி வருகின்றன. இவற்றுக்கு ஒரு சில மருந்துப் பொருட்களை வழங்குவது தவிர  அரசாங்கம் எந்த பொறுப்பையும் ஏற்பதில்லை.

எனவே தோட்ட சுகாதார முறைமையை அரச சுகாதார முறைமைக்குள்  முழுமையாக உள்வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன்.

இதன் இறுதி அறிக்கையை கடந்த 23 ஆம் திகதி தயாரித்து  அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க ஏற்றதாக சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளோம்.  ஏற்கனவே அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பத்திரம் எமது குழுவின்  அறிக்கையுடன் விரைவில் இறுதி வடிவம் பெறும்.  அதேநேரம் ஏனைய சமூகத்தினரிடம் இருந்து  பாரபட்சமான அந்த முறைமையை மாற்றும் செயன்முறையில் உறுதியாக இருந்தேன்.  பாராளுமன்ற குழு கலந்துரையாடல்களில் தோட்ட மருத்துவ உதவியாளர்கள்  சங்கத்தினரையும் ஒரு அங்கமாக உள்வாங்கி அவர்களுக்கு உரிய கௌரவம் வழங்கி  அவர்களது சேவைக்காலம் முடியும் வரை இந்த சேவையில் பணியாற்ற  உறுதிப்பாட்டை ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...